Last Updated : 02 Jun, 2020 08:36 AM

 

Published : 02 Jun 2020 08:36 AM
Last Updated : 02 Jun 2020 08:36 AM

தனம், தானியம், ஐஸ்வர்யம் தரும் நிர்ஜல ஏகாதசி விரதம்!  - இன்று நிர்ஜல ஏகாதசி 

நிர்ஜல ஏகாதசி நாளில் விரதம் மேற்கொண்டால், புண்ணிய நதிகளில் நீராடிய பலன்கள் கிடைக்கும். தனம், தானியம், ஐஸ்வரியம் பெருகும். மகாவிஷ்ணுவின் திருப்பாதத்தை சரணடையலாம். இன்று 2.6.2020 செவ்வாய்க்கிழமை நிர்ஜல ஏகாதசி.


'ஜேஷ்ட மாதம்', வளர்பிறையில் (சுக்ல பட்சம்) வரக்கூடிய ஏகாதசியே பாண்டவ நிர்ஜல ஏகாதசி என்றும் நிர்ஜல ஏகாதசி என்றும் சொல்லப்படுகிறது.
நிர்ஜல ஏகாதசி பற்றி 'பிரம்ம வைவர்த்த புராணம்' விவரித்துள்ளது. ஸ்ரீ வியாஸதேவரிடம் பஞ்ச பாண்டவர்களில் ஒருவரான பீமன் எழுப்பிய வினாக்களும் (கலியுகத்தில் ஏகாதசி விரதம் இருக்க முடியாது என்ற நிலையில் இருக்கும் பலருக்காகவும்) அதற்கு வியாச மகரிஷி அளித்த விளக்கங்களையும் பார்ப்போம்.

ஒருமுறை யுதிஷ்டிரரின் தம்பிகளில் ஒருவரான பீமசேனன், தனது பாட்டனாரும், மிகச்சிறந்த ரிஷி முனிகளில் முதன்மையானவருமான ஸ்ரீ வியாச தேவரிடம் தனது சந்தேகத்தைக் கேட்டார்...


’’ரிஷிகளில் சிறந்த எமது பாட்டனாரே. வெகு நாட்களாக என் மனதில் இருக்கும் ஐயத்தைத் தீர்த்து வைக்க வேண்டுகிறேன். எமது தாய் குந்தி தேவி, எனது உடன்பிறந்தவர்கள் யுதிஷ்டிரர், அர்ஜுனன், நகுலன், சகாதேவன் ஆகியோர் மற்றும் பாஞ்சாலி இவர்கள் அனைவரும் பிரதி ஏகாதசி தோறும் விரதம் இருக்கின்றனர். ஏகாதசி விரதத்தை முறையாகக் கடைபிடித்து பகவான் கிருஷ்ண பரமாத்மாவை மகிழ்வித்து அவரது ஆசிர்வாதத்திற்கு உரியவர்கள் ஆகின்றனர். மேலும், என்னையும் ஏகாதசி விரதத்தை இருக்க வலியுறுத்துகின்றனர்.


நான் பகவான் விஷ்ணுவை மனதார பூஜிப்பேன். அவருக்கு உண்டான பூஜைகள் அனைத்தையும் செய்வேன். ஆனால் என்னால் ஒருவேளை கூட உணவு உண்ணாமல் இருக்க முடியாது. வாயுதேவரின் புத்திரனான 'சமானப்ராணா' (எந்தப் பொருளையும் செரிமானம் செய்யக்கூடிய வாயு) எனது வயிற்றில் உள்ளது. அதனால் என்னால் பசி தாங்க இயலாது. ஆகவே, பாட்டனார் அவர்களே, ஏகாதசி விரதம் கடைபிடிக்காமல் இருந்து, நான் முக்தி அடையும் யுக்தியை எனக்கு கூறுங்களேன்’ என்று பீமசேனன், ஸ்ரீ வியாசரிடம் கேட்டான்.

வியாச தேவர், ’’பீமா, நீ நரகத்திற்குச் செல்லாமல்,சொர்க்கத்திற்கு மட்டுமே செல்லவேண்டும் என்றால், பிரதி மாதம் இரண்டு ஏகாதசி விரதமும் கடைபிடித்தே ஆக வேண்டும். வேறு வழியே இல்லை’’ என அருளினார்.

பீமன் உடனே, ’’தயவு செய்து எனது நிலையைப் புரிந்து கொள்ளுங்கள். என்னால் ஒருவேளையே சாப்பிடாமல் இருக்கமுடியாது. நான் எப்படி வருடம் முழுவதும் 24 ஏகாதசி விரத நாட்களில் மூன்று வேளையும் உண்ணாமல் இருக்க முடியும் ? அக்னி எனது வயிற்றில் உள்ளது. நான் முழுவதும் உண்டால் மட்டுமே, எனது வயிற்றில் உள்ள அந்த அக்னி அடங்கும்’’ என்று விளக்கினான்.

பொதுவாக அக்னி மூன்று வகைப்படும். 'தவாக்னி' - மரங்களை எரிப்பதன் மூலம் வருவது. 'ஜாடராக்னி' - நமது வயிற்றின் உள்ளே இருந்து நாம் உண்ணும் அனைத்தையும் செரிக்க வைக்கக் கூடியது., 'வடவாக்னி' - இது சூடான மற்றும் குளிர்ந்த பனி ஒரே நேரத்தில் உராயும் பொழுது வரக்கூடியது, குறிப்பாக கடலின் மேல் ஏற்படும். இதில், ஜாடராக்னியின் உச்ச ட்ச விளைவாக, 'வ்ரிகா' எனும் எதனையும் உடனே செரிமானம் செய்யக்கூடிய அக்னி வடிவம் தான் பீமனின் வயிற்றில் இருந்தது. அதன் காரணமாகத்தான், மற்ற அனைவரையும் விட 100 மடங்கு அதிகம் சாப்பிட்டாலும் கூட, அவை உடனே செரிமானம் ஆகிவிடக்கூடிய சக்தி பீமனுக்குக் கிடைத்தது.

.

பீமன், ’’என் நிலையைப் புரிந்து உணர்ந்து, எனக்கேற்றாற் போல் ஏகாதசி விரதம் சொல்லுங்கள்’’ என வேண்டினான். ’’அன்று ஒருநாள் மட்டும், நான் முழுவதும் உண்ணாமல் இருக்க முயற்சி செய்கிறேன்’’ என உறுதியளித்தான்.

பீமனின் நிலை, வியாசருக்கு நன்றாகவே தெரியும். இருப்பினும், பீமனைப்போன்று கலியுகத்திலும் பலர் எல்லா ஏகாதசி நாட்களிலும் விரதம் இருக்கும் வாய்ப்பு இல்லாமல் இருப்பார்கள் என்பதைப் புரிந்துகொண்டார்.


பீமனுக்கும் நமக்குமாக வியாசர் அருளினார்...


’’பீமா, நான் உங்கள் அனைவருக்கும் வேத சாஸ்திர நெறிமுறைகளையும், பூஜா விதிகளையும் அனைத்து புராண விளக்கங்களையும் கூறியுள்ளேன். இருப்பினும், அடுத்து வரக்கூடிய கலியுகத்தில், இதனை அனைவரும் முறையாகக் கடைப்பிடித்து நரகத்தைத் தவிர்த்து சொர்க்கத்திற்குச் செல்லும் வாய்ப்பு மிகவும் குறைவே! அதற்கு எளிய உபாயமாகத்தான் பிரதி சுக்ல பட்ச ஏகாதசி மற்றும் கிருஷ்ண பட்ச ஏகாதசி விரதம் மானுடர்களுக்கு வரப்பிரசாதமாக வழங்கப்பட்டுள்ளது. நீ அதிலும் விலக்கு கேட்டு ஒரேயொரு ஏகாதசியை சொல்லச் சொல்கிறாய்.


சரி, உன்னைப்போன்று ஒவ்வொரு மாதமும் ஏகாதசி விரதம் இருக்க முடியாதவர்கள், சூரியன் ரிஷபத்தில் இருந்து மிதுனத்திற்கு பயணிக்கக்கூடிய ஜேஷ்ட மாதத்தில் சுக்ல பட்சத்தில் வரக்கூடிய ஏகாதசி விரதத்தை, உண்ணாமல் மட்டும் அல்ல, ஒரு துளி நீர் கூட அருந்தாமல் இருந்து கடைபிடிக்க வேண்டும்’’ என்றார். 'நீர் கூட அருந்தாமல்' என்று பொருள் படுவதால் இது நிர்-ஜல ஏகாதசி என்று ஆனதாக ஆச்சார்யர்கள் சொல்கிறார்கள்.


பின்னர், துவாதசி அன்று காலை குளித்த பின்னர் பகவான் விஷ்ணுவை பிரார்த்தனை செய்துவிட்டு, யாருக்கேனும் வஸ்திர தானம், குடை, செடுப்பு, கைத்தடி, பணம் தானம் தரலாம். பின்னர், அவர்களுக்கு தண்ணீர் வழங்கவேண்டும். உணவளிக்கவேண்டும். அதன் பின்னர், விரத நிறைவு செய்யவேண்டும்’’ என அருளினார்.


நிர்ஜல ஏகாதசி விரத பலன்கள்


நீர் கூட அருந்தாமல் மிகக்கடுமையாக இந்த விரதத்தை கடைபிடித்தால், அவர்களின் சகல பாவங்களும் நீங்கும். புண்ணிய நதிகளில் நீராடிய பலனைப் பெறுவார்கள். மேலும், பிரதி மாதம் சுக்ல பட்ச, கிருஷ்ண பட்ச ஏகாதசி விரதம் இல்லாமல் இருந்தாலும், அந்த நாளில் விரதமிருந்த பலன்களையும் பெறுவார்கள்.

நிர்ஜல ஏகாதசி விரதத்தை கடைப் பிடித்தவர்களுக்கு, தனம், தானியம் மற்றும் அனைத்து செல்வங்களும் வந்துசேரும். மேலும், அவர்களது இறப்பிற்குப் பின், அவர்களை அழைத்துச் செல்ல யமதூதர்கள் வர மாட்டார்கள். மாறாக விஷ்ணு தூதர்கள் வருவார்கள். அந்த ஆன்மா, விஷ்ணுவின் திருப்பாதத்தை அடையும்.


துவாதசியுடன் இணைந்து இருக்கும் இந்த ஏகாதசி நாளில் விரதம் இருந்து, அதன் பின்னர் ஆச்சார்யர்களுக்கு நீர், குடை, செருப்பு , கைத்தடி ஆகிய தானங்கள், முன்னோர்களுக்கு ஸ்ரார்த்தம் செய்த பலனைத்தரும்.


'ஜேஷ்ட சுக்ல ஏகாதசி' அல்லது 'நிர்ஜல ஏகாதசி' எனும் புண்ணிய நாளில் விரதத்தை முழு பக்தியுடன் அனுஷ்டித்து, மகாவிஷ்ணுவின் பரமபதத்தை அடைவோம்.
இன்று 2.6.2020 செவ்வாய்க்கிழமை நிர்ஜல ஏகாதசி. இந்தநாளில், வாய்ப்பு இருப்பவர்கள் முழு நாளும் உண்ணாமல் விரதம் இருக்கலாம். அல்லது அவரவர் உடல்நிலைக்கு ஏற்ப ஒரு வேளையோ அல்லது இரு வேளையோ உண்ணாமல் இருக்கலாம்.


மேலும் முடிந்தவர்கள், நாள் முழுவதும் பகவான் திருநாமங்களை ஜபித்துக் கொண்டிருப்பது மிகவும் சிறப்பு வாய்ந்தது. பெருமாளை நினைத்து மனதார வேண்டிக்கொள்ளலாம்.


விரதம் இருக்க முடியாதவர்கள், இந்த விரத கதையையும் பலனையும் பிறருக்கு எடுத்துச் சொல்வதன் மூலம், 'கோ' தானம் செய்த புண்ணியம் கிடைக்கும் என்கிறது புராணம்!

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x