தண்டந்தோட்டத்தில்... இரட்டை பைரவர்கள்! 

தண்டந்தோட்டத்தில்... இரட்டை பைரவர்கள்! 
Updated on
1 min read

கும்பகோணத்துக்கு அருகில் உள்ளது தண்டந்தோட்டம். சின்னஞ்சிறிய கிராமம் இது. இங்கே அழகிய கோயிலில் அற்புதமாகக் குடிகொண்டிருக்கிறார் சிவனார். இங்கே சிவனாரின் திருநாமம் நடனபுரீஸ்வரர்.


கும்பகோணத்துக்கு அருகில், திருநாகேஸ்வரம், ஒப்பிலியப்பன் கோயில், அய்யாவாடி பிரத்தியங்கிரா முதலான கோயில்கள் உள்ளன. இந்தக் கோயில்களுக்கு அருகில் உள்ள கிராமம்தான் தண்டந்தோட்டம். இங்குதான் நடனபுரீஸ்வரர் அருள்பாலிக்கிறார்.


அரசலாற்றங்கரையில் அமைந்த திருக்கோயில் இது. அம்மையப்பனின் திருமணக் கோலத்தைத் தரிசிக்க ஆவல் கொண்டார் அகத்தியர் பெருமான். அகத்திய மாமுனிக்கு அப்படியே ரிஷபாரூடராக தரிசனம் தந்தார் ஈசன். அவர், இங்கு வந்து, சிவலிங்கப் பிரதிஷ்டை செய்து, அனுதினமும் வழிபட்டுத் தவமிருந்தார். அந்த சிவலிங்கம் நடனபுரீஸ்வரர் கோயிலுக்கு அருகிலேயே உள்ளது.


இதனால், திருமணக்கோலத்தில் சிவனார் காட்சி தந்த தலம் என்பதால், திருமணஞ்சேரி உள்ளிட்ட தலம் போலவே, இதுவும் கல்யாண வரம் தந்தருளும் தலம் என்கிறார்கள் பக்தர்கள். இதேபோல் சிவனாரின் திருநாமம் நடனபுரீஸ்வரர் எனும் திருநாமம் கொண்டு கோயில் கொண்டிருப்பதால், இந்தத் தலமும் சிதம்பரம் தலத்துக்கு நிகரான தலம் என்று போற்றப்படுகிறது.


சிவனாரின் திருநாமம் நடனபுரீஸ்வரர். அம்பாளின் திருநாமம் சிவகாமி அம்பாள்.


சேர, சோழ, பாண்டிய, பல்லவ மன்னர்கள் வழிபட்ட திருக்கோயில் இது. இங்கே பல்லவர் காலத்து செப்பேடுகள் கண்டறியப்பட்டுள்ளன.


இங்கே உள்ள குரு தட்சிணாமூர்த்தியை, ராசி மண்டல குரு என்கிறார்கள். 12 ராசி மண்டலங்களுக்கு மேலே பீடமிட்டு அமர்ந்து அருள்பாலிக்கிறார் குரு தட்சிணாமூர்த்தி. இவரை மஞ்சள் வஸ்திரம் சார்த்தி வணங்கினால்,சகல தோஷங்களையும் போக்குவார், குருவருள் கிடைப்பது உறுதி என்கிறார் நடராஜ குருக்கள்.


இந்தத் தலத்தின் இன்னொரு விசேஷம்... பைரவர். இங்கே இரட்டை பைரவர்கள் தரிசனம் தருகிறார்கள். இரண்டு பைரவர்களையும் வணங்கி வந்தால், துஷ்ட சக்தியால் வரக்கூடிய கெடுதல்களையெல்லாம் தவிர்த்துக் காப்பார். தடைகள் அனைத்தும் பொடிப்பொடியாகும் என விவரிக்கிறார் நடராஜ குருக்கள்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in