

ஆராட்டுவிழாவில் அன்னதானம் செய்வோம். உலக நலனுக்காக ஐயப்பனை வேண்டுவோம் என்று ஐயப்ப பக்தரும் உபந்யாசகருமன அரவிந்த் சுப்ரமணியம் வேண்டுகொள்விடுத்துள்ளார்.
இதுகுறித்து அரவிந்த் சுப்ரமணியம் தெரிவித்ததாவது: கலியுகத்தின் கண்கண்ட தெய்வம் ஐயப்ப சுவாமி. பிரத்யட்ச தெய்வம் ஐயப்பசுவாமி. பேசும் தெய்வமாய் அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகனாக விளங்கும் சபரிநாதனின் திருச்சந்நிதி வரும் ஜூன் மாதம் 14ஆம் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது.
அதையடுத்து பகவான் ஸ்ரீ தர்மசாஸ்தாவிற்கு வரும் ஜூன் 19ஆம் தேதி ஆராட்டு வைபவமானது கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதை முன்னிட்டு, திருவிதாங்கூர் தேவசம் போர்டு ஊழியர்களின் உரையாடலின் பேரில் சில முக்கிய முடிவுகளை எடுத்துள்ளது நிர்வாகம்.
ஆனி மாத பூஜைக்காக அதாவது ஜூன் மாதம் 14ம் தேதி சபரிமலை ஸ்ரீ ஐயப்ப சுவாமி கோயிலில் திவ்ய சுந்தரத் திரு நடையானது திறக்கப்பட உள்ளது. அதனைத் தொடர்ந்து ஜூன் மாதம் 19ம் தேதி ஆராட்டு வைபவத்திற்காக ஆலய முகப்பில் உள்ள கொடி மரத்தில் உற்ஸவ வழிபாட்டிற்காக கொடியேற்றம் நடைபெறும்.
27ம் தேதி பள்ளி வேட்டையும் 28ம் தேதி சபரிமலையில் மிகவும் பிரசித்தி பெற்ற ஆராட்டு வைபவம் பம்பையில் சிறப்புடன் நடைபெறும்.
ஆனி மாத பூஜைக்காக 14ம் தேதி நடை திறக்கப்படும். கோயிலின் நடை ஆராட்டு உற்ஸவ காலம் முடியும் வரை அதாவது ஜூன் 14 தேதிமுதல் 28 தேதி வரை திறந்திருக்கும்.
பக்தர்களுக்கு அனுமதி உண்டா இல்லையா என்று இன்னும் சரிவர தீர்மானிக்கப்படவில்லை. எனவே வரும் காலங்களில் இதைப்பற்றிய முடிவுகள் எடுக்கப்பட்டு பக்தர்களுக்கு அறிவிக்கப்படும் என்று திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் வாசு தெரிவித்துள்ளார்.
மக்களை அச்சுறுத்தும் கரோனா காலம் என்பதால் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட இதுவும் ஓர் முக்கிய காரணமாக கருதப்படுகிறது.
எனவே பக்தர்கள் அனைவரும் பகவானிடம் வேண்டிக்கொள்வோம். தன்வந்திரி மூர்த்தியாக இருக்கும் நமது கலியுகத்தின் கண்கண்ட தெய்வம் ஸ்ரீ தர்ம சாஸ்தா இந்த நோயை அழித்து நமக்கெல்லாம் அருள்புரிவான்.
ஆகவே, லட்சக்கணக்கான, கோடிக்கணக்கான ஐயப்ப பக்தர்கள், ஆராட்டு விழா காலங்களில், ஐயப்பனை வீட்டிலிருந்தபடியே வணங்குவோம். அன்னதான பிரபுவான ஐயப்பனை வேண்டிக்கொண்டு, இயலாதவர்களுக்கு புளியோதரை, தயிர்சாதம், எலுமிச்சை சாதம் என ஒவ்வொரு நாளும் நான்குபேருக்கேனும் வழங்குவோம்.
சபரிமலை நாயகன், இந்த அகிலத்தைக் காக்க பிரார்த்திப்போம்.