

’கர்மாவின் விளைவாக நாம் பலப்பல பிறவிகள் எடுக்கிறோம். எம்பெருமாளோ, நம்மையும் இவ்வுலகையும் காப்பதற்காக பல பிறப்புகள் எடுத்து அவதரிக்கிறார்’’ என நம்மாழ்வார் அருளியிருக்கிறார்.
இப்படி பெருமாள் எடுத்த அவதாரங்களை நாம் அறிவோம். முக்கியமாக, பிரகலாதனைக் காப்பதற்காகவும் இரண்யனை வதம் செய்து அழிப்பதற்காகவும் பெருமாள் எடுத்த அவதாரம்... நரசிம்ம அவதாரம்.
தன் பக்தனுக்கு ஒரு சோதனையோ துக்கமோ கவலையோ என்றால், நொடிப்பொழுதும் தாமதிக்காமல் ஓடோடி வருவார் நரசிம்மர் என்கிறார்கள் பக்தர்கள். நரசிம்ம திருத்தலங்களில் முதன்மையானதும் முழுமையானதுமான திருத்தலம் அஹோபிலம். அஹோபிலத்தில், அஹோபில, யோகானந்த, பார்கவ, சத்ரவட, காரஞ்ச, குரோத, மாலோல, ஜ்வாலா, பாவன என ஒன்பது நரசிம்மர்கள் சேவை சாதிக்கின்றனர். இவர்களை நவ நரசிம்மர்கள் என்று போற்றுகிறது ஸ்தல புராணம்.
.இத்தனை பெருமைகள் கொண்ட நரசிம்மருக்கு, தமிழகத்தில் பல கோயில்கள் அமைந்துள்ளன. பல தலங்களில் இருந்தபடி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார் நரசிம்மர்.
இதில் முக்கியமானதொரு திருத்தலாமாகத் திகழ்கிறது சோளிங்கர். சென்னையில் இருந்து சுமார் 102 கி.மீ. தொலைவில் உள்ளது சோளிங்கர். திருக்கடிகை என்றும் கடிகாசலம் என்றும் சோளசிம்மபுரம் என்றும் கொண்டாடப்படுகிறது சோளிங்கர் திருத்தலம். பேயாழ்வார், திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்த அற்புதமான திருத்தலம். இங்கே பெருமாளின் திருநாமம் - ஸ்ரீயோக நரசிம்மர். தாயார் - அமிர்தவல்லித் தாயார். இந்தத் தலத்தின் தீர்த்தம் தக்கான் குளம் என்றும் தக்கான் தீர்த்தம் என்றும் போற்றப்படுகிறது.
மலையும் அழகு. மலையின் மீது குடிகொண்டிருக்கும் யோக நரசிம்மரும் கண்ணையும் கருத்தையும் கவர்கிறார். ஒரு நாழிகை, அதாவது ஒரேயொரு நாழிகை அதாவது ஒரு கடிகை... அதாவது 24 நிமிடங்கள்... சோளிங்கர் திருத்தலத்தில் இருந்து யோக நரசிம்மரை தரிசித்தால், மோட்சம் நிச்சயம் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.
படியேறி, இந்தத் தலத்துக்கு வர இயலாதே என்பவர்கள் கலங்கவோ வருந்தவோ அவசியமில்லை. புதன் மற்றும் சனிக்கிழமைகளில், சுவாதி நட்சத்திர நாளில், வீட்டில் இருந்தபடியே யோக நரசிம்மரை 24 நிமிடங்கள் கண் மூடி மனதார நினைத்தாலே போதும்... வேண்டிக்கொண்டாலே போதும்... பானக நைவேத்தியம் செய்து நரசிம்மருக்குப் படைத்து அக்கம்பக்கத்தாருக்கும் குழந்தைகளுக்கும் வழங்கி பிரார்த்தனை செய்துகொண்டாலே போதும்... சகல யோகங்களையும் தந்து அருள்வார், எதிரிகளை இல்லாது செய்வார், எதிர்ப்புகளை காணடிப்பார் யோக நரசிம்மர் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.