வைகாசி வெள்ளி; பெளர்ணமி; அம்பிகையைக் கொண்டாடுவோம்!  நேரலையில்... வீட்டிலிருந்தே  வடிவுடையம்மனை தரிசியுங்கள்

வைகாசி வெள்ளி; பெளர்ணமி; அம்பிகையைக் கொண்டாடுவோம்!  நேரலையில்... வீட்டிலிருந்தே  வடிவுடையம்மனை தரிசியுங்கள்
Updated on
2 min read

வைகாசி மாதத்தின் வெள்ளிக்கிழமையில், பெளர்ணமி நன்னாளில் அம்பிகையைக் கொண்டாடுவோம். ஆனந்தமாய் வணங்கி, அற்புதமான அருளைப் பெறுவோம்.
வைகாசி மாதம் அற்புதமான மாதம். கோடையின் நிறைவு மாதம். பூமியானது வெப்பத்தை உள்ளே கிரகித்து, பாளம் பாளமாக வழியை ஏற்படுத்தும் மாதம் இதன் பிறகு வருகிற ஆனியிலும் ஆடியிலும் காற்று வீசும். அந்தக் காற்று பூமிக்குள் இறங்கும். வெப்பமும் காற்றும் சூழ்ந்திருக்கும் வேளையில், விதையை விருட்சமாக்குவதற்கான பலத்துடனும் உறுதியுடனும் பூமி இளகி நிற்கும். அதனால்தான், ஆடிப் பட்டம் தேடி விதை என்று சொல்லிவைத்தார்கள்.


அப்படி ஆடியில் விதைக்க, வைகாசி கோடை பெரிதும் உதவும். கிட்டத்தட்ட பூமிக்கே அஸ்திவாரம் போடும் மாதம் இது. இந்த மாதத்தில் நாம் செய்யும் காரியங்கள் அனைத்தும் வளரும். வாழவைக்கும். வெற்றியைத் தரும் என்பது உறுதி.


வைகாசி மாதத்தின் வெள்ளிக்கிழமை ரொம்பவே விசேஷம். பூமியை பூமி மாதா என்கிறோம். உமையவளை பராசக்தி என்கிறோம். மூவுலகையும் காக்கும் தேவி, என்று சக்தியைக் கொண்டாடுகிறோம். இது சக்திக்கு உரிய நன்னாள்.


அதுமட்டுமா? பெளர்ணமி என்பதும் வழிபாட்டுக்கு உரிய அற்புதமான நாள். சந்திரன் முழுநிலவென பிரகாசிக்கும் நாள். சந்திரனை, மனோகாரகன் என்கிறோம். நம் மனதை ஆட்டிப் படைப்பவன் அவனே. இவன் மனது வைத்தால்தான், நம் மனமானது உற்சாகமாகவும் சோகமாகவும் மாறும். சந்திராஷ்டமம் என்பதும் இந்த குண ஆதிக்கத்தின் வெளிப்பாடுதான்!


ஆகவே, சந்திரன் முழு வெளிச்சத்தையும் தரக்கூடிய நாளான பெளர்ணமி, அம்பிகையைக் கொண்டாட உகந்த நாள். சிரசின் மேல் பிறையாய் வைத்திருப்பதால், சிவனாரையும் வழிபடவேண்டிய நாள். புத்தியில் தெளிவு இருந்தால்தான் செயலில் தெளிவு இருக்கும்.


புத்தி என்பது ஞானம். ஞானம் என்பதைத் தருவது சந்திரன். சந்திரன் அழகு மிளிரக் காட்சி தருவது பெளர்ணமியில். வெள்ளி என்பதற்கு சந்திரன், நிலவு என்றெல்லாம் அர்த்தம். மூன்று சக்திகளில், ஞானசக்தி மிக மிக அவசியம். அந்த ஞானசக்தியின் பிறப்பிடமாகவும் உறைவிடமாகவும் இருந்து அருள்பாலித்து வருகிறாள் வடிவுடையம்மன்.


சென்னை திருவொற்றியூரின் வடிவுடையம்மனை தரிசிக்க வேண்டிய அற்புத நாள் இன்று. வீட்டிலிருந்தே அவளை தரிசித்து, அன்னையின் பேரருளைப் பெறலாம் இன்று.
திருவொற்றியூர் திரிபுரசுந்தரி சமேத தியாகராஜ சுவாமி கோயில் நிர்வாகம், ஆன்லைனில் இன்று நேரலையில் அம்பிகைக்கான பூஜையை ஒளிபரப்புகிறது. வடிவு என்றால் அழகு. வடிவுடையம்மன் அழகி. பேரழகி. அவளின் அழகு ஒளிரும் தரிசனத்தைக் கண்ணாரக் காண்போம். ஞானசக்தி நாயகிக்கு நடைபெறும் பூஜையை கண் குளிர தரிசிப்போம். வீட்டிலிருந்தபடியே, நம் வீடும் நாடும் நலம் பெற வேண்டும் என பிரார்த்திப்போம்.


தீய சக்தியை விரட்டி, நல்லனவற்றை வழங்கி, நாட்டை சுபிட்சமாக்கு அன்னையே என மனதார வேண்டிக்கொள்வோம்.


https://www.youtube.com/c/ThiagarajaswamyVadivudaiyammanTempleOfficial என்ற YouTube channel மூலம், 05.06.2020 வெள்ளிக்கிழமை இன்று காலை 9.00 மணி முதல் 10.30 மணி வரை, நேரலை ஒளிபரப்பு மூலம், தரிசித்து அருள்மிகு திரிபுரசுந்தரி உடனுறை தியாகராஜ சுவாமியின் பேரருளைப் பெறலாம்.

மேற்படி YouTube channel-ஐ subscribe and share செய்யவும்.


வடிவுடை அரசியே... வளம் தந்து காத்தருள்வாய்!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in