1000  அடி குகை; மார்பளவு தண்ணீர்; அதிசய நரசிம்மர் 

1000  அடி குகை; மார்பளவு தண்ணீர்; அதிசய நரசிம்மர் 
Updated on
1 min read

காட்டுக்குள்ளேயும் ஊருக்கு நடுவேயும் மலையின் உச்சியிலும் ஆலயங்கள் அமைந்திருக்கும். அங்கே சென்று தரிசித்திருப்போம். ஆனால், ஆயிரம் அடி நீளமான குகைக்குள், எப்போதும் சூழ்ந்துள்ள நீரில் இருந்தபடி சேவை சாதிக்கிறார் ஸ்ரீநரசிம்மர்.

கர்நாடக மாநிலம் பிதார் நகரிலிருந்து சுமார் 5 கி.மீ தொலைவில் இருக்கும் மனிசூல எனும் மலைத்தொடரில் அமைந்திருக்கிறது ஜர்னி நரசிம்மர் குகைக் கோயில்.
மற்ற எல்லாக் கோயில்களுக்கும் எளிமையாகப் பயணித்து தரிசிப்பது போல், இந்த ஜர்னி நரசிம்மரை தரிசிப்பது அவ்வளவு எளிதான விஷயம் அல்ல.

1000 அடி நீளமுள்ள மலைக்குகை. கடும் வறட்சியான காலத்திலும் வற்றாத நீர். இந்த நீர் எங்கிருந்து வருகிறது, எப்படி வருகிறது, வந்த நீர் வெளியேறுகிறதா? வெளியேறுவதாக இருந்தால் எப்படி வெளியேறுகிறது என்பதெல்லாம் புரியாதபுதிர். ஆனாலும் பளிங்கு மாதிரி நீர், குகைக்குள் மார்பு வரை நின்றுகொண்டிருக்கிறது என்பது ஆச்சரிய அதிசயம்தான்!


இதை குகை நரசிம்மர் கோயில் என்கிறார்கள். குகைக்குள், நீரில் ஜிலீரெனக் காட்சி தருகிறார் நரசிம்மர். இந்த தண்ணீரில் அதிசயமான பல மூலிகைகளின் சக்திகள் இருப்பதாகச் சொல்கிறார்கள். மார்பளவு நீரில் நடந்து சென்றுதான், நரசிம்மரைத் தரிசிக்கமுடியும்.


இந்த குகை நீர் நம்மீது பட்டாலே, தீராத நோயும் தீர்ந்துவிடும் என்பதாக ஐதீகம். குகையின் இறுதியில் சுயம்புவாக தோன்றிய ஜர்னி நரசிம்மரும் சிவலிங்கமும் பக்தர்களுக்கு காட்சி தருவது இன்னொரு அற்புதம். சைவமும் வைணவமும் இணைந்த அற்புதத் தலம் என்று கொண்டாடுகிறார்கள் பக்தர்கள்.


நரசிம்மர், பக்தப் பிரகலாதனுக்காக, இரண்யகசிபுவை அழித்தார். அதன் பிறகு, இந்த குகையில் இருந்த ஜலாசுரன் என்பவனையும் அழித்தொழித்தார் என்றும் இறுதியாக அந்த ஜலாசுரன் எனும் அரக்கன், தண்ணீராக மாறி, நரசிம்மரின் பாதங்களில் சரணடைந்தான் எனத் தெரிவிக்கின்றன புராணங்கள்.


1000 அடி நீளமுள்ள குகை என்பதாலும் மார்பளவு தண்ணீர் இருக்கும் என்பதாலும் வயதானவர்கள், நடக்க முடியாதவர்கள், குழந்தைகள் ஆகியோர் குகைக்குள் செல்ல அனுமதி இல்லை.


யோகமும் ஞானமும், வீரமும் விவேகமும் தந்தருளும் நரசிம்மரை தரிசனம் செய்வதை, இந்த ஜென்மத்துக்கான மிகப்பெரிய புண்ணியம் என்பதாகவே சொல்லிப் பூரிக்கிறார்கள் பக்தர்கள்!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in