Last Updated : 07 Jul, 2020 05:17 PM

 

Published : 07 Jul 2020 05:17 PM
Last Updated : 07 Jul 2020 05:17 PM

வாஸ்து தோஷம் போக்கும் மூலை அனுமன்;  ஆஞ்சநேயர் கோயிலில் வேப்பமரம்! 

மராட்டிய மன்னர்கள் வழிபட்ட அனுமனை இன்றைக்கும் தரிசிக்கலாம். வாஸ்து தோஷத்தைப் போக்கும் அனுமன் இவர் என்று சொல்லி சிலாகிக்கிறார்கள் பக்தர்கள்.
அனுமன் பக்தர்களை சனி கிரகம் கூட தீண்டாது என்பார்கள். அந்த அளவுக்கு அனுமன் சக்திவாய்ந்தவராகச் சொல்லப்படுகிறது. அனுமன் வழிபாடு செய்யச் செய்ய மனோபலம் பெருகும், தடைகள் அனைத்தும் தவிடுபொடியாகும் என்பது ஐதீகம்.


தஞ்சையில் இப்படித்தான் தன்னை நாடி வருவோருக்கெல்லாம் அருளும்பொருளுமாக அள்ளி வழங்கிக் கொண்டிருக்கிறார் ஆஞ்சநேயர். தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது ஆஞ்சநேயர் திருக்கோயில். அதாவது, மேலவீதியும் வடக்கு ராஜவீதியும் இணையும் இடத்தில் கோயில் கொண்டிருக்கிறார் அனுமன்.


மேலவீதியும் வடக்கு ராஜவீதியும் இணையும் இந்த இடம், வடமேற்கு வாயுமூலை என்று சொல்கிறார்கள் ஆச்சார்யர்கள். வாயுவின் மைந்தன் அனுமன், வாயுமூலையில் கோயில் கொண்டு அருள்பாலிப்பது இன்னும் வீர்யம் மிக்கது என்று போற்றுகிறார்கள் ஆச்சார்யர்கள்.


தஞ்சை பெரியகோயிலில் இருந்து சுமார் அரை கிலோமீட்டர் தொலைவில் உள்ள அனுமன் கோயிலுக்கு நடந்தே சென்றுவிடலாம். வடமேற்கு வாயுமூலையில் நின்றபடி அருள்பாலிப்பதால், இந்த அனுமனை மூலை அனுமார் என்றும் மூலை அனுமார் கோயில் என்றும் சொல்கிறார்கள் பக்தர்கள். பிரதாப வீர அனுமன் என்றும் போற்றுகின்றனர்.


இதற்கு காரணமும் இருக்கிறது.


கி.பி.1739ம் ஆண்டு முதல் 1763ம் ஆண்டு வரை, தஞ்சை தேசத்தை மராட்டிய மன்னன் பிரதாபசிம்மன் ஆட்சி செய்து வந்தான். இந்த மன்னனின் காலத்தில் எழுப்பப்பட்ட ஆலயம்தான் மூலை அனுமன் கோயில் என்று சரித்திரக் குறிப்புகள் தெரிவிக்கின்றன.


வாயுமூலையில் அமைந்து தன்னை நாடிவரும் பக்தர்களை அரணெனக் காக்கும் வாயுமூலை அனுமன், வாஸ்து தோஷம் போக்குபவராகவும் திகழ்கிறார் என்கிறார்கள் ஆச்சார்யர்கள். தஞ்சை அரண்மனை தேவஸ்தானத்தின் நிர்வாகத்தின் கீழ் அமைந்துள்ளது இந்தக் கோயில்.


ஆலயத்தின் ஸ்தல விருட்சம் வேம்பு. அதாவது வேப்பமரம். அனுமனின் தலத்தில் வேம்பு தலவிருட்சமாக அமைந்திருப்பதும் விசேஷமான ஒன்று என்கிறது ஸ்தல வரலாறு. எனவே, அம்மன் கோயில்களுக்குச் சென்று வணங்குவதுபோல், செவ்வாய், வெள்ளிக்கிழமைகளிலும் இங்கு வந்து வேப்பமரத்தை பிரார்த்தித்துச் செல்கின்றனர். ஆகவே, செவ்வாய், வெள்ளியிலும், புதன் சனிக்கிழமைகளிலும் இந்தத் தலத்துக்கு வந்து அனுமனை வேண்டிக்கொள்கின்றனர்.


இதேபோல், அமாவாசை நாளில் இங்கு வந்து அனுமனைப் பிரார்த்தனை செய்தால், பித்ரு முதலான தோஷங்கள் அனைத்தும் விலகும் என்கிறார்கள் பக்தர்கள். அதேபோல், சனிக்கிழமைகளில் அனுமனுக்கு பாலபிஷேகம் செய்வது இங்கே ரொம்பவே விசேஷம். இப்போது, அனுமனுக்கு அபிஷேகத்துக்கு பால் மட்டும் வழங்கி வேண்டிக்கொள்கிறார்கள் பக்தர்கள்.


வேறு தலத்தில் தரிசிக்க முடியாத காட்சியாக, இங்கே உள்ள மூலை அனுமன், இடது காலை முன்னே வைத்து, வலது காலை லேசாக உயர்த்தியபடி அபய முத்திரையுடன் அற்புதமாக நம் குறைகளையும் கவலைகளையும் தீர்க்க ஓடி வரும் தோரணையில் காட்சி தருகிறார்.


மூலை அனுமனை நினைத்து வீட்டிலேயே விளக்கேற்றி வழிபடுங்கள். ஆலயத்தில், 18 தீபங்களேற்றி வழிபடுகிற பிரார்த்தனை சிறப்பு மிக்கது. புதன் மற்றும் சனிக்கிழமைகளிலும் அமாவாசை நாளிலும் மூல நட்சத்திர நாளிலும் வீட்டில் விளக்கேற்றுங்கள். மூலை அனுமனை நினைத்து வேண்டிக்கொள்ளுங்கள்.
ஆலயத்தில், அமாவாசையன்று அனுமனுக்கு சிறப்பு அலங்காரங்கள் நடைபெறும். ஆடி மாதத்தில் 1008 எலுமிச்சை கொண்டு அனுமனை அலங்கரிப்பது, காணக் கிடைக்காத தரிசனம்.


மூலை அனுமனை வீட்டில் இருந்தபடியே மனதார வேண்டுங்கள். வீட்டில் உள்ள அனுமன் திருவுருவப் படத்துக்கு வெற்றிலைமாலை சார்த்தி வேண்டிக்கொள்ளுங்கள். வாஸ்து முதலான தோஷம் அனைத்தும் விலகும். எதிர்ப்பையெல்லாம் இல்லாது செய்வார் மூலை அனுமன்!


FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x