Last Updated : 12 Jul, 2020 09:25 AM

 

Published : 12 Jul 2020 09:25 AM
Last Updated : 12 Jul 2020 09:25 AM

தேக பலமும் மனோபலமும் தரும் சூரிய நமஸ்காரம்! 

நவக்கிரகங்களில், ஆண்மை கிரகம் என்று போற்றப்படுவது சூரியன். ஆண்மைக்கு உண்டான ஆற்றலையும் உத்வேகத்தையும் உற்சாகத்தையும் வழங்கக் கூடியவர் சூரிய பகவான் என்கிறது சாஸ்திரம். குழந்தை பாக்கியம், தேக ஆரோக்கியம், மனக்குழப்பத்தில் இருந்து விடுதலை, அனைத்துக் கிரக தோஷங்களைப் போக்கும் வல்லமை முதலானவற்றை அளிக்கக் கூடியவர் சூரிய பகவான் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

அதனால்தான், தினமும் சூரிய பகவானை வணங்கவேண்டும் என்கிறார்கள். சூரிய நமஸ்காரம் செய்யவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.
சூரிய பகவானைக் கொண்டாடுவதற்கும் பண்டிகை உண்டு. தினந்தோறும் வழிபடுகிற சூரியனாரை, சங்கராந்தி எனும் பண்டிகையாக, தைத் திருநாளில் கொண்டாடுகிறோம்.

இயற்கையை வணங்கச் சொல்லியிருக்கிறது சாஸ்திரம். அந்த இயற்கைக்கெல்லாம் அரசனைப் போல் திகழ்கிறார் சூரிய பகவான். ஞாயிறு என்று சூரிய பகவானுக்கு இன்னொரு திருநாமம் உண்டு.

அரிதினும் அரிதாக சூரியனாருக்கு சில ஆலயங்கள் மட்டுமே உள்ளன. ஆலயத்துக்குச் சென்று சூரியனாரை வழிபடுவது என்பது ஒருபக்கம் இருந்தாலும் தினமும் சூரியனாரை வணங்குங்கள். சூரிய பகவானுக்கு உண்டான காயத்ரி மந்திரத்தைச் சொல்லுங்கள். தேக பலமும் மனோபலமும் கூடும்.

ஓம் அஸ்வத்வஜாய விதமஹே
பாஸ அஸ்தாய தீமஹி
தந்நோ சூர்ய ப்ரசோதயாத்

அதாவது, குதிரையின் சின்னத்தைக் கொடியாகக் கொண்டவர், தன் திருக்கரங்கள் பாசத்துக்கு உரியவை. அந்தக் கரங்களால் உலகத்து மக்கள் அனைவரையும் ரட்சிப்பவர். அத்தனை பெருமைக்கு உரிய சூரியனாரை வணங்குகிறேன். அவரை நமஸ்கரித்து அவரின் திருப்பாதத்தை வணங்குகிறேன் என்று பொருள்.

சூரிய பகவானின் காய்த்ரீ மந்திரத்தை தினமும் சொல்லுவது விசேஷத்துக்குரியது. சூரியனாரை நமஸ்கரித்துவிட்டு, தினமும் 108 முறை ஜபித்தால், வாழ்க்கை நிலை உயரும். தடைப்பட்டு தள்ளிப் போய்க்கொண்டிருந்த பிள்ளை பாக்கியம் கிடைக்கப் பெறலாம்.

தொழிலில், உத்தியோகத்தில் தெளிவுடன் பணியாற்றக் கூடிய சூழல் உருவாகும். பொருள் சேர்க்கை நிகழும். கடன் தொல்லையில் இருந்து விடுபடலாம். தீய குணங்கள் அனைத்தும் விலகும். நல்ல குணங்கள் மனதில் தோன்றும். நல்ல வழியை நோக்கியே செயல்படச் செய்வார் சூரிய பகவான்.

தினமும் வணங்குவோம் சூரியனை. அனுதினமும் நமஸ்கரிப்போம் சூரியனை!

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x