

வைகாசி விசாக நாளில் (நாளைய தினம் 4.6.2020) வீட்டிலிருந்தபடியே தோரணமலை குமரக்கடவுளை மனதார வேண்டிக்கொள்ளுங்கள். வேண்டுவதையெல்லாம் தந்தருள்வான் வெற்றிவேலன்!
மேற்குத் தொடர்ச்சி மலையின் அழகே அழகுதான். அழகுக்கு அழகு சேர்க்கும் விதமாக ஒயில் காட்டி நிற்கிறது தோரண மலை. யானையைப் போன்று காட்சியளிப்பதால் ‘வாரண மலை’ என்றுதான் பெயர். வாரணம் என்றால் யானை. ஆனால், அடுத்தடுத்த காலகட்டங்களில் வாரணமலை தோரணமலை என்றாகிவிட்டது!
அழகு மலையில் அழகுறக் கோயில் கொண்டிருக்கிறான் அழகன் முருகன்.
தென்காசியில் இருந்து கடையம் செல்லும் சாலையில் அமைந்திருக்கிறது தோரணமலை. இந்த மலையின் உச்சியிலும் முருகன் கோயில்கொண்டிருக்கிறான். அடிவாரத்திலும் அவனுக்கொரு கோயில் உள்ளது. அகத்தியர் இங்கே தவமிருந்திருக்கிறார் என்கிறது ஸ்தல புராணம். மூலிகைகளைக் கொண்டு மருத்துவப் பணி செய்திருக்கிறார் என விவரிக்கிறது. அவருடைய சீடரான தேரையர் என்பவர், இங்கே மகா சமாதி அடைந்தார் என்கிறது ஸ்தல புராணம்.
இன்னொரு விஷயம்... சித்த புருஷர்கள் ஏராளமானோர் இங்கு வந்து கடும் தவம் புரிந்திருக்கிறார்கள். வழிபட்டிருக்கிறார்கள். எனவே தோரணமலையில், இன்றைக்கும் சித்த புருஷர்கள் சூட்சுமமாக இருந்து பூஜித்து வழிபடுவதாக ஐதீகம்!
இத்தனைச் சிறப்புகளுக்கெல்லாம் சிகரம் வைத்தது போல், மலையின் உச்சியில் உள்ள குகை ஒன்றில், கோயில் கொண்டிருக்கிறான் வேலவன்.
அடிவாரத்தில் கோயிலுக்கான நுழைவாயில் போன்று அழகிய தோரண வளைவு நம்மை வரவேற்கின்றன. சுற்றிலும் மலைமலையாய் சிகரங்கள். எங்கிருந்தோ வரும் பொதிகைத் தென்றல்... மலை மீது பட்டு, நம் முகத்தில் விழுந்து தலை கோதிவிடுகிறது. அடிவாரக் கோயிலில், முருகப்பெருமானுடன் வல்லப கணபதி தரிசனம் தருகிறார். தனிச்சந்நிதியில் குரு பகவான் அருள்பாலிக்கிறார். மகாலட்சுமி, சரஸ்வதி தேவி, சப்த கன்னியர், நாகர்கள், கன்னிமார் அம்மன், நவக்கிரகங்கள் என சந்நிதிகள் பல இருக்கின்றன. அடுத்து... சிவனார் மற்றும் கிருஷ்ண பரமாத்மாவின் சுதைச் சிற்பங்களும் இருக்கின்றன.
அடிவாரத்தில் இருந்து மலையேறுவதற்கு மொத்தம் 926 படிகள். வழியெங்கும் மூலிகைகளின் சுகந்தம், நாசியைத் தழுவி, நாபிக்கமலம் வரை சென்று தொட்டு, என்னவோ செய்கின்றன. நம் தீராத நோயையும் தீர்த்துவிடும். மனதின் பாரங்களையெல்லாம் அகற்றிவிடும்... அத்தனை சக்தி வாய்ந்ததாக இருக்கும் மூலிகை நறுமணம்... கோயிலுக்குச் செல்லும் போதே கிடைக்கிற அரிதான வரம் இது என்கிறார்கள் பக்தர்கள். சக்தியும் சாந்நித்தியமும் நிறைந்த திருக்கோயிலுக்கு ஒருமுறையேனும் வந்து தரிசித்தால் போதும்... நினைத்ததெல்லாம் நடத்தித் தருவான் வேலவன்.
ஊரடங்கு காலமெல்லாம் முடிந்து, தென்காசிப் பக்கம் வந்தால், குற்றாலம் பக்கம் வந்தால், தோரணமலை குமரனையும் தரிசியுங்கள். நம்மையும் நம் வாழ்வையும் குளிரச் செய்வான் தோரணமலை திருக்குமரன்!
வைகாசி விசாக நாளில் (நாளைய தினம் 4.6.2020) வீட்டிலிருந்தபடியே தோரணமலை குமரக்கடவுளை மனதார வேண்டிக்கொள்ளுங்கள். வேண்டுவதையெல்லாம் தந்தருள்வான் வெற்றிவேலன்!