

ஆனி மாத செவ்வாய்க்கிழமையில், ராகுகால வேளையில், துர்கையை மனதார நினைத்து எலுமிச்சை தீபம் ஏற்றுங்கள். வீட்டில் உள்ள திருஷ்டியெல்லாம் விலகும். எதிர்ப்புகள் அனைத்தும் காணமல் போகும். குடும்பத்தில் ஒற்றுமை மேலோங்கும்.
ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் அம்பாளுக்கு உரிய நாட்கள். அம்பிகையை வழிபடுவதற்கு உரிய அருமையான நாட்கள். செவ்வாய்க்கிழமையும் வெள்ளிக்கிழமையும் தேவியை மனதார வணங்கினால், மனோசக்தியை தந்திடுவாள் தேவி. மங்கலகரமான காரியங்களை நடத்திக் கொடுத்திடுவாள் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.
அம்பாள் ஸ்லோகங்களைப் பாராயணம் செய்வது விசேஷமானது. இன்னும் வீரியத்துடன் பலன்களைத் தரக்கூடியது. அபிராமி அந்தாதி பாராயணம் செய்து அம்பிகையை வழிபடலாம்.
அதேபோல், லலிதா சகஸ்ரநாமம் சொல்லி லலிதாம்பிகையை மனதாரப் பிரார்த்தனை செய்தால், மகத்தான பலன்களைப் பெறலாம்.
லலிதாம்பிகைக்கு, தமிழகத்தில் ஆலயம் அமைந்துள்ளது, தெரியும்தானே. மயிலாடுதுறைக்கு அருகில் பேரளத்துக்கு அருகில் உள்ளது திருமீயச்சூர். இங்கே அம்பாளின் திருநாமம் லலிதாம்பிகை. அம்பாளுக்கு பிரார்த்தனை செய்துகொண்டு, லலிதாம்பிகைக்கு கொலுசு வழங்குவார்கள் பக்தர்கள். நீங்களும் அம்பாளை மனதார, ஆத்மார்த்தமாக வேண்டிக்கொண்டு, கொலுசு வழங்குவதாக வேண்டிக்கொள்ளுங்கள். உங்கள் குறைகளையெல்லாம் நிவர்த்தித்துத் தருவாள் அம்பிகை.
முக்கியமாக, செவ்வாய்க்கிழமை, வெள்ளிக்கிழமை நாட்களின் ராகுகாலம் ரொம்பவே விசேஷம். ராகுகால வேளையில், சக்தி மிக்க நாயகியாகத் திகழும் துர்காதேவிக்கு விசேஷ பூஜைகள் நடைபெறும்.
துன்பமெல்லாம் அகற்றும் துர்கையை, ராகுகாலவேளையில் (மாலை 3 முதல் 4.30 வரை) வழிபடுங்கள். எலுமிச்சை தீபமேற்றி வழிபடுங்கள். செந்நிற மலர்கள் சூட்டுங்கள். உங்கள் வாழ்வின் சிக்கல்களையெல்லாம் தீர்த்தருள்வாள் துர்காதேவி. குடும்பத்தில் ஒற்றுமையை பலப்படுத்தித் தருவாள். குடும்பத்தை மேன்மையாக்குவாள். எதிர்ப்புகளை இல்லாது செய்வாள்.