Published : 02 Jul 2020 13:02 pm

Updated : 02 Jul 2020 13:02 pm

 

Published : 02 Jul 2020 01:02 PM
Last Updated : 02 Jul 2020 01:02 PM

சாயிபாபாவை நினைத்து தெருநாய்களுக்கு உணவு; நிம்மதியும் நிறைவும் தருவார் ஷீர்டி பாபா! 

saibaba

ஆசைக்கும் வெறுப்புக்கும் அப்பாற்பட்டவர் சாயிபாபா. அவருக்கு விருப்பமுமில்லை. துவேஷமும் கிடையாது. அவருக்கு இனிப்பும் ஒன்றுதான். காரமும் அப்படித்தான். பேதங்களில்லாத மகான் பாபாவுக்கு, லட்சுமிபாய் சமைக்கும் உணவுகள் என்றால் மட்டும் கொள்ளைப் பிரியமாம். ஒரு சின்னக்குழந்தையைப் போல் விரும்பிச் சாப்பிடுவாராம்.
பாபாவுக்கு உணவிடும் பாக்கியம் லட்சுமி பாய்க்கு பலமுறை வாய்த்திருக்கிறது. உஞ்சவிருத்தியின் பொருட்டு, ஒருநாள்... லட்சுமிபாய் வீட்டுக்கு வந்தார் பாபா.
அவ்வளவுதான். லட்சுமிபாய்க்கு கையும் ஓடவில்லை. காலும் ஓடவில்லை. சமையலறைக்குள் நுழைந்து மளமளவென வேலைகளில் இறங்கினார். அப்போது லட்சுமிபாயை அழைத்தார் பாபா. ‘எனக்கு இன்றைக்கு பாயசம் சாப்பிடவேண்டும் போல் ஆசையாக இருக்கிறது. பாயசம் பண்ணிக்கொடுக்கமுடியுமா?’’ என்று கேட்டார்.
இதைக் கேட்டதும் நெகிழ்ந்து போனார் லட்சுமி பாய். உஞ்சவிருத்திக்காக பாபா, எத்தனையோ முறை வந்திருக்கிறார். வந்து சாப்பிட்டிருக்கிறார். ஆனாலும் ‘எனக்கு இது வேணும், அதைப் பண்ணிக் கொடு’ என்றெல்லாம் இதுவரை கேட்டதே இல்லை பாபா. அப்பேர்ப்பட்ட ஷீர்டி நாதன், ’பாயசம் வேணும்’ என்று கேட்டதும் மகிழ்ந்து கரைந்தார் லட்சுமி பாய்.
உடனே, பாயசம் செய்வதில் இறங்கினார். சுடச்சுட, மணக்க மணக்க, குவளையில் பாயசத்தைக் கொண்டு வந்து பாபாவிடம் கொடுத்தார். ஒரு குழந்தையைப் போல் ஆசையாக வாங்கிய பாபா, கடகடவென பாயசத்தைப் பருகினார். பெற்ற வயிறு குளிர்ந்தது போல், மனசே குளிர்ந்து நிறைந்தது லட்சுமி பாய்க்கு!
இப்படி பாபா உஞ்சவிருத்திக்கு வருவதும் புதிதல்ல. வந்து திடீரென்று ஏதேனும் கேட்பதும் புதிதல்ல. இப்படித்தான் ஒருநாள்... லட்சுமிபாய் வீட்டுக்கு பாபா வந்தார். ‘என்னவோ இன்றைக்கு நன்றாகப் பசிக்கிறது. விதம்விதமாக சாப்பிடத் தோன்றுகிறது. சமைத்துக் கொடேன்’ என்றார்.
அடுத்த அரைமணி நேரத்தில், விதம்விதமான பதார்த்தங்களைச் சமைத்து இறக்கினார் லட்சுமிபாய். பாபாவுக்கு உணவு பரிமாறினார். பரிமாறி விட்டு, எதிரே நின்று கொண்டார். ‘அன்றைக்கு பாயசத்தை ரசித்து ருசித்துச் சாப்பிட்டது போல், இன்றைக்கும் அவர் சாப்பிடுவதைப் பார்த்து மனம் நிறைய வேண்டும்’ என நினைத்துக் கொண்டு, நின்றார்.
ஆனால் பாபா என்ன செய்தார் தெரியுமா?
சட்டென்று எழுந்தார் பாபா. பரிமாறியிருந்த உணவை அப்படியே எடுத்துக்கொண்டார். விறுவிறுவென வெளியே சென்றார். லட்சுமி பாய்க்கு ஒன்றும் புரியவில்லை. வாசலில், நாய் ஒன்று தயாராகக் காத்து நின்றது. அந்த உணவை நாய்க்கு வழங்கினார். அது, செம பசியில் இருந்திருக்கும் போல. விறுவிறுவென சாப்பிட்டது. அந்த நாய் சாப்பிடுவதையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தார் பாபா. பாபாவையே பார்த்துக் கொண்டு நின்றார் லட்சுமி பாய்.
அதேசமயம், பாபா கேட்கிறாரே என்று விதம்விதமாகச் சமைத்தோம். ஆனால் அது நாய் சாப்பிடுபடி ஆகிவிட்டதே என உள்ளுக்குள் வருந்தினார்.
லட்சுமிபாயின் எண்ணத்தை பாபா அறிய முடியாதவரா என்ன?
’’என்ன லட்சுமி... எனக்காக கஷ்டப்பட்டு உணவு தயாரித்தாய். ஆனால் அதை நாய் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறது என்று வருத்தப்படுகிறாயா? உனக்கு ஒன்று தெரியுமா? நான் வேறு, இந்த நாய் வேறு அல்ல. என்னுடைய ஆத்மாவும் நாயின் ஆத்மாவும் ஒன்றே. இதைத் தெளிவாகப் புரிந்துகொள் லட்சுமி.
இப்போது இந்த நாயின் பசி தீர்ந்துவிட்டது. நாயின் பசியை நீ தீர்த்துவிட்டாய். அதாவது, என்னுடைய பசியை நீ போக்கிவிட்டாய். இந்தச் செயலால், நீ மேன்மை அடையைப் போகிறாய். நல்ல உணவைச் சமைத்துக் கொடுத்த உன்னுடைய வாழ்வில், உற்சாகமும் உத்வேகமும் கூடப் போகிறது. மகிழ்ச்சியும் குதூகலமும் நிறைந்த நிம்மதியான வாழ்க்கையை நீ வாழப் போகிறாய்’ என ஆசீர்வதித்தார் பாபா.
இதன் பின்னர், லட்சுமி பாயின் வாழ்வில் நடந்ததெல்லாமே சாயிபாபாவின் அற்புதங்கள் என்கிறது ஷீர்டி திருத்தலம்.
முடியும்போதெல்லாம், நினைக்கும் போதெல்லாம், நீங்களும் சாயிபாபாவுக்கு பாயசம் நைவேத்தியம் செய்து, அதை அக்கம்பக்க குழந்தைகளுக்கும் பெண்களுக்கும் வழங்குங்கள். காகத்துக்கு தினமும் உணவிடுவது போல், தெருநாய்களுக்கும் உணவோ பிஸ்கட்டோ தினமும் வழங்குங்கள்.
இதுவரை உங்கள் வாழ்வில் இருந்த தடைகளையெல்லாம் போக்கி அருளுவார் சாயிபாபா. உங்களை முன்னேற்றத்தையும் மகிழ்ச்சியையும் தந்து நிறைவுற வாழச் செய்வார் பாபா!தவறவிடாதீர்!


சாயிபாபாவை நினைத்து தெருநாய்களுக்கு உணவு; நிம்மதியும் நிறைவும் தருவார் ஷீர்டி பாபா!சாயிபாபாஷீர்டி பாபாதெருநாய்கள்பாயசம்பாபா கேட்ட பாயசம்தெருநாய்களுக்கு உணவுதெருநாய்களுக்கு பிஸ்கட்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author

x