

சமய வேற்றுமையின்றி சகல மக்களையும் மதித்துத் தம் செல்வத்தைப் போற்றி வழங்கிய பெருவள்ளல் சீதக்காதி. 1650களில் பிறந்த கீழக்கரையைச் சேர்ந்த வள்ளல் இவர்.
செத்தும் கொடைகொடுத்த சீதக்காதி எனப் போற்றிப் புகழப்படும் இந்த வள்ளலின் இயற்பெயர் செய்கு அப்துல் காதிர். அவருடைய தந்தையார் பெரியதம்பி மரைக்காயர். தாயார் முகம்மது பாத்திமா. அண்ணனும் தம்பியுமாக அவருக்கு இரு சகோதரர்கள் இருந்தனர்.
தென்காயலில் பிறந்து கீழக்கரைக்கு வந்தவர் இவர் என்ற குறிப்பும் உள்ளது. தென்காயல், பவுத்திரமாணிக்கம், அனுத்தொகை மங்கலம், செம்பிநாடு, நினைத்தது முடித்தான் பட்டினம், வகுதை, வச்சிரநாடு முதலிய பெயர்களும் கீழக்கரைக்கு உண்டு.
வணிகத்தில் சாதனை
சீதக்காதியின் முன்னோர்கள் கப்பல்களில் வெளிநாடுகளுக்குச் சென்று வணிகம் செய்த மரக்கலராயர் மரபைச் சேர்ந்தவர்கள். செல்வம் நிறைந்த அவர்கள் கீழக்கரையின் நிர்வாகத் தலைமையாளர்களாக விளங்கினார்கள். முன்னோர்கள் வழியில் சீதக்காதியும் வணிகத்தில் ஈடுபட்டு சாதனை படைத்தார்.
கீழக்கரை நுழைவாசலில் அமைந்துள்ள சிங்காரத் தோப்பு சீதக்காதியின் சொந்த இடமாகும். கடல் வணிகத்தின் மூலம் செய்கு அப்துல் காதிர் சீதக்காதி பெருமளவில் பொருளீட்டினார். சென்னையை மையமாகக் கொண்டு அக்காலத்தில் வணிகம் செய்துவந்த ஆங்கிலேயர்களுடன் நெருங்கிய தொடர்புகொண்டிருந்தார். அவர்களுக்குத் தேவையான மிளகு, அரிசி வினியோகத்தை முழுஅளவில் இவரே செய்துவந்தார்.
கல்லில் செதுக்கப்பட்ட 1200 பூக்கள்
வணிகத்துடன் சமய, இலக்கியப் பணிகளிலும் அதிக அக்கறை செலுத்திவந்தார் சீதக்காதி. கீழக்கரை ஜும்மா பள்ளி அவருடைய சமயத் திருப்பணிக்கு எடுத்துக்காட்டு. 390 ஆண்டுகளுக்கு முன் இந்தப் பள்ளிவாசலை அவர் கட்டினார். தொலைநோக்குடனும் பயபக்தியுடனும் கொடைநெஞ்சத்துடனும் இந்தப் பெருமகனார் பள்ளிவாசலைக் கட்டி முடித்து, தேவையான திருப்பணிகளையும் முறையாகச் செய்து அழகுபடுத்தினார்.
இங்கு 14 பள்ளிவாசல்கள் உள்ளன. அவற்றில் மணிமகுடம் போன்று சீதக்காதி வள்ளல் கட்டிய பெரிய குத்பா பள்ளி விளங்குகிறது. தென்னாட்டில் நிகரற்ற, பார்ப்பவர் மனதைக் கவரும் அழகிய வேலைப்பாடு பொருந்திய கருங்கற்களால் கட்டப்பட்ட பள்ளிவாசல் இதுவேயாகும். இந்த ஜும்மா மசூதிக்குள்ளே கற்களில் பூவேலை செய்யப்பட்டிருக்கிறது. இந்தப் பள்ளிவாசல் முழுவதும் 1,200 பூக்களுக்கு மேல் கற்களில் செதுக்கப்பட்டுள்ளன. இங்குள்ள ஒவ்வொரு சின்னஞ்சிறு சிற்ப வேலையும் ஒன்றுக்கொன்று மாறுபட்டிருப்பது வியக்கத் தக்கதாகும்.
கீழக்கரையில் அன்று முதல் வெள்ளிக்கிழமை தொழுகை இந்த ஜும்மா பள்ளியில் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
ராமநாதபுரத்தை ஆண்டுவந்த கிழவன் சேதுபதி எனும் ‘விசய ரகுநாதத் தேவர்' சீதக்காதியின் நெருங்கிய நண்பராக இருந்தார். அதனால் அவர், சேதுபதிக்கு ஆலோசனை வழங்கும் அமைச்சரைப் போல் விளங்கினார். அப்போது புதுப்பிக்கப்பட்ட அரண்மனைக்கும், கோட்டைக்கும் சீதக்காதி நிதியுதவி வழங்கினார். ராமநாதபுரம் கோயில் இவர் பொறுப்பிலேயே புதுப்பிக்கப்பட்டது. பல ஆலயத் திருப்பணிகளுக்கு உதவிய சீதக்காதி. ராமநாதபுரம், மதுரை பகுதிகளில் அன்னச் சத்திரங்களையும் அமைத்துத் தந்தார்.
அவர் காலத்தில் ஒருமுறை மிகப் பெரிய பஞ்சம் ஏற்பட்டது. உண்ண உணவின்றி மக்கள் தவித்தனர். பலர் உயிரிழந்தனர். இக்கட்டான அந்தப் பஞ்ச காலத்தில் ஏழை எளியோருக்குத் தங்கு தடையில்லாமல் உணவு வழங்கி உதவினார். சீதக்காதி அளித்த பேருதவியைப் படிக்காசுப் புலவர் விரிவாகப் பாடியிருக்கிறார்.
ஒரு தட்டிலே பொன்னும் ஒரு தட்டிலே நெல்லும் ஒக்கவிற்கும் கார்தட்டிய பஞ்ச காலத்திலே தங்கள் காரியப்பேர் ஆர்தட்டினும் தட்டு வராமலே அன்ன தானத்துக்கு மார்தட்டிய துரை மால் சீதக்காதி வரோதயனே.
வணிகத்தின் மூலம் ஈட்டிய பெருஞ்செல்வத்தை அனைவருக்கும் வழங்கி, “செல்வத்துப் பயனே ஈதல்” என்ற கொள்கைக்கு எடுத்துக்காட்டாகத் திகழ்ந்தார். சீதக்காதி தமிழ் வளர்த்த வள்ளலாகவும் போற்றப்படும் சீதக்காதி புலவர்கள் இலக்கியங்களைப் படைப்பதற்குப் பேராதரவு வழங்கினார். கொடை வள்ளலான அவரைச் சிறப்பிக்கும் பல சிற்றிலக்கியங்களையும், பாடல்களையும் புலவர்கள் இயற்றியுள்ளனர்.
முத்துக்களால் ஆன தஸ்பீஹ்
பதினேழாம் நுாற்றாண்டில் டெல்லியை ஆண்ட பேரரசர் அவுரங்கசீப், சீதக்காதி மீது பேரன்பும் பெருமதிப்பும் கொண்டிருந்தார். அதனால் சீதக்காதியை வங்காளத்தின் ஆளுநராக (கலீபா) நியமித்தார். அந்தப் பதவியை ஏற்றுச் சிறப்பித்த பிறகு சீதக்காதி தமிழகத்திற்குத் திரும்பி வந்தார். முத்துகளால் பின்னப்பட்ட ஜெபமாலையை அவுரங்கசீபுக்கு அவர் அனுப்பிவைத்தார். அதைப் பெற்றுக் கொண்ட அரசர் பெருமிதம் அடைந்தார். சீதக்காதிக்கு திருமணம் நடந்ததை திருமண வாழ்த்து நூல் எடுத்துரைக்கிறது.
அவருக்கு ஆண் சந்ததி இல்லை, பெண் குழந்தைகளே இருந்தனர் என்று கூறப்படுகிறது. இவரின் மகள்வழிச் சந்ததியார் இன்னும் கீழக்கரையில் வாழ்ந்து வருகின்றனர். வள்ளல் சீதக்காதி மரைக்காயர் கி.பி 1720-ம் ஆண்டில் காலமானார். அவரால் கட்டப்பட்ட ஜும்மா பள்ளி வளாகத்திலேயே அடக்கம் செய்யப்பட்டார். கடைச்சங்க காலத்திற்குப் பிறகு தமிழகத்தில் தனிப்பெரும் சிறப்புத் தொண்டாற்றிய வள்ளல் பெருமகனார் செத்தும் கொடைகொடுத்த கீழக்கரைசெய்கு அப்துல் காதிர் சீதக்காதியே என்று ஆய்வாளர்கள் சிறப்பித்துள்ளனர். .அவர் பெயரில் ராமநாதபும்-கீழக்கரை நெடுஞ்சாலையில் இருபது ஏக்கர் நிலப்பரப்பில் வள்ளல் சீதக்காதி நகர் அமைக்கப்பட்டுள்ளது.