மகாலக்ஷ்மி; குத்துவிளக்கு; நாச்சியார்கோவில்; இல்லத்தில் லக்ஷ்மி கடாட்சம் 

மகாலக்ஷ்மி; குத்துவிளக்கு; நாச்சியார்கோவில்; இல்லத்தில் லக்ஷ்மி கடாட்சம் 
Updated on
2 min read

கும்பகோணத்தில் இருந்து சுமார் 8 கி.மீ. தொலைவில் உள்ளது நாச்சியார் கோவில். குத்துவிளக்கிற்குப் பெயர் பெற்ற அற்புதமான இந்த ஊரில்தான், மகாலக்ஷ்மித் தாயாருடன் இருந்தபடி அகிலத்து மக்களுக்கு லக்ஷ்மி கடாட்சத்துடன் அருள்பாலிக்கிறா மகாவிஷ்ணு.


காவிரியில் இருந்து கிளை பிரிந்த ஆறான திருமலைராஜன் ஆற்றின் வடகரையில் அமைந்துள்ள அற்புதமான கோயில் இங்கே அமைந்துள்ளது. 108 திவ்ய தேசங்களில், இந்தத் தலமும் ஒன்று. சோழ தேசத்து திருப்பதிகளில், இது 14வது திருத்தலம் என்று போற்றப்படுகிறது. திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்த திருத்தலம் நாச்சியார் கோவில்.


புராண - புராதனப் பெருமை கொண்ட அற்புதமான திருத்தலம் என்று கொண்டாடுகிறார்கள் ஆச்சார்யர்கள்.


மேதாவி எனும் முனிவர், மகாவிஷ்ணுவின் மீது மாறா பக்தி கொண்டிருந்தார். இவரின் பக்தி நாளுக்குநாள் அதிகரித்தபடியே இருந்தது. இதன் விளைவு... மிகப்பெரிய வரத்தைக் கேட்டு தவமிருந்தார்.


அது சாதாரண வரம் அல்ல. ‘மகாலக்ஷ்மி மாதிரி மகள் பிறக்கணும், மருமகள் கிடைக்கணும்’ என்றுதானே நாம் வேண்டிக்கொள்வோம். ஆனால் மேதாவி முனிவரோ... ‘அந்த மகாலக்ஷ்மியே எனக்கு மகளாகப் பிறக்கவேண்டும். மகாவிஷ்ணுவே எனக்கு மருமகனாக வேண்டும்’ என வேண்டிக்கொண்டார்.


அவரின் வேண்டுதலை அறிந்த மகாலக்ஷ்மி, அந்த வரத்தை நிறைவேற்றித் தர திருவுளம் கொண்டாள். பங்குனி மாத உத்திர நட்சத்திர நன்னாளில், மேதாவி முனிவர் தவமிருந்த மகிழ மரத்தடியில் சிறுமியாக அங்கே தோன்றினாள் மகாலக்ஷ்மி. அள்ளியெடுத்து உச்சி முகர்ந்த முனிவர், அவளுக்கு வஞ்சுளவல்லி எனப் பெயர் சூட்டி அழைத்தார். அருமையாக வளர்த்தார். உரிய பருவத்தை அடைந்ததும், மகாவிஷ்ணுவுக்கே அவளை மணமுடித்து வைத்தார் என்கிறது ஸ்தல புராணம்.


மகாவிஷ்ணுவுக்கும் மகாலக்ஷ்மிக்கும் திருமணம் நடந்தது என புராணம் செல்லும் அற்புதமான இந்தத் தலத்துக்கு வந்து வேண்டிக்கொண்டால், கல்யாண வரம் கைகூடும் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.


நாச்சியார் கோவில் தலத்தின் இன்னொரு மகிமை...


பானுதத்தன் எனும் அரக்கன், ஒருகட்டத்தில் மனம் திருந்தினான். செய்த பாவங்களையெல்லாம் உணர்ந்து, தன் சாபத்தையெல்லாம் போக்கிக் கொள்ள இந்தத் தலத்துக்கு வந்தான். இங்கே உள்ள பிரத்யும்ன தீர்த்தத்தில் நீராடினான். பெருமாளை வழிபட்டான். வரம் பெற்றான். சாபம் நீங்கப் பெற்றான் என்கிறது ஸ்தல புராணம்.
ஐந்து நிலை கோபுரம், ஐந்து பிராகாரங்கள் என பிரமாண்டமாகத் திகழ்கிறது நாச்சியார்கோவில் திருக்கோயில். மூலவரின் திருநாமம் - ஸ்ரீநிவாசப் பெருமாள். நின்ற திருக்கோலத்தில், கிழக்குப் பார்த்தபடி காட்சி தருகிறார். தாயாரின் திருநாமம் - ஸ்ரீவஞ்சுளவல்லித் தாயார். இங்கே, இந்தத் தலத்தின் இன்னொரு சிறப்பு... தாயார் தனிச்சந்நிதியில் இல்லாமல், பெருமாளுடனேயே இருக்கிறார். திருமணக் கோலத்தில் அழகும் நாணமும் பொங்கக் காட்சி தருகிறார்.


இங்கே சாம்பதீர்த்தத்தில், சப்தரிஷிகளும் நீராடி, தவமிருந்து வரம் பெற்ற திருத்தலம். அதேபோல், முக்தி தரும் 12 தலங்களில் இதுவும் ஒன்று என்று விவரிக்கிறது ஸ்தல புராணம். திருமங்கையாழ்வாருக்கு, பஞ்ச சம்ஸ்காரம் எனும் முத்திரா தானத்தை, பெருமாளே வந்து செய்தருளினார் எனும் புண்ணியம் நிறைந்த க்ஷேத்திரம். கல்கருட தரிசனமும் இங்கே மகத்துவம் வாய்ந்தது.


மகாலக்ஷ்மித் தாயாரே இங்கு அவதரித்து, மகாவிஷ்ணுவை மணம் புரிந்தார் அல்லவா. எனவே இங்கு தாயாரே பிரதானம். தாயாருக்கே முதல் மரியாதை. எனவே, நாச்சியார்கோவில் தாயாரையும் ஸ்ரீநிவாச பெருமாளையும் மனதார வழிபட்டால், உங்கள் இல்லத்தில் குத்துவிளக்கேற்ற மருமகள் அமைவார். புகுந்த வீட்டுக்கு விளக்கேற்ற மருமகளாகும் பாக்கியம் கிடைக்கும். தடைப்பட்ட திருமணங்கள் நடந்தேறும்.


வெள்ளிக்கிழமைகளில், மாதந்தோறும் உத்திர நட்சத்திரத்தில், பங்குனி உத்திர நன்னாளில், வீட்டில் விளக்கேற்றி நாச்சியார்கோவில் மகாலக்ஷ்மியை மனதார வேண்டுங்கள்.வீட்டில் மங்கல காரியங்கள் நடந்தேறும். லக்ஷ்மி கடாட்சம் நிறைந்திருக்கும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in