சனீஸ்வரரை ’பொங்கு சனி’யாக மாற்றிய திருக்கொள்ளிக்காடு!  - சூரியனுக்கு வரம் தந்த அக்னீஸ்வரர்

சனீஸ்வரரை ’பொங்கு சனி’யாக மாற்றிய திருக்கொள்ளிக்காடு!  - சூரியனுக்கு வரம் தந்த அக்னீஸ்வரர்
Updated on
1 min read

சூரியனாருக்கு வரம் தந்த அக்னீஸ்வரர் கோயில், திருக்கொள்ளிக்காடு எனும் தலத்தில் அமைந்துள்ளது. சனீஸ்வரர் தவமிருந்து வழிபட்டதால், பொங்கு சனீஸ்வரர் எனும் பெருமை பெற்ற திருத்தலமும் இதுதான்! பொங்கு சனியை நினைத்து எள் தீபம் ஏற்றுங்கள்.


வெப்பத் தகிப்பை யாரால்தான் தாங்கிக் கொள்ளமுடியும். சூரியனாரின் மனைவி உஷாவால் சூரியனாரின் உஷ்ண உக்கிரத்தைத் தாங்கிக் கொள்ளமுடியவில்லை. பக்கத்தில் நெருங்கமுடியாமல் மருகினார். நிழலாக உள்ள சாயாதேவியை சூரியனாருக்கு மணம் செய்துவைத்தார். சாயாவாலும் சூரியத் தகிப்பை தாங்கமுடியவில்லை.
இதனால் பாவம்... சூரியனார் நொந்துபோனார். என்ன செய்வது எனத் தெரியாமல், திருக்கொள்ளிக்காடு எனும் திருத்தலத்துக்கு வந்து சிவனாரை நினைத்து தவம் புரிந்தார். சூரிய பகவானின் தவத்தில் மகிழ்ந்த ஈசன், சூரியனாருக்கு வரமளித்தார். அதன்படி சூரியனார் - உஷா தம்பதிக்கு எமதருமர், சூரியனார் - சாயா தம்பதிக்கு சனீஸ்வரர் மகனாக அவதரித்தார்கள் என்கிறது புராணம்.


நவக்கிரகங்களில் ஒரு கிரகமாக இடம்பிடித்தார் சனீஸ்வரர். ஆனாலும் அவருக்கு ஒரு வருத்தம்... தன்னைக் கண்டு எல்லோரும் நடுநடுங்கிப் போகிறார்களே என்று! தந்தை காட்டிய வழியாக, திருக்கொள்ளிக்காடு திருத்தலத்துக்கு வந்தார். கடும் தவம் புரிந்தார். சிவபூஜைகள் செய்தார். இதனால் சிவனருள் பெற்று, பொங்கு சனியானார்.
வெப்பத் தகிப்பு கொண்ட சூரியனார் வணங்கி வழிபட்ட திருத்தலம் என்பதால் சிவனாருக்கு அக்னீஸ்வரர் எனும் திருநாமம் அமைந்ததாகவும் சொல்வார்கள். அக்னிப் பிழம்பென சனீஸ்வரருக்கு காட்சி தந்து அருளியதால் இந்தப் பெயர் அமைந்ததாகவும் ஸ்தல புராணம் தெரிவிக்கிறது.


திருவாரூரில் இருந்து திருத்துறைப்பூண்டி செல்லும் வழியில், 22 கி.மீ. தொலைவில் உள்ளது திருக்கொள்ளிக்காடு. இங்கே சிவனாரின் திருநாமம் - அக்னீஸ்வரர். முக்கியமாக, பொங்கு சனி பகவான் தனிச்சந்நிதியில் காட்சி தருகிறார் இங்கே! கைகளில், கலப்பை, காகத்தின் சின்னம்பொறிக்கப்பட்ட கொடி, அபய வரத முத்திரை என காட்சி தருகிறார்.

இன்னொரு சிறப்பு... சனீஸ்வரருக்கு அருகில் தனிச்சந்நிதியில் கோயில் கொண்டிருக்கிறார் ஸ்ரீமகாலட்சுமித் தாயார். எனவே, திருக்கொள்ளிக்காட்டில் பொங்கு சனீஸ்வரரையும் மகாலக்ஷ்மி தாயாரையும் மனதார வேண்டிக்கொண்டாலே, மங்கல காரியங்கள் சீரும் சிறப்புமாக நடைபெறும். ஐஸ்வர்ய கடாக்ஷம் பெருகும் என்பது ஐதீகம். கிரக தோஷங்கள் அனைத்தும் விலகிவிடும் என்கிறார்கள் பக்தர்கள்.


திருக்கொள்ளிக்காடு பொங்கு சனி பகவானை மனதார வேண்டிக்கொள்ளுங்கள். ஒவ்வொரு சனிக்கிழமையும் அவரை நினைத்து விளக்கேற்றுங்கள். எள் தீபம் ஏற்றி வழிபடுவது நல்லது. பிறகொரு நாளில், திருக்கொள்ளிக்காடு சென்று அக்னீஸ்வரரையும் பொங்கு சனீஸ்வரரையும் கண்ணாரத் தரிசித்து பிரார்த்தனை செய்யுங்கள். கஷ்டமெல்லாம் தீரும். கவலைகள் அனைத்தும் பறந்தோடும்!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in