புதன்... சர்வ ஏகாதசி.. பெருமாளுக்கு துளசி

புதன்... சர்வ ஏகாதசி.. பெருமாளுக்கு துளசி
Updated on
1 min read

புதன் கிழமையும் ஏகாதசியும் இணைந்து வரும் அற்புதமான நாளில், பெருமாளை வணங்குவோம். ஒரு கை துளசியை பெருமாளுக்கு சார்த்துவோம். நம்மை செம்மையாகவும் சிறப்புடனும் குறைவின்றி வாழச் செய்வார் ஏழுமலையான்.
பெருமாளை வணங்குவதற்கும் வழிபடுவதற்கும் நாம் வரங்களைப் பெறுவதற்கும் எத்தனையோ நாட்கள் இருக்கின்றன. புதன் கிழமையும் சனிக்கிழமையும் பெருமாளுக்கு உரிய கிழமைகளாகச் சொல்லப்படுகின்றன.
அதேபோல், மார்கழியின் ஏகாதசி, வைகுண்ட ஏகாதசி என்று போற்றப்படுவது போல, ஒவ்வொரு மாதமும் வருகிற ஏகாதசியும் ரொம்பவே விசேஷம். ஏகாதசியில் விரதம் மேற்கொள்ளும் பக்தர்கள் ஏராளம்.
ஏகாதசியில் விரதம் இருந்து, பெருமாளை ஆராதிப்பார்கள். விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் செய்வார்கள். அருகில் உள்ள பெருமாள் கோயிலுக்குச் சென்று வழிபடுவது வழக்கம்.
இதேபோல், ஏகாதசி நாளில் இருந்து எவருக்கேனும் உணவுப் பொட்டலம் வழங்குவதும் மிகுந்த புண்ணியத்தைத் தரக்கூடியது. வீட்டில் புளியோதரை அல்லது தயிர்சாதம் நைவேத்தியம் செய்து பெருமாளைப் பிரார்த்தித்து, நைவேத்தியத்தை அக்கம்பக்கத்தாருக்கு வழங்குவது வளம் சேர்க்கும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
இன்று ஆனி 17ம் தேதி. ஜூலை 1ம் தேதி. புதன்கிழமை. ஆனி புதன்கிழமையில் ஏகாதசியும் இணைந்துள்ளது. முக்கியமாக, சர்வ ஏகாதசி நாளான இன்று, பெருமாளை நினைத்து வீட்டில் விளக்கேற்றுங்கள். பெருமாளின் திவ்ய நாமங்களைச் சொல்லி பாராயணம் செய்யுங்கள்.
புளியோதரை அல்லது தயிர்சாதம் நைவேத்தியம் செய்யுங்கள். ஒரு கை துளசி பெருமாளுக்கு சார்த்துங்கள். அதேபோல், துளசி தீர்த்தம் பருகுங்கள். எல்லா நல்லதுகளும் தந்தருள்வார் வேங்கடநாதன். இன்னல் என்பதையெல்லாம் இல்லாது போகச் செய்வார் ஏழுமலையான்!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in