Last Updated : 27 May, 2020 12:44 PM

 

Published : 27 May 2020 12:44 PM
Last Updated : 27 May 2020 12:44 PM

ராஜராஜ சோழன்... தேவாரப் பாடல்கள்... பொள்ளாப் பிள்ளையார்! 


எல்லா ஊரிலும் தொப்பையுடன் காட்சி தரும் பிள்ளையார் திருநாரையூரில் ஒட்டிய வயிற்றுடன் காட்சியளிப்பது அதிசயமான ஒன்றுதான். இவரின் திருநாமம் பொள்ளாப் பிள்ளையார். அதாவது உளியால் செதுக்கப்படாமல், தானாகவே சுயம்புவாகத் தோன்றிய பிள்ளையார்.


சிதம்பரத்தில் இருந்து 18 கி.மீ. தொலைவில் உள்ளது திருநாரையூர். இங்குதான் திரிபுரசுந்தரி சமேத செளந்தரேஸ்வரர் அருளாட்சி நடத்துகின்றனர். தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் இது 33 வது திருத்தலம்.

கோபக்கார முனிவர் என்று பேரெடுத்தவர் துர்வாசர். இவர் சிவனாரை நோக்கி கடும் தவம் செய்து கொண்டிருந்தார். அவரின் தவத்திற்கு இடையூறு செய்த கந்தர்வனை நாரையாகும்படி சாபமிட்டார்.


சாபத்தால் கலங்கியவன், இங்கு வந்து சிவனாரிடம் முறையிட்டு வேண்டினான். அவனிடம், தினமும் காசியிலிருந்து இத்தலத்துக்கு தீர்த்தம் கொண்டு வந்து தன்னை வழிபட்டால் சாபவிமோசனம் கிடைக்கும் என அருளினார்.


நாரை வடிவிலிருந்த கந்தர்வனும் காசி க்ஷேத்திரத்தில் இருந்து கங்கை நீரைக் கொண்டு வந்து அபிஷேகம் செய்தான். பிறகு நாரைக்கு முக்தி தந்து அருளினார் ஈசன். இதனால், இந்த ஊருக்கு திருநாரையூர் எனும் பெயர் அமைந்தது என்கிறது ஸ்தல புராணம்.


அதனால்தான் காசிக்கு நிகரான தலம் என்றும் முக்தி தரும் திருத்தலம் என்றும் கொண்டாடப்படுகிறது திருநாரையூர்.


இந்த ஊரில் அவதரித்தவர்தான் நம்பியாண்டார் நம்பி. இவரின் தந்தையார் கோயிலில் பூஜைகள் செய்து வந்தார். திருநாரையூரில் பொள்ளாப் பிள்ளையார் ஆலயத்தில் பூஜை செய்துவிட்டு, வாசலில் இருந்த ஏழைகளுக்கு நைவேத்தியக் கொழுக்கட்டையை தானமாகத் தருவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.


அவரின் மகன் நம்பி அப்போது சிறுவன். அப்பாவைப் பார்த்ததும் ஓடி வந்து கட்டிக் கொண்டான். “அப்பா! பிரசாதம் எல்லாம் எங்கே?” என்றான். “எல்லாத்தையும் பிள்ளையார் சாப்பிட்டு விட்டார்” என்று வேடிக்கையாகச் சொன்னார்.


தினமும் அவர் ஏழைகளுக்குத் தருவதும் பிள்ளை கேட்பதும் அதற்கு அவரோ, பிள்ளையார் சாப்பிட்டுட்டார் என்பதுமாகவே இருந்தது.


ஒருநாள்... அப்பா வெளியூருக்குச் செல்ல, மகன் நம்பிதான் பூஜைகள் மேற்கொண்டான். ஆனால், பிள்ளையார் அப்பா சொன்னபடி, கொழுக்கட்டையை சாப்பிடவே இல்லை. நொந்துபோனான். மறுநாளும் நைவேத்தியம் வைக்க, அவை அப்படியே இருந்தன. துடித்துப் போன நம்பி, ‘நான் கொடுத்தா சாப்பிடமாட்டியா?’ என்று அழுதுகொண்டே, அருகிலிருந்த சுவரில் தலையால் முட்டிக்கொண்டே இருந்தான். ரத்தம் வடிய தொடர்ந்து முட்டிக்கொண்டான்.


அப்போது... ‘நம்பி...’ என்றொரு குரல். பிள்ளையார் எழுந்து வந்தார். பிரசாதத்தைச் சாப்பிட்டார். அதில் மகிழ்ந்துபோனான் நம்பி. மாலையில் அப்பா வந்ததும் சொன்னான். அவர், நம்பவே இல்லை. ‘பிள்ளையாராவது... நைவேத்தியம் சாப்பிடுவதாவது.. பொய்யா சொல்கிறாய்’ என்று கடிந்துகொண்டார். மறுநாள்... அப்பாவை அழைத்துக் கொண்டு போனான். நைவேத்தியம் படைத்தான். அப்போது பிள்ளையார் கொழுக்கட்டையைச் சாப்பிட்டார். சிலிர்த்துப் போனார் தந்தை. ‘நம் மகன் சாதாரணனில்லை’ எனப் புரிந்து போயிற்று அவருக்கு!


அந்தக் காலகட்டத்தில்தான், சோழ தேசத்தின் மாமன்னன் ராஜராஜன், தேவாரத் திருமுறைகள் எழுதப்பட்ட ஓலைச்சுவடியைத் தேடிக்கொண்டிருந்தார். நம்பியின் புகழ் பரவியிருந்தது அப்போது. ‘நம்பியிடம் கேட்போம். நம்பி பொள்ளாப் பிள்ளையாரிடம் கேட்டுச் சொல்வார்’ என்று ராஜராஜ சோழன், திருநாரையூருக்கு வந்தார். நம்பியிடம் விவரம் சொன்னார். நம்பி பிள்ளையாரிடம் முறையிட, பொள்ளாப் பிள்ளையாரும் ‘தில்லையம்பதியில் ஆலயத்தில் ஓலைச்சுவடிகள் உள்ளன’ எனச் சொல்லியருளினார்.


பொள்ளாப் பிள்ளையார், நம்பியாண்டார் நம்பியிடம் சொல்லி, ராஜராஜ சோழன் மூலமாக தேவாரப் பாடல்கள் இந்த உலகுக்குக் கிடைக்கக் காரணமாக அமைந்தார் என்கிறது ஸ்தல வரலாறு.


இதன் பின்னர், சிதம்பரம் கோயிலுக்குச் சென்று அறைக்குள் பலகாலமாக ஓலையைச் சுற்றிலும் புற்று சூழ்ந்திருந்ததைக் கண்டார் மன்னர். அந்த ஓலைச் சுவடிகளைக் காப்பாற்றி, கையகப்படுத்தி, இவ்வுலகிற்குத் தந்தார் என்பதெல்லாம்தான் நமக்குத் தெரியுமே!


அப்பேர்ப்பட்ட புண்ணிய திருத்தலமான திருநாரையூரில், ராஜராஜன் சிலையும் இருக்கிறது. ஒருமுறையேனும் காசிக்கு நிகரான இந்தத் திருத்தலத்துக்கு வந்து சுவாமியையும் அம்பாளையும் தரிசியுங்கள். அப்படியே, பொள்ளாப் பிள்ளையாரையும் நம்பியாண்டார் நம்பியையும் வணங்குங்கள். ஞானமும் யோகமும் கிடைப்பது உறுதி. கல்வியிலும் கலைகளிலும் சிறந்து விளங்கலாம் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x