ஸ்ரீரங்கம் ரங்கநாதர் திருக்கோயிலில் தாயார் ஜேஷ்டாபிஷேகம்

ஜேஷ்டாபிஷேகத்தையொட்டி காவிரி ஆற்றிலிருந்து கொண்டு வரப்பட்ட புனித நீர் தங்கக் குடத்தில் யானை மீது வைத்து தாயார் சன்னதிக்கு எடுத்து வரப்பட்டது.
ஜேஷ்டாபிஷேகத்தையொட்டி காவிரி ஆற்றிலிருந்து கொண்டு வரப்பட்ட புனித நீர் தங்கக் குடத்தில் யானை மீது வைத்து தாயார் சன்னதிக்கு எடுத்து வரப்பட்டது.
Updated on
1 min read

திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் திருக்கோயிலில் உள்ள ரங்கநாச்சியார் தாயாருக்கு இன்று ஜேஷ்டாபிஷேகம் நடைபெற்றது.

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில்ஆண்டுதோறும் ஆனி மாதம் ஜேஷ்டாபிஷேகம் எனப்படும் பெரிய திருமஞ்சனம் நடைபெறும். இந்த ஆண்டு ஜூலை 3-ம் தேதி தொடங்கி 2 நாட்கள் ரங்கநாதர், நம்பெருமாள் ஆகியோருக்கு ஜேஷ்டாபிஷேகம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து கோயிலில் உள்ள ரங்கநாச்சியார் தாயாருக்கு ஜேஷ்டாபிஷேகம் இன்று (ஜூலை 10) நடைபெற்றது.

இதையொட்டி, அம்மா மண்டபம் காவிரி படித்துறையிலிருந்து ஊரடங்கு காரணமாக தங்கக் குடத்துக்கு பதிலாக வெள்ளிக் குடங்களில் புனித நீரை சேகரித்து அதனை திருமஞ்சன ஊழியர்கள், சீமான்தாங்கிகள், நாச்சியார் பரிகளம் ஆகியோர் தோளில் சுமந்து கோயிலுக்கு எடுத்து வந்தனர்.

கோயிலின் ரங்கவிலாச மண்டபத்தில் வைத்து வெள்ளிக் குடங்களில் இருந்த புனித நீர் தங்கக் குடத்துக்கு மாற்றப்பட்டு, யானை மீது வைக்கப்பட்டு, மேள தாளங்கள் முழங்க தாயார் சன்னதிக்கு எடுத்து வரப்பட்டு, திருமஞ்சனம் நடைபெற்றது.

அங்கு மூலவர்கள் ஸ்ரீதேவி, பூதேவி மற்றும் உற்சவர் ரங்கநாச்சியார் ஆகியோரது திருமேனியில் உள்ள கவசங்கள், திருவாபரணங்கள் அனைத்தும் களையப்பட்டு, சிறு பழுதுகள் செப்பனிடப்பட்டு, தூய்மை செய்து மெருகூட்டப்பட்டன.

இதைத் தொடர்ந்து பாரம்பரிய முறையில் சந்தனம், சாம்பிராணி, அகில், வெட்டிவேர் உள்பட வாசனை திரவியங்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட தைலம் ஸ்ரீதேவி, பூதேவி திருமேனிகளில் பூசப்பட்டன.

ஜேஷ்டாபிஷேகத்துக்கான ஏற்பாடுகளை திருக்கோயில் இணை ஆணையர் பொன்.ஜெயராமன் தலைமையில் கோயில் ஊழியர்கள் செய்திருந்தனர்.

நாளை திருப்பாவாடை

தாயார் சன்னதியில் திருப்பாவாடை எனப்படும் பெரிய தளிகை நிகழ்ச்சி நாளை (ஜூலை 11) நடைபெறவுள்ளது. இதில் பெருமளவில் சாதம் பரப்பி வைக்கப்பட்டு அதில் நெய், பலாச்சுளை, மாம்பழம், வாழைப்பழம், தேங்காய் உள்ளிட்ட பல்வேறு பழவகைகள் கலந்து தாயாருக்கு நைவேத்தியம் செய்யப்படும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in