

வெண்ணை திருடும் கண்ணன் சிலை, பழவேற்காட்டில் அமைந்துள்ள ஆதிநாராயணப் பெருமாள் கோவில் மண்டபத்தூணில் உள்ளது. இந்தக் கோவில் 13-ம் நூற்றாண்டைச் சேர்ந்ததென தொல்லியலாளர்கள் கூறுகின்றனர். செம்புரைக்கரல் / துருக்கல் (laterite / iron stone) கொண்டு எழுப்பப்பட்டுள்ளது இதன் சிறப்பாகும். தென்னிந்தியாவில் இந்தக்கல் கொண்டு உருவாக்கப்பட்ட கோவில்கள் மிகவும் அரிது என்று கருதப்படுகிறது.
விஜயநகர அரசின் கீழ் பழவேற்காடு இருந்தபோது ஆனந்தராயன் பட்டிணம் என்று வழங்கப்பட்டது. பழவேற்காடு என்ற பெயரை வழங்கியவர் கிருஷ்ணதேவராயர் என்று கூறப்படுகிறது. இவரது ஆட்சிக் காலத்தில்தான் இந்த வைணவக் கோவில் கட்டப்பட்டுள்ளது. மண்டப விதானத்தில் ராமாயணக் காட்சிகள் சிறிய வடிவில் செதுக்கப்பட்டுள்ளது இன்னொரு சிறப்பம்சமாகும்.
பாழடைந்த நிலையில் உள்ள இந்தக் கோவிலை சீரமைக்கும் வேலையில் இறங்கிய இந்து அறநிலையத்துறை, தற்போது தன் பணிகளை நிறுத்திவைத்துள்ளது. மரங்களின் வேர்கள் ஊடுருவி, எங்கும் வியாபித்துள்ளன. மரம் நிற்பதற்கு கோவில் உறுதுணையா, அல்லது கோவில் நிற்பதற்கு மரம் உறுதுணையா என்பது புரியவில்லை.
வெண்ணையைப் பறிக்கும் குட்டிக் கிருஷ்ணனின் லீலையை இந்தச் சிற்பம் அழகாக எடுத்துக் காட்டுகிறது. ஒரு காலை எம்பி, உயரே தூக்கி, அந்தக் கையால் பானையைப் பறிக்க குட்டிக் கிருஷ்ணன் முயற்சிக்கிறான். மற்றொரு கையால், கோபிகையின் ஒரு கரத்தை தடுத்துப் பிடித்துக் கொள்கிறான் சின்னக் கண்ணன், கோபிகையின் உடையின் மடிப்புக்களையும், ஒரு புறமே நீண்டு, தரை வரை தொங்கும் பின்னலையும் காணலாம். மாயவன் இழுத்த இழுப்பில் தனது தலையும் வெண்ணைப் பானையும் சாய்ந்த போதிலும், மற்றொரு கரத்தால் பானையை இறுகப் பிடித்துள்ளாள் கோபிகை.