

சேலம் மாவட்டம் தாரமங்கலம் அணைமேடு ராஜமுருகன் கோயிலில் அமைக்கப்பட்டுள்ள 56 அடி உயர முருகன் சிலைக்கு நேற்று கும்பாபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அரோகரா முழக்கமிட்டு வழிபட்டனர்.
சேலம் மாவட்டம் தாரமங்கலம் அணைமேடு ராஜமுருகன் கோயிலில் 56 அடி உயர முருகன் சிலை பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு எழுப்பப்பட்ட இந்த முருகன் சிலையின் முக அமைப்பு மாறுபட்டு இருந்தது. முருகன் சிலை முக அமைப்பு குறித்து எதிர்மறை விமர்சனங்களை முன் வைத்து பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டனர்.
இதனால், சர்ச்சை ஏற்பட்டதையடுத்து, முருகன் சிலை முக அமைப்பை மறு சீரமைப்பு செய்யும் பணியில் கோயில் நிர்வாகத்தினர் ஈடுபட்டனர். இதன்படி, 56 அடி உயர முருகன் சிலை முகம் மறுவடிவமைப்பு செய்து, அழகுற உருவம் உருவாக்கப்பட்டது. இதையடுத்து, நேற்று கோயில் கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடந்தது.
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு முருகனுக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேகம், ஆராதனை நிகழ்ச்சிகள் நடந்தன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, அரோகரா முழக்கமிட்டு முருகனை வழிபட்டனர்.