Last Updated : 26 Jun, 2020 04:11 PM

 

Published : 26 Jun 2020 04:11 PM
Last Updated : 26 Jun 2020 04:11 PM

குலதெய்வ வழிபாட்டை மறக்காதீங்க! 

குலதெய்வத்துக்கு இணையான தெய்வமேது என்பார்கள். ஒருவருக்கு இஷ்ட தெய்வம் என்று எந்த தெய்வத்தையும் வணங்கலாம். பரிகார தெய்வம் என்று எந்த தெய்வங்களையும் வழிபடலாம். அதேசமயம் ஒருபோதும் நம் குலதெய்வத்தை மட்டும் வணங்காமல் விட்டுவிடக் கூடாது. எத்தனையோ வழிபாடுகள் இருந்தாலும் குலதெய்வ வழிபாட்டுக்கு இணையானது ஏதுமில்லை. இந்த வழிபாட்டால் கிடைக்கும் வலிமைக்கு நிகரானது எதுவுமில்லை என்கிறார்கள்.
குலம் தெரியாமல் போனாலும், குலதெய்வம் தெரியாமல் போகக்கூடாது என்பது முன்னோர் வாக்கு. குலதெய்வ வழிபாடு குறித்து ஆச்சார்யர்கள் ‘குருவை மறந்தாலும் குலதெய்வத்தை ஒருபோதும் மறந்துவிடக்கூடாது’ என அறிவுறுத்துகிறார்கள்.
வீட்டில், எந்தவொரு சிறிய நிகழ்வு என்றாலும் குலதெய்வத்தை உடனே வணங்கவேண்டும். கல்யாணமோ காதுகுத்தோ எதுவாக இருந்தாலும் குலதெய்வத்தை வணங்கிவிட்டுத்தான் வீட்டில் மங்கல காரியங்களை நடத்துவார்கள்.
‘சுக்குக்கு மிஞ்சிய மருந்தில்லை; குலதெய்வத்துக்கு மிஞ்சிய தெய்வமில்லை’ என்று கிராமத்தில் சொலவடை சொல்லுவார்கள். கிராமங்களில், இன்றைக்கும் குலதெய்வ வழிபாட்டுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருவதைப் பார்க்கலாம்.


வாழ்வைக் காக்க பல தெய்வங்களும் சக்திகளும் உண்டு என்றாலும் நம் வம்சத்தைக் காக்கும் கனிவும் கடமையும் குலதெய்வத்துக்கு உண்டு என்கிறார்கள் ஆன்றோர்கள். எமதருமன் கூட, குலதெய்வத்தின் அனுமதியைப் பெற்ற பிறகுதான் ஒருவரின் உயிரை எடுக்கமுடியும் என்று ஆச்சார்யர்கள் சொல்கின்றனர்.
குழந்தைக்கு முதல் முடி இறக்குவது தொடங்கி வீட்டின் சகல நிகழ்வுகளையும் குலதெய்வத்தின் அனுமதியுடன், குலதெய்வத்தின் சந்நிதியில் வைத்தும் கூட செய்யவேண்டும்.
நம்முடைய சம்பாத்தியத்தில் இருந்து என்னென்னவோ செய்யலாம். எந்தக் கோயிலுக்கெல்லாமோ திருப்பணி செய்யலாம். அதேசமயம், முக்கியமாக குலதெய்வக் கோயிலுக்கு நம்மால் இயன்ற திருப்பணிகளைச் செய்யவேண்டும்.
பொதுவாக, குலதெய்வம் என்பது நம் பூர்வீகக் கிராமங்களில் இருக்கலாம். அந்த கிராமங்களில் உள்ள குலதெய்வக் கோயிலுக்கு மின் வசதி, தண்ணீர் வசதி, குடிநீர் குழாய் வசதி என ஏதேனும் திருப்பணிகள் செய்துகொடுக்கவேண்டும். இதனால் நம் குலதெய்வம் மகிழ்ந்து அருளுவார்கள் என்பது ஐதீகம்.
குலதெய்வத்தை ஊருக்குச் சென்று, கோயிலுக்குச் சென்றுதான் வழிபடவேண்டும் என்பதில்லை. வீட்டில் இருந்தபடியே வழிபடலாம். இந்தநாள் அந்தநாள் என்றில்லாமல், எல்லாநாளும் வழிபடலாம்.


மனதில் ஏதேனும் குழப்பம், உறவுகளிடையே சிக்கல், வீட்டில் பெரியவர்களுக்கு ஆரோக்கியக் குறைபாடு, அடிக்கடி மருத்துவச் செலவு, காரியங்கள் பாதியில் நிற்கும் சோகம், வீட்டில் சுபகாரியம் நடக்காமல் தள்ளிப் போகும் அவலம் என்றிருந்தால், வீட்டில் குளிர்ந்த மாலை வேளையில், சந்திரோதயத்துக்குப் பிறகு, விளக்கேற்றி, குலதெய்வத்தை நினைத்து குடும்ப சகிதமாக வழிபடவேண்டும்.
மஞ்சள் துணியில் 11 ரூபாய் முடிந்து வைத்து, குலதெய்வத்துக்கு என பூஜையறையில் வைத்துவிடுங்கள். உங்கள் பிரார்த்தனைகளை உங்கள் குலதெய்வத்திடம் சொல்லி முறையிட்டு வேண்டிக்கொள்ளுங்கள்.
சர்க்கரைப் பொங்கல், பால் பாயசம் என இனிப்புகளை, நைவேத்தியம் செய்து அக்கம்பக்கத்தாருக்கு வழங்கலாம்.
குலதெய்வம் ஒருபோதும் நம்மைக் கைவிடாது. நம்மையும் நம் வம்சத்தையும் காப்பதே குலதெய்வத்தின் தலையாயக் கடமை என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x