Last Updated : 23 Jun, 2020 05:49 PM

 

Published : 23 Jun 2020 05:49 PM
Last Updated : 23 Jun 2020 05:49 PM

பிரிந்த தம்பதியை சேர்த்து வைப்பாள் உறையூர் நாச்சியார்! 

திருச்சி ரயில் நிலையத்தில் இருந்து சுமார் 4 கி.மீ. தொலைவில் உள்ளது உறையூர் கமலவல்லி நாச்சியார் திருக்கோயில். கேட்டவர்க்கு கேட்டதையெல்லாம் வழங்கி அருளும் வரப்பிரசாதி என்று கமலவல்லி நாச்சியாரைப் போற்றுகின்றனர் பக்தர்கள்.
அரங்கன் என்கிற பரமாத்மாவை, கமலவல்லி எனும் ஜீவாத்மாவாக இருந்து, மன்னருக்கு மகளாக் அவதரித்து, திருமணம் புரிந்து கொண்டவளின் திருக்கோயில் இது. உறையூர் மன்னனின் இளவரசியாக மகாலக்ஷ்மியே அவதரித்த ஒப்பற்ற பூமி இது என்கிறது ஸ்தல புராணம்.
இங்கே கல்யாண விமானம் எனப்படும் கமல விமானத்தில் கோயில் கொண்டு தன்னை நாடி வருவோருக்கெல்லாம் அழகு ததும்பத் தரிசனம் தந்துகொண்டிருக்கிறார் கமலவல்லி நாச்சியார். வெளியூர் அன்பர்களுக்கு, இது கமலவல்லி நாச்சியார் கோயில். கமலவல்லித் தாயார் கோயில். ஆனால், உள்ளூர்க்காரர்கள், திருச்சிவாசிகள்... நாச்சியார்கோயில் என்றுதான் சொல்லுகிறார்கள்.
இங்கே உள்ள விமானம் கல்யாணவிமானம் என்பது போல் இங்கே உள்ள தீர்த்தம் கல்யாண தீர்த்தம் என்றே அழைக்கப்படுகிறது. சூரிய புஷ்கரணி என்றும் போற்றப்படுகிறது.
கமலவல்லி நாச்சியாரின் திருநட்சத்திரம்... ஆயில்யம். எனவே மாதந்தோறும் ஆயில்ய நட்சத்திரத்தன்று விசேஷ பூஜைகளும் சிறப்பு வழிபாடுகளும் விமரிசையாக நடைபெறுகின்றன. அதேபோல், பங்குனி உத்திரப் பெருவிழாவின் போது, ஆயில்ய நட்சத்திர நாளில், ஸ்ரீரங்கத்தில் இருந்து அரங்கன் இங்கே உறையூர் நாச்சியார்கோயிலுக்கு வருவார். அப்போது இருவருக்கும் திருமண வைபவம் சீரும் சிறப்புமாக நடைபெறுகிறது.
இந்த திருமண வைபவத்தை நேரில் வந்து தரிசித்துப் பிரார்த்தனை செய்துகொண்டால், விரைவில் கல்யாண மாலை தோள் சேரும் என்பது ஐதீகம்.
அதேபோல், மாதந்தோறும் ஆயில்ய நட்சத்திரநாளில், கமலவல்லி நாச்சியாரை மனமுருக வேண்டிக்கொண்டால், ஆயில்ய நட்சத்திரக்காரர்கள் தாயாரை ஆத்மார்த்தமாக பிரார்த்தனை செய்தால், அவர்கள் நினைத்ததெல்லாம் நிறைவேறும். காரியத்தில் இருந்த தடைகள் அனைத்தும் விலகும். வழக்கில் வெற்றிகிடைத்து இனிதே வாழ்வார்கள் என்பது உறுதி என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.
ஆயில்ய நட்சத்திர நாளில், நாச்சியார்கோவில் கமலவல்லி நாச்சியாரை வீட்டில் விளக்கேற்றி பிரார்த்தனை செய்து வேண்டிக்கொண்டால், சர்க்கரைப் பொங்கல் அல்லது புளியோதரை நைவேத்தியம் செய்து, இயலாதவர்களுக்கு உணவு வழங்கினால், பிரிந்த தம்பதி கூட விரைவில் ஒன்றுசேருவார்கள் என்பது ஐதீகம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x