

குருவாரமான வியாழக்கிழமையில் சஷ்டியும் வந்துள்ளது விசேஷம். மாலையில் முருகப்பெருமானை நினைத்து வீட்டில் விளக்கேற்றி வழிபடுங்கள். மன இறுக்கங்களையும் வாழ்க்கையின் தடைகளையும் தகர்த்தருள்வார் கந்தகுமாரன்.
சஷ்டி திதியானது முருகப்பெருமானுக்கு விசேஷம். மாதந்தோறும் வருகிற கார்த்திகை நட்சத்திரத்தில் விரதம் மேற்கொள்வது போலவே, சஷ்டி திதியிலும் விரதம் மேற்கொள்வார்கள், முருக பக்தர்கள்.
முருகப்பெருமானை சஷ்டியின் போதும் கார்த்திகையின் போதும் தரிசித்து வேண்டிக்கொண்டால், நம் கஷ்டங்களையெல்லாம் துடைத்தருள்வான் வேலவன் என்று கொண்டாடுகிறார்கள்.
அந்தநாளில், முருகப்பெருமானுக்கு செந்நிற மலர்கள் சூட்டி, எலுமிச்சை சாதம் அல்லது பால் பாயசம் நைவேத்தியம் செய்து வழிபடுவது ரொம்பவே சிறப்பு. அப்போது கந்தசஷ்டி கவசம் பாராயணம் செய்வதும் முருகப் பெருமானின் வேல் விசேஷமல்லவா... எனவே அந்த வேலினை நினைத்து வேண்டிக்கொள்வதும் மகோன்னதமான பலன்களைத் தரும்.
இன்று வியாழக்கிழமை. சஷ்டியும் கூட. வியாழக்கிழமையை குருவாரம் என்பார்கள். முருகப்பெருமான், தந்தைக்கே உபதேசித்தவர் என்பதால், அவரை ஞானகுரு என்று போற்றுவார்கள். எனவே, வியாழக்கிழமை என்பது, ஞானகுருவான முருகப்பெருமானுக்கு உகந்தநாளும் கூட. சஷ்டியும் குருவார நன்னாளில் இணைந்து வந்திருக்கும் இந்த நாளில், மாலையில் வீட்டில் விளக்கேற்றுங்கள். முருகப்பெருமானை மனதார வேண்டிக்கொள்ளுங்கள்.
முடிந்தால், பாயசம் நைவேத்தியம் செய்யுங்கள். அக்கம்பக்கத்தாருக்கு பாயசத்தை வழங்குங்கள். மனதின் இறுக்கத்தையும் வாழ்க்கையின் தடைகளையும் தகர்த்தருள்வார் முருகக் கடவுள்.
குருவார சஷ்டி நன்னாளில், விளக்கேற்றி ஆத்மார்த்தமாக சிவ மைந்தனை பிரார்த்தனை செய்யுங்கள். வழக்கில் வெற்றியை அடையவும் தடைப்பட்ட மங்கல காரியங்கள் நடந்தேறவும் எதிரிகள் தொல்லையிலிருந்து விடுபடவும் அருள் செய்து காப்பார் முத்துக்குமரன்.