Last Updated : 17 Jun, 2020 10:47 AM

 

Published : 17 Jun 2020 10:47 AM
Last Updated : 17 Jun 2020 10:47 AM

குறைகள் தீர்க்கும் குரு வார பிரதோஷம்

குரு வாரம் என்று சொல்லப்படும் பிரதோஷம் வருகிறது. இந்தப் பிரதோஷ நன்னாளில், சிவபெருமானை ஆத்மார்த்தமாக வேண்டுங்கள். பசுக்களுக்கு அகத்திக்கீரை வழங்குங்கள். நம் குறைகளையும் கவலைகளையும் தீர்த்தருள்வார் சிவனார்.


ஒவ்வொரு மாதமும் இரண்டு பிரதோஷங்கள் உண்டு. அமாவாசைக்கு முன்னதாக மூன்றாம் நாளில், பிரதோஷம் வரும். அதேபோல, பெளர்ணமிக்கு மூன்று நாள் முன்னதாக பிரதோஷம் வரும். மாதந்தோறும் வருகிற இரண்டு பிரதோஷத்தின் போதும், சிவபெருமானுக்கு சிறப்பு அபிஷேகங்களும் ஆராதனைகளும் நடைபெறும்.
முக்கியமாக அன்றைய தினத்தில், பிரதோஷ நாயகன், சிவாலயத்தில் கொடிமரத்துக்கு அருகில் இருக்கும் நந்திதேவர்தான். அன்றைய நாளில், நந்திதேவருக்கு 16 வகையான அபிஷேகங்கள் நடைபெறும்.


பிரதோஷ காலம் என்பது, மாலை 4.30 முதல் 6 மணி வரை. இந்தக் காலத்தில்தான் பூஜைகள் நடைபெறும். பிரதோஷத்தன்று சிவபூஜையில் கலந்துகொண்டு தரிசிப்பதும் சிவநாமம் சொல்லி வழிபடுவதும் பாவங்களைப் போக்கி புண்ணியத்தைத் தந்தருளும் என்பது ஐதீகம்.


பிரதோஷநாளில் விரதம் மேற்கொண்டு சிவ பூஜை செய்வார்கள் சில பக்தர்கள். மாத சிவராத்திரிக்கு விரதம் மேற்கொள்வது போல், பிரதோஷத்திலும் விரதம் மேற்கொள்வார்கள்.


சனிப் பிரதோஷம் சர்வ பாபவிமோசனம் என்பார்கள். அதேபோல், சோம வாரம் எனப்படும் திங்களன்று வரும் பிரதோஷமும் மிகுந்த விசேஷத்துக்கு உரியவை. தடைகள் யாவும் நீங்கிவிடும் என்பார்கள்.


வியாழக்கிழமையை குருவாரம் என்பார்கள். குருவார வியாழக்கிழமையில், பிரதோஷநாளில், சிவனாரை நினைத்து வீட்டில் விளக்கேற்றுங்கள். சிவ ஸ்துதி பாராயணம் செய்யுங்கள். ருத்ரம் சொல்லி வழிபடுங்கள்.


நாளைய தினம் வியாழக்கிழமை (18.6.2020), பிரதோஷம். குரு வார பிரதோஷம். மாலை 4.30 முதல் 6 மணிக்குள் வீட்டில் விளக்கேற்றுங்கள். சிவனாரை நினைத்து பூஜை செய்யுங்கள். தயிர்சாதம் நைவேத்தியம் செய்யுங்கள். பாயசம் நைவேத்தியம் செய்வதும் விசேஷம்.


பிரதோஷ நாளில், பசுவுக்கு உணவளிப்பதும் அகத்திக்கீரை வழங்குவதும் வீட்டு தரித்திரத்தை விலக்கும். கடன் முதலான பிரச்சினைகள் தீரும்.


நமசிவாயம் சொல்லி, சிவனாரை வணங்குங்கள். எல்லா நன்மைகளும் கிடைக்கப் பெறுவீர்கள். குறைகள் அனைத்தும் நீங்கப் பெறுவீர்கள்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x