

ஆனி மாத புதன் கிழமையில் ஏகாதசியும் வரும் அற்புதநாளில், மகாவிஷ்ணுவை வழிபடுவோம்.
புதன் கிழமை பெருமாளுக்கு உரிய, அவரை வணங்கி வழிபடுவதற்கு உரிய அருமையான நாள். அதேபோல், மாதந்தோறும் வருகிற ஏகாதசியும் சிறப்புமிக்க நாள். பெருமாளை வழிபடுவதற்கு உரிய நாள்.
மாதந்தோறும் வரும் ஏகாதசியில், மகாவிஷ்ணுவை விரதம் மேற்கொண்டு பிரார்த்திப்பார்கள் பக்தர்கள். காலை முதலே விரதமிருப்பார்கள். விஷ்ணு சகஸ்ரநாமம் உள்ளிட்ட திருமாலின் திருநாமங்களைச் சொல்லி வேண்டுவார்கள். மகாவிஷ்ணுவையும் மகாலக்ஷ்மியையும் பூஜிப்பார்கள். லக்ஷ்மி அஷ்டோத்திரம் சொல்லி பூஜை செய்வார்கள்.
வீட்டில், காலையும் மாலையும் விளக்கேற்றுவார்கள். பரந்தாமனின் நாமாவளியைச் சொல்லி, துளசி மாலை சார்த்தி மனதார வேண்டிக்கொள்வார்கள். அப்போது பெருமாளுக்கு உகந்த புளியோதரை அல்லது சர்க்கரைப் பொங்கல் அல்லது தயிர்சாதம் நைவேத்தியம் செய்து, அக்கம்பக்கத்தாருக்கு வழங்குவார்கள்.
இயலுமெனில், அன்றைய நாளில், நான்குபேருக்கேனும் உணவுப் பொட்டலம் வழங்கலாம்.
நாளைய தினம் 17.6.2020 அன்று புதன்கிழமை. பெருமாளுக்கு உரிய நன்னாள். அதேபோல் நாளைய தினம் சர்வ ஏகாதசி. எனவே, ஸ்ரீரங்கம் பெருமாள், திருமலை திருப்பதி வேங்கடவன், ஸ்ரீவில்லிபுத்தூர் ரங்கமன்னார், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி, குணசீலம் பிரசன்ன வேங்கடாசலபதி உள்ளிட்ட பல தலங்களின் பெருமாளை மனதால் நினைத்து, வீட்டில் விளக்கேற்றுங்கள்.
காலையும் மாலையும் விளக்கேற்றுங்கள். துளசி சார்த்துங்கள். முக்கியமாக, துளசி தீர்த்தம் ஏகாதசி நாளில் பருகுவது நம் ஆத்மாவை சுத்தம் பண்ணி, பாவங்களைப் போக்கி அருளக்கூடியது. ஏகாதசி விரதம் மேற்கொள்ள இயலும் எனில், விரதமிருக்கலாம். மற்றபடி, வயதானவர்களும் குழந்தைகளும் மாத்திரைகள் உட்கொள்பவர்களும் பெருமாளை நினைத்து தெரிந்த ஸ்லோகங்களை, மந்திரங்களை, விஷ்ணு சகஸ்ர நாமங்களைப் பாராயணம் செய்தாலே போதுமானது.
ஆனி மாத ஏகாதசியானது புதன்கிழமையுடன் இணைந்து வருகிற அற்புத நன்னாளில், மகாவிஷ்ணுவை மனதார ஸேவிப்போம். மகாலக்ஷ்மித் தாயாரை வணங்குவோம். தடைப்பட்ட மங்கல காரியங்களை நடத்தி அருள்வார்கள். இல்லத்தில் தம்பதி ஒற்றுமையை பலப்படுத்துவார்கள்.