

சக்கரத்தாழ்வார் ஜயந்தி நாளில், அவரை மனதார, ஆத்மார்த்தமாக வழிபடுவோம். எதிர்ப்புகளையெல்லாம் இல்லாமல் செய்வார். கஷ்டங்களையெல்லாம் போக்கி அருளுவார். தடைப்பட்ட மங்கல காரியங்களை நடத்தி அருளுவார். இன்று சக்கரத்தாழ்வார் ஜயந்தி.
சுதர்சனம் என்றால் மங்கலகரமானது என்று அர்த்தம். சுதர்சன் என்றால் மங்கலகரமானவன் என்று பொருள். மகாவிஷ்ணுவின் திருக்கரத்தில் இருக்கும் பாக்கியத்தைப் பெற்ற சுதர்சனம் எனும் சக்கரம், சக்கரத்தாழ்வார் என வணங்கி வழிபடப்படுகிறது.
ஆனி மாதம் தசமி திதியையும் சித்திரை நட்சத்திரையும் ஸ்ரீசக்கரத்தாழ்வர் ஜயந்தி நன்னாளாக கொண்டாடப்படுகிறது. பெருமாள் கோயில்கள் அனைத்திலும் சக்கரத்தாழ்வாருக்கு தனிச்சந்நிதியே அமைந்திருக்கும்.
‘சக்ரா’ என்றால் எப்பொழுதும் செயல்பாட்டில் இருந்துகொண்டே இருப்பது என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள். மற்ற ஆயுதங்களைப் போல் சுதர்சன சக்கரம் வெறும் ஆயுதமில்லை. எல்லா ஆயுதங்களைக் காட்டிலும் வலிமையானது. அத்துடன் எப்பொழுதும் சுழன்று கொண்டே இருக்கக் கூடியது. செயல்பட்டுக்கொண்டே இருப்பது என்கிறது புராணம். .
சாதாரணமாகவே, சுதர்சன சக்கரம் என்பது பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் சுண்டு விரலில் காணப்படும். மகாவிஷ்ணு, தன் ஆள்காட்டி விரலில் வைத்துக் கொண்டிருக்கிறார். யார் மீதாவது ஏவும் பொழுது கிருஷ்ணரும், ஆள்காட்டி விரலில் இருந்து தான் ஏவுகிறார். எதிரிகளை, அசுரக்கூட்டத்தை அழித்த பின்னர், சுதர்சனச் சக்கரமானது மீண்டும் அந்த இடத்துக்கே திரும்ப வந்துவிடுகிறது. அதாவது, சுதர்சன சக்கரம் ஏவப்பட்ட பிறகு ஏவிய பகவானின் கட்டளைக்குக் கட்டுப்பட்டு, அவரின் திருக்கரங்களுக்கே வந்துவிடுகிறது.
எவ்வித அழுத்தமும் இல்லாத சூன்யப்பாதையில் செல்வதால் சுதர்சன சக்கரத்தால் எந்த இடத்திற்கும் கண்மூடி கண் திறக்கும் நேரத்திற்குள் செல்ல முடியும் என்கிறது விஷ்ணு புராணம். மேலும் மகாவிஷ்ணுவின் திருக்கரத்திலிருந்து சுதர்சனச் சக்கரமானது கிளம்பியதும் தெரியாது, எதிரிகளை அழித்ததும் தெரியாது, மீண்டும் அவரின் திருக்கரங்களுக்கு வந்து விரலில் வந்து உட்கார்ந்துகொள்வதும் தெரியாது. எல்லாமே கணப்பொழுதில் அரங்கேறிவிடும்.
சுதர்சனச் சக்கரத்தின் வடிவம் எத்தகையது தெரியுமா? சின்னஞ்சிறு துளசி தளத்தில், ஒரு கைப்பிடி அளவு துளசியில் அடங்கக்கூடியது. அதேசமயம், இந்தப் பிரபஞ்சம் அளவுக்கு பரந்து விரிந்துமாகவும் இருக்கிறது.
சுதர்சனச் சக்கரம் என்பதே சக்கரத்தாழ்வார். மகாவிஷ்ணுவின் திருப்பாதத்தை தரிசிப்பதும் பிரார்த்திப்பதும் எத்தனை விசேஷமோ அதேபோல், சக்கரத்தாழ்வாரை பூஜித்து வருவதும் விசேஷமானது. நம் வாழ்வில் நமக்கு வருகிற எதிர்ப்புகளையும் எதிரிகளையும் அழித்து நமக்கான தடைகளையெல்லாம் தகர்த்தருள்கிறார் சக்கரத்தாழ்வார்.
சக்கரத்தாழ்வாரை மனதார வேண்டுங்கள். வீட்டில் விளக்கேற்றி, இன்றைய ஜயந்தி நன்னாளில், ஆத்மார்த்தமாக வழிபடுங்கள். தினமும்
ஓம் சுதர்ஸனாய வித்மஹே.
மஹா ஜ்வாலாய தீமஹி
தந்நோ சக்ர ப்ரஸோதயாத்:
என்று முடிந்தபோதெல்லாம் சொல்லுங்கள். தினமும் 11 முறை அல்லது 24 முறை அல்லது 54 அல்லது 108 முறை என முடிந்த அளவுக்கு சொல்லி சக்கரத்தாழ்வாரை வழிபடுங்கள். எதிர்ப்புகளும் தடைகளும் தகர்த்து அருளுவார்.