

தேய்பிறை அஷ்டமியில் பைரவரை வழிபடுவோம். தெருநாய்களுக்கு உணவிடுவோம். கிரக தோஷங்கள் அனைத்தும் நிவர்த்தியாகும். தீய சக்திகள் அனைத்தும் விலகும்.
கலியுகத்துக்கு காலபைரவர் என்றொரு வாசகம் உண்டு. சிவாலயங்களில் காலபைரவருக்கு சந்நிதி அமைந்திருக்கும். பைரவர் சக்திவாய்ந்த தெய்வங்களில் ஒன்று.
அஷ்டமியில் எதுவும் செய்யக்கூடாது என்று சொல்லிக்கொண்டிருக்கிறோம். ஆனால் அஷ்டமிதான் பைரவரை வணங்குவதற்கு உரிய அற்புதமான நாள் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.
பைரவரை, தேய்பிறை அஷ்டமியில் வணங்குவதும் வழிபடுவதும் மகத்துவங்களைத் தந்தருளும் என்பது ஐதீகம். பைரவருக்கு மிளகு கலந்த அன்னம் நைவேத்தியம் செய்யலாம். அதேபோல், வடை நைவேத்தியம் செய்யலாம்.
அனுமனுக்கு வடைமாலை சார்த்துவது போல், காலபைரவருக்கும் வடைமாலை சார்த்தி வழிபடுவது கூடுதல் பலன்களைத் தரும் என்கிறார்கள் சிவாச்சார்யர்கள்.
கஷ்டமெல்லாம் தீர்க்கும் கால பைரவருக்கான நாள் இன்று. தேய்பிறை அஷ்டமி. இந்தநாளில் பைரவரை வணங்குவோம்.
அதேபோல், சோமவாரம் என்று சொல்லப்படும் திங்கட்கிழமையும் அஷ்டமியும் இணைந்து வருவதும் வலிமை மிக்க நாளாக வலியுறுத்தப்படுகிறது. திங்கட்கிழமையும் தேய்பிறை அஷ்டமியும் இணைந்த நன்னாளில், காலபைரவரை வீட்டிலிருந்தே வழிபடுவோம்.
வீட்டில் விளக்கேற்றி, பைரவ வழிபாடு செய்வோம். பைரவர் துதி பாராயணம் செய்வோம். நம் குறைகளைச் சொல்லி வழிபடுவோம். எதிர்ப்புகளையும் எதிரிகளையும் செயலிழக்கச் செய்வார் பைரவர்.
பைரவரின் வாகனம் நாய். எனவே, பைரவரை நினைத்து, வேண்டிக்கொண்டு, அவரின் வாகனமான தெருநாய்களுக்கு உணவளிப்போம். இரண்டு பிஸ்கட் பாக்கெட்டுகளை வாங்கி, தெருவோரம் சுற்றித் திரியும் நாய்களுக்கு பிஸ்கட் வழங்குவோம். மனதில் உள்ள பயத்தைப் போக்கி அருளுவார் பைரவர். கிரக தோஷங்கள் அனைத்தையும் விலக்கி அருளுவார்.
தேய்பிறை அஷ்டமியான இந்தநாளில், பைரவரை வணங்குவோம்.