

‘பாபாவை நாம் பார்க்கவேண்டும், தரிசிக்க வேண்டும் என்றெல்லாம் இல்லை. அவரை நினைத்தாலே போதும். அவரை உள்வாங்கிக் கொண்டாலே போதும். அவர் பெயரை உள்ளுக்குள்ளே சொன்னாலே போதுமானது. பாபா நம்மை பார்த்துக் கொண்டே இருக்கிறார். நம்மை சதாசர்வ காலமும் கவனித்துக் கொண்டே இருக்கிறார். ஒழுக்கத்துடனும் நேர்மையுடனும் எல்லா மனிதர்களிடத்தும் பேரன்புடனும் எவரெல்லாம் வாழ்கிறார்களோ... அவர்களை நோக்கி பாபா வருவார்; அவர்களுக்கு அருள்வார்.
ஷீர்டிக்கு என்றில்லை. உங்கள் வீட்டுக்கு அருகில் பாபா கோயில் இருக்கிறதா. அங்கே சென்றிருக்கிறீர்களா. ஒருமுறை... ஒரெயொரு முறை... அங்கு சென்று பாபாவை தரிசித்து வாருங்கள். பிறகு உங்களை பாபா கண்காணித்துக் கொண்டே இருப்பார். கவலையும் துக்கமும் வரும்போதெல்லாம் அவற்றைப் போக்கிக் கொண்டே இருப்பார்.
உங்களை எவரோ வருத்தப்பட வைக்கிறார்கள் என்றால், அதைப் பார்த்துக் கொண்டிருக்கமாட்டார் பாபா. அங்கே ஏதேனும் ஒரு விளையாட்டை நிகழ்த்திக் காண்பிப்பார். நமக்காக தன் அருளாடலை அரங்கேற்றித் தருவார் சாயிபாபா!
இன்றைக்கு தமிழகத்தின் பல இடங்களிலும் சாயிபாபாவுக்கு கோயில்கள் அமைந்துவிட்டன. ஒருகாலத்தில் பிள்ளையார் கோயிலும் அம்மன் ஆலயங்களும் இப்படித்தான் வந்தன. இப்போது பகவான் சாயிபாபாவின் அருள் வியாபித்திருக்கிற காலம். சின்னதாகவோ பெரிதாகவோ, பாபாவுக்குக் கோயில்கள் ஊருக்கு ஊர் வரத் தொடங்கி விட்டன.
’’எல்லா இடங்களிலும் எல்லா பாபா கோயில்களிலும் பாபாவின் பிரமாண்டமான சக்தியானது, அருளானது நீக்கமற நிறைந்திருக்கிறது. ‘எங்கெல்லாம் பாபா எனும் சொல் உச்சரிக்கப்படுகிறதோ, ஷீர்டி நாயகனின் திருநாமம் சொல்லப்படுகிறதோ... அங்கே பாபாவின் விளையாடல் தொடங்கிவிடுகிறது என்கிறார் பக்திப்பாடகர் வீரமணிராஜூ.
ஷீர்டி நாயகன் பாபாவை வியாழன் தோறும் வணங்குங்கள். வியாழன் என்றில்லாமல் ஒவ்வொரு நாளும் வழிபடுங்கள். நம் வாழ்க்கை வழிக்குத் துணையென வருவார் அற்புத மகான்!
’’எல்லாவற்றையும் விட முக்கியமானது பகவான் பாபா உங்களைப் பார்த்துக் கொண்டே இருக்கிறார்! பாபாவை நாம் பார்ப்பது முக்கியமா. பாபா, நம்மைப் பார்ப்பது அவசியமா. அவரின் பார்வை நம் மீது பட்டாலே போதும். அந்தப் பார்வை, நம்மை என்னவோ செய்யும். ஏதேதோ வழங்கும்!’’ என்று சொல்லிச் சிலிர்க்கிறார் பாடகர் வீரமணிராஜூ.
அருகில் உள்ள பாபா கோயிலுக்குச் செல்லுங்கள். அவரைத் தரிசியுங்கள். எத்தனை கூட்டமாக இருந்தாலும், நம் ஒவ்வொருவரையும் கவனித்துவிடுவார்; நம்மைப் பார்த்துவிடுவார். நமக்கு என்ன தேவையோ அவற்றை அருள்வார் சாயிபாபா!