Last Updated : 25 Jun, 2020 10:30 AM

 

Published : 25 Jun 2020 10:30 AM
Last Updated : 25 Jun 2020 10:30 AM

ஆனி மகம் ; வாதவூர் நாயகனுக்கு குருபூஜை

வாதவூரார் என்றும் வாதவூர் தலைவன் என்றும் போற்றப்படுகிற மாணிக்கவாசகருக்கு இன்று குருபூஜை. சதாசர்வ காலமும் சதாசிவத்தையே தொழுத மாணிக்கவாசகரை திருவாசகம் பாடி போற்றுவோம். திருவெம்பாவை பாடி வணங்குவோம்.
மதுரையில் இருந்து மேலூர் செல்லும் வழியில் உள்ளது ஒத்தக்கடை. இங்கிருந்து கிளை பிரிந்து செல்லும் சாலையில், திருமோகூர் திருத்தலத்தையெல்லாம் கடந்து,சுமார் 20 கி.மீ. தொலைவு பயணித்தால், திருவாதவூர் எனும் திருத்தலத்தை அடையலாம்.
அழகிய ஊர். சிறிய கிராமம். இந்த கிராமத்தின் அளவில் பாதியாக கோயில் அமைந்துள்ளது. அற்புதமான இந்தக் கோயில் பல சாந்நித்தியங்களைக் கொண்ட கோயிலாக, தலமாக, ஆலயமாக திகழ்கிறது.
இதுதான்.. மாணிக்கவாசகர் அவதரித்த பூமி. சிதம்பரம் திருத்தலத்துக்கும் மாணிக்கவாசகருக்கும் தொடர்பு உண்டு. பாண்டிய மன்னனின் சபையில் மந்திரியாக இருந்தவர். அப்போது வரி வசூலித்த பணத்தைக் கொண்டு, குதிரை வாங்க வைத்திருந்த பணத்தைக் கொண்டு ஆவுடையார்கோவில் திருப்பணிகளை மேற்கொண்டவர். பிறந்த ஊரான, திருவாதவூரில் சிவனாரைத் தொழுது கொண்டே இருந்தவர்.
மாணிக்கவாசகரின் அவதாரத் தலமான, இங்கே சனிபகவானின் வாத நோயை சிவனார் தீர்த்தருளினார். அதனால்தான் இந்த ஊருக்கு வாதவூர், திருவாதவூர் என திருநாமங்கள் அமைந்ததாகச் சொல்கிறது புராணம். எனவே, வாத நோய் உள்ளவர்கள், கைகால்களில் குடைச்சல் என அவதிப்படுபவர்கள் இங்கு வந்து வேண்டிக்கொண்டால், தீராத நோயும் தீரும். அவர்களுக்காக எவர் வேண்டுமானாலும் வேண்டிக்கொள்ளலாம்.
வீட்டில் இருந்துகொண்டே, திருவாதவூர் சிவனாரை மனதார வேண்டிக்கொண்டால். திருவாசகமும் திருவெம்பாவையும் பாராயணம் செய்து வந்தால்... விரைவில் வாத நோய்கள் தீரும் என்பது ஐதீகம்.
மாணிக்கவாசகரின் குருபூஜை இன்று. ஆனி மாதம் மகம் நட்சத்திரத்தில், வருடந்தோறும் அவருக்கு சிறப்புற பூஜைகள் நடைபெறும்.
இந்தத் தலத்து நாயகன் சிவனாரின் திருநாமம் திருமறைநாதர். அம்பாளின் திருநாமம் வேதவல்லி. கோயிலுக்கு அருகில் மணிவாசகர் என்கிற மாணிக்கவாசகர் அவதரித்த இல்லம் இப்போது மாணிக்கவாசகரின் கோயிலாக எழுப்பப்பட்டு, அங்கே பூஜைகள் நடைபெறுகிறது.
வாதவூராரை, மணிவாசகரை குருபூஜை நாளில், மனதார வணங்குவோம். ஞானமும் யோகமும் பெறுவோம்!

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x