Published : 01 Jul 2020 07:01 PM
Last Updated : 01 Jul 2020 07:01 PM

சரும நோய் தீர்க்கும் கோணேஸ்வரர்! 

திருவாரூரில் இருந்து கும்பகோணம் செல்லும் வழியில் 16 கி.மீ. தொலைவிலும் கும்பகோணத்தில் இருந்து சுமார் 19 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது குடவாசல். இந்த சின்னஞ்சிறிய ஊரில்தான், அற்புதமான மாடக் கோயில் அமைந்துள்ளது. இங்கே உள்ள இறைவியின் திருநாமம் - ஸ்ரீபெரியநாயகி. சிவனாரின் திருநாமம் - ஸ்ரீகோணேஸ்வரர்.
கோச்செங்கட்சோழ மன்னன் மாடக்கோயில் எழுப்பிய திருத்தலம். இங்கே உள்ள முருகப்பெருமானை அருணகிரிநாதர் உருகி உருகி திருப்புகழ் பாடியிருக்கிறார் எனும் பெருமை கொண்ட தலம். அம்பாளே துர்கையாக, சக்தியாக, எதிரிகளை அழிப்பவளாகத் திகழும் அற்புதத் தலம் என்று ஸ்தல புராணம் விவரிக்கிறது.
இங்கே உள்ள நடராஜர் சபை அற்புதமாக அமைந்துள்ளது. நடராஜர் அழகு ததும்பக் காட்சி தருகிறார். மேற்கு நோக்கிய சிவாலயம் அரிது. குடவாசல் கோயில், மேற்கு பார்த்த சிவன் கோயிலாக அமைந்துள்ளது. அதேபோல், கோயிலில் காசி விஸ்வநாதருக்கு சந்நிதி அமைந்திருக்கிறது. அவரும் மேற்கு பார்த்து அருள்பாலிக்கிறார்.
கோயிலின் தென்மேற்குப் பிராகாரத்தில், மாலை வழிபாட்டு விநாயகர் சந்நிதி அமைந்துள்ளது. சக்தி வாய்ந்த விநாயகர் என்கிறார்கள் பக்தர்கள். இவரை வணங்கிவிட்டு, கோணேஸ்வரரையும் அம்பாள் பெரியநாயகியையும் வழிபட்டால், தடைப்பட்ட திருமணங்கள் நடந்தேறும். மாங்கல்ய பலம் பெருகும் என்று சிலிர்ப்புடன் சொல்கிறார்கள் பக்தர்கள். இந்த விநாயகருக்கு முன்னதாக, மூஷிக வாகனம் இருக்கிறது. இதற்குக் கீழேயும் சின்னஞ்சிறு விநாயகப் பெருமானை தரிசிக்கமுடிகிறது.

மாடக்கோயில். கோச்செங்கட் சோழன் எழுப்பிய மாடக்கோயில். 24 படிகள் இருக்கின்றன. இந்தப் படிகளைக் கடந்து சென்றால், நம் வாழ்க்கையை உயர்த்தக் காத்திருக்கும் கோணேஸ்வரரை தரிசிக்கலாம். சதுர ஆவுடையாருடன் அற்புதமான தரிசனம். சிலிர்க்க வைக்கும் தரிசனம்.
குடந்தையின் மகாமகச் சிறப்புத் தொடர்பு கொண்டது இந்த குடவாசல் என்கிறது ஸ்தல புராணம்.
பிரளயகாலம் வந்து உயிர்கள் அழிவுறும்போது, பிரம்மதேவர் படைப்புக்கு உரிய உயிர்கலன்களை
ஒரு அமுதக் குடத்தில் இட்டார். அந்தக் குடம் வெள்ளப்பிரளயத்தில் அடித்துச் செல்லப்பட்டு தென்திசையில் மிதந்து வந்தது. அப்போது, சிவனார், வேடுவ வடிவில் வந்தார். குடத்தின் மீது அம்பெய்தினார். அந்த அமிர்தக் குடம் உடைந்தது. அமிர்தக் குடத்தின் மேல்பாகம் விழுந்த இடம் குடமூக்கு என அழைக்கப்பட்டது. பின்னர் இது கும்பகோணம் என்றானது. அமிர்தக் குடத்தின் நடுப்பாகம் விழுந்த இடம், கலயநல்லூர் எனும் சாக்கோட்டை என்றானது. மேல்பாகம் விழுந்த இடம் அதாவது குடத்தின் வாசல் பகுதி விழுந்த இடம் குடவாயில் என்றும் குடவாசல் என்றும் அழைக்கப்படுகிறது.


தலம், தீர்த்தம், மூர்த்தம் மூன்றுமே போற்றப்படுகிற அற்புதத் தலம் இது. இந்தக் கோயிலின் தீர்த்தம் அமிர்த தீர்த்தம் என்றே அழைக்கப்படுகிறது.
எந்தக் கோயிலிலும் இல்லாத ஆச்சரியம்... கோயிலின் பிரமாண்டமான மதிலில் (சுவர்) நந்தியெம்பெருமானுடன் கருடாழ்வாரும் தரிசனம் தருகிறார். கருடன் , சூரியன், சூத முனிவர், தாலப்பிய முனிவர் முதலானோர் வணங்கி வழிபட்டு, வரம் பெற்ற திருத்தலம் என்கிறது ஸ்தல புராணம். திருஞான சம்பந்தப் பெருமான் பாடிப் பரவிய திருத்தலம் இது.
திருணபிந்து எனும் முனிவர் கோயிலின் அமிர்தக் குளத்தில் நீராடி, சிவனாரை நோக்கி தவமிருந்தார். அதில் மகிழ்ந்த சிவபெருமான், முனிவருக்கு அருட்காட்சி தந்தார். இதனால், முனிவர், குஷ்ட நோய் நீங்கப் பெற்றார். எனவே, சருமத்தில் ஏதேனும் நோய் இருப்பவர்கள், குடவாசல் கோணேஸ்வரரை மனதார வேண்டிக் கொண்டு, ஒவ்வொரு சோமவாரத்திலும் (திங்கட்கிழமை), பிரதோஷ நாளிலும் வீட்டிலிருந்தே வேண்டிக்கொள்ளுங்கள். விரைவில் நோய் நீங்கப்பெறுவீர்கள். பின்னர், இங்கு வந்து, சிவனாரை தரிசியுங்கள்.
பொன்னொப் பவனும் புயலொப் பவனும்
தன்னொப் பறியாத் தழலாய் நிமிர்ந்தான்
கொன்னற் படையான் குடவாயில் தனில்
மன்னும் பெருங்கோயில் மகிழ்ந்தவனே

என்று ஞானசம்பந்தர் பாடியருளிய பதிகத்தைப் பாடி, வீட்டில் விளக்கேற்றி, குடவாசல் கோணேஸ்வரரை மனதார வழிபடுங்கள். ஐந்து பேருக்கேனும் தயிர்சாதப் பொட்டலம் வழங்குங்கள். தீராத நோயையும் தீர்த்தருள்வார் கோணேஸ்வரர்.
கோணேஸ்வரர் பதிகம் பாடினால், கோளாறுகள் அனைத்தும் நீங்கும் என்பது சுற்றுவட்டார மக்களின் நம்பிக்கை.
கோணேஸ்வரரை பதிகம் பாடிப் போற்றுவோம். எல்லாப் பிரச்சினைகளையும் நீக்கி அருளுவார் கோணேஸ்வரப் பெருமான்!

- ராஜா மகாலிங்கம், கும்பகோணம்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x