

கும்பகோணத்துக்கு அருகில் உள்ளது சுவாமிமலை. இந்த ஊருக்கு அருகில் உள்ள ஆதனூரில் இருந்து சுமார் 3 கி.மீ. பயணித்தால் புள்ளபூதங்குடி எனும் திருத்தலத்தை அடையலாம். இந்த ஊரில்தான் அழகுற கோயில் கொண்டிருக்கிறார் வல்வில் ராமன்.
‘புள்’ என்றால் பறவையைக் குறிக்கும். அதாவது ஜடாயு எனும் பறவையைக் குறிக்கும்.
ஆமாம்... ஜடாயுப் பறவைக்கும் இந்தத் தலத்துக்கும் தொடர்பு உள்ளது.
சீதாதேவியை, ராவணன் தூக்கிச் சென்றதும் அசோகவனத்தில் வைத்திருந்ததும் அங்கே அனுமனின் உதவியால் ராவணனுடன் போரிட்டு சீதையை ஸ்ரீராமர் மீட்டதும் முழுவதுமாக விவரிக்கிறது ராமாயணம். இந்தப் புராணங்களையெல்லாம் அறிந்தவர்கள்தான் நாம்.
சீதையை, ராவணன் தூக்கிச் சென்ற போது, வழியில், நடுவில், ராவணனுடன் கடும் சண்டையிட்டது ஜடாயுப் பறவை. எப்படியாவது சீதையை ராவணனிடம் இருந்து மீட்டுவிடவேண்டும், தசரத சக்கரவத்தியிடமும் ஸ்ரீராமரிடமும் கொண்டுசேர்த்துவிட வேண்டும் என்றும் போராடியது.
ஆனால், வல்லவனும் மிகுந்த போர்சாகசங்கள் அறிந்தவனுமான ராவணனை ஜடாயுவால் எதுவும் செய்யமுடியவில்லை. அதேவேளையில், ஜடாயுவின் றெக்கைகளைப் பிய்த்துக் கொன்றுபோட்டான் ராவணன்.
முன்னதாக, இரண்டு றெக்கைகளையும் இழந்து, உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தது ஜடாயு. சீதாதேவியைக் காணாமல் தேடிக்கொண்டு வந்தார் ஸ்ரீராமர். அப்போது ராம லட்சுமணர்கள், உயிருக்கு ஊசலாடிக் கொண்டிருந்த ஜடாயுவைக் கண்டனர். ஜடாயுவின் மீது தன் தந்தைக்கு நிகரான மரியாதையைக் கொண்டிருந்தார்கள் ராம லட்சுமணர்கள்.
ராவணன் சீதையை தூக்கிச் சென்றதையும் அவன் சென்ற திசையையும் சொல்லி, உயிரை விட்டது ஜடாயுப் பறவை. அப்போது, ஸ்ரீராமபிரான், ஜடாயுவுக்கு மோட்ச கதி அளித்து அருளினார். அதுமட்டுமின்றி, இறந்துவிட்ட ஜடாயுப் பறவைக்கு, ஈமக்காரியங்களை முறைப்படி செய்தார்.
ஜடாயுவிற்கு மோட்சம் அளித்த தலம், புள்ளபூதங்குடி என்று போற்றப்படுகிறது. இங்கே உள்ள திருக்கோயிலில் அற்புதமும் அழகும் ததும்பக் காட்சி தருகிறார் ஸ்ரீராமர். இங்கே, இந்தத் தலத்துக்கு வந்து வேண்டிக்கொண்டால், ஸ்ரீராமரின் பேரருள் கிடைப்பது நிச்சயம். இந்த வாழ்நாளை இனிதே அமைத்துக் கொடுப்பார் ராமபிரான். மோட்ச கதியைத் தந்தருள்வார் என விவரிக்கிறது ஸ்தல புராணம்.
ஜடாயுவிற்கு மோட்சம் கொடுத்த இந்தத் திருத்தலம், 10 திவ்ய தேசங்களில் ஒன்று. திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்த திருத்தலம் இது. திருமங்கையாழ்வாருக்கு, நான்கு திருக்கரங்களுடன் ஸ்ரீராமபிரான் திருக்காட்சி தந்து அருளிசெய்தார் என்கிறது புராணம்.
இங்கே ஸ்ரீராமரின் திருநாமம் - ஸ்ரீவல்வில் ராமர். புஜங்க சயனக் கோலத்தில் காட்சி தருகிறார். இங்கே உள்ள ஜடாயு தீர்த்தம் விசேஷமானது என்கிறார்கள் பக்தர்கள். தீர்த்தத்தை தலையில் தெளித்துக் கொண்டு ஸ்ரீராமரை வணங்கித் தொழுதால், தெரிந்தோ தெரியாமலோ, பறவைகளைக் கொன்ற பாவமும் ஏழு தலைமுறை பாவங்களும் நீங்கிவிடும் என்பது ஐதீகம்.
தாயாரின் திருநாமம் - ஸ்ரீஹேமாம்புஜவல்லி. இவளும் கருணையே உருவானவள். லக்ஷ்மி கடாக்ஷத்துடன் நம்மைக் காத்தருள்பவள். இந்தக் கோயிலில், யோக நரசிம்மருக்கும் சந்நிதி அமைந்துள்ளது. மிகுந்த வரப்பிரசாதி என்று போற்றுகின்றனர் பக்தர்கள்.
புதன் மற்றும் சனிக்கிழமைகளில், சுவாதி நட்சத்திர நாளில், யோக நரசிம்மரைத் தரிசித்து வந்தால், எதிரிகள் தொல்லையே இல்லாமல் செய்துவிடுவார் யோக நரசிம்மர் என்கிறார்கள் ஆச்சார்யர்கள். அதேபோல், ஸ்ரீராமரை வணங்கி வந்தால், தடைப்பட்ட திருமணம் நடந்தேறும். கணவனும் மனைவியும் இணைபிரியாமல் வாழ்வார்கள் என்பது ஐதீகம்.