

நாளை தொடங்குகிற வாரத்தில் மூன்று தர்ப்பணங்கள் செய்யவேண்டும். தமிழ் மாதப் பிறப்பு, அமாவாசை, சூரிய கிரகணம் மூன்றும் அடுத்த வாரத்தில் வருகின்றன. எனவே மூன்று தர்ப்பணங்களை, மூன்று நாட்களிலும் செய்யவேண்டும், அப்போதைய பிரார்த்தனை துஷ்ட சக்திகளை முழுவதும் அழிக்க வல்லவை என்றும் அறிவுறுத்துகிறார்கள் ஆச்சார்யர்கள்.
வருடம் ஒன்றுக்கு, மொத்தம் 96 தர்ப்பணங்கள் உண்டு என்றும் அந்த நாட்களில், பித்ரு வழிபாடு செய்யவேண்டும் என்றும் வலியுறுத்துகிறது தர்ம சாஸ்திரம்.
தமிழ் மாதப் பிறப்பு, மாதந்தோறும் வருகிற அமாவாசை, மகாளய பட்சத்தின் 15 நாட்கள், கிரகணகாலங்கள், திதி முதலான நாட்கள் முதலான நாட்களில், தர்ப்பணம் செய்யவேண்டும், முன்னோர்களை வணங்கவேண்டும், காகங்களுக்கு உணவிட வேண்டும், இயலாதவர்களுக்கு உணவு வழங்கவேண்டும் என்று ஞானநூல்களும் அறிவுறுத்துகின்றன.
அதன்படி, நாளைய தினம் திங்கட்கிழமை 15.6.2020 தமிழ் மாதப் பிறப்பு. அதாவது ஆனி மாதப் பிறப்பு. ஒவ்வொரு தமிழ் மாதப் பிறப்பிலும் தர்ப்பணம் முதலான முன்னோர் வழிபாடுகளைச் செய்யவேண்டும். நாளைய தினம் மறக்காமல் தர்ப்பணம் செய்யவேண்டும். முன்னோரை வணங்கி வழிபட வேண்டும்.
அடுத்ததாக, வருகிற 20.6.2020 அமாவாசை. பொதுவாகவே, அமாவாசை என்பது முன்னோருக்கான நாள் என்கிறார்கள் ஆச்சார்யர்கள். சாஸ்திரம் இதுகுறித்து நிறையவே விளக்கியுள்ளது. எனவே, 20ம் தேதி சனிக்கிழமை அன்று அமாவாசை நாளில், முன்னோர் வழிபாட்டை அவசியம் மேற்கொள்ளவேண்டும். தர்ப்பணம் செய்யவேண்டும். அவர்களை மனதில் நினைத்து, இயலாதவர்களுக்கு உணவு வழங்கலாம்.
மூன்றாவதாக, 21ம் தேதி சூரிய கிரகணம். கிரகணத்தின் போது தர்ப்பணம் செய்யவேண்டும் என்கிறது சாஸ்திரம். 21ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று கிரகண தர்ப்பணம் மேற்கொள்ளவேண்டும். அந்தநாளில், பித்ருக்களை நினைத்து தானம் செய்யவேண்டும். இயலாதவர்களுக்கு உணவு வழங்க வேண்டும்.
மாதப் பிறப்பு, அமாவாசை, கிரகணம் ஆகிய மூன்று நாட்களிலும் மறக்காமல், தர்ப்பணம் முதலான முன்னோர் வழிபாட்டைச் செய்யுங்கள். அப்போது நம் பிரார்த்தனைக்கு இன்னும் வலிமை அதிகமாகும். வாழ்வில் வளமும் நலமும் பெருகும். தீய சக்திகளின் தாக்கம் முற்றிலும் அழியும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.