அறநிலையத் துறையில் உயர்நிலை ஆலோசனைக் குழுவை ஏற்படுத்துக: மயிலாடுதுறை ஆன்மிகப் பேரவை அரசுக்குக் கடிதம்
தமிழகத்தின் பிரதான மடங்களின் ஆதினகர்த்தர்களை உறுப்பினர்களாகக் கொண்டு இந்து சமய அறநிலையத் துறையின் உயர்நிலை ஆலோசனைக் குழுவை ஏற்படுத்த வேண்டும் என்று மயிலாடுதுறை ஆன்மிகப் பேரவை சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பேரவை சார்பில் தமிழக அரசுக்கு எழுதப்பட்டுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது;
"இந்துசமய அறநிலையத்துறை சட்டம் பிரிவு 7(1)-ன்கீழ் உயர்நிலை ஆலோசனைக் குழு ஒன்றை அமைக்க வழிவகை உள்ளது. இந்த உயர்நிலை ஆலோசனைக் குழுவில் முதல்வர் தலைவராகவும், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் துணைத் தலைவராகவும், துறைச் செயலாளர் உறுப்பினராகவும், ஆணையர் உறுப்பினர் செயலாளராகவும், 12 உறுப்பினர்கள் அலுவல் சாரா உறுப்பினர்களாக நியமனம் செய்யவும் சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இந்த உயர் நிலை ஆலோசனைக் குழுவின் நோக்கமே அரசுக்கு இந்து சமய அறநிலைத்துறை சம்பந்தமான பிரச்சினைகளில் ஆலோசனை கூறுவதுதான். அந்த ஆலோசனையை ஏற்று அரசு செயல்பட வேண்டும் என்பது நியதி ஆகும்.
இந்தக் குழுவானது கடைசியாக ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது 2012-ல் அமைக்கப்பட்டது. அப்போது, அலுவல் சாரா உறுப்பினர்களாக திருவாடுதுறை ஆதீன கர்த்தர், திருப்பனந்தாள் காசி மடத்து அதிபர், வானமாமலை ஜீயர் மடத்தின் சுவாமிகள், ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் சுவாமிகள் ஆகியோரோடு மதுரையைச் சேர்ந்த கருமுத்து கண்ணன், நந்தகோபால், சென்னை தேவகி முத்தையா, ராஜபாளையம் ராமசுப்பிரமணிய ராஜா, மணப்பாக்கம் காமராஜ் மற்றும் விஜயகுமார் ரெட்டி ஆகிய பத்துப் பேர் நியமனம் செய்யப்பட்டு இருந்தார்கள்.
இந்தக் குழு ஒரே ஒருமுறை கூடி உள்ளது. அதன்பிறகு, உயர்நிலை ஆலோசனைக் குழு கூட்டம் கூட்டப்படவில்லை. இந்து சமய அறநிலையத்துறை சட்டத்தின்படி, இந்த உயர் நிலை ஆலோசனைக் குழுவின் காலம் மூன்று ஆண்டுகள் ஆகும். தற்போது பல ஆண்டுகளாகியும் இந்த உயர் நிலை ஆலோசனைக் குழு மாற்றி அமைக்கப்படவில்லை.
தற்போது கரோனா பொதுமுடக்கம் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் தமிழகத்தில் திருக்கோயில்கள் நடை சாத்தப்பட்டு பக்தர்கள் வழிபட அனுமதி இல்லை. ஜூலை மாதம் முதல் கிராமத்தில் உள்ள சிறிய கோயில்களில் பக்தர்கள் வழிபட அனுமதிக்கப்பட்டார்கள். இந்தச் சூழ்நிலையில் தற்போது கரோனா வைரஸ் தமிழகத்தில் உச்சத்தை நெருங்கிக் கொண்டிருக்கக்கூடிய வேளையில், உயர்நிலை ஆலோசனைக் குழுவின் பங்கு மிகவும் முக்கியமானதாகும்.
தற்போதுள்ள சூழலில் உயர்நிலை ஆலோசனைக் குழுவில் தமிழகத்தின் பிரதான மடங்களாய் விளங்கும் திருவாவடுதுறை ஆதீனம், தருமபுர ஆதீனம், மதுரை ஆதீனம், திருப்பனந்தாள் காசி மடம், வேளாக்குறிச்சி ஆதீனம், செங்கோல் ஆதீனம், வானமாமலை ஜீயர் மடம், ஸ்ரீரங்கம் ஜீயர் மடம் ஆகியவற்றின் ஆதீனகர்த்தர்கள் உயர்நிலை ஆலோசனைக் குழுவில் இடம்பெற வேண்டும்.
இந்த ஆலோசனைக் குழுவில் தொழிலதிபர்கள் ஆலோசனை கூறுவதற்கான அவசியமில்லை என்பதால் அவர்கள் சார்பாக ஒருவரோ அல்லது இருவரோ நியமித்தால் போதுமானதாகும். ஆன்மிகப் பெரியவர்களின் ஆலோசனையே தற்பொழுது தேவைப்படுகிறது.
ஆகையினால் இதைக் கருத்தில் கொண்டு தமிழக அரசு உடனடியாக உயர் நிலை ஆலோசனைக் குழுவை நியமனம் செய்து, குழுவின் கூட்டத்தை நடத்தி, அவர்களின் ஆலோசனையை ஏற்று தமிழகத்தில் இந்து சமய அறநிலையத் துறையை வழிநடத்த வேண்டும்".
இவ்வாறு அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
