Last Updated : 21 May, 2020 09:47 AM

 

Published : 21 May 2020 09:47 AM
Last Updated : 21 May 2020 09:47 AM

’சாய்ராம்’ என்று சொல்லிப் பாருங்களேன்!  தனம் - தானியம் பெருக்கித் தருவார் பாபா! 

ஷீர்டியில் இருந்துகொண்டு, அகில உலகத்தையும் தன் கண்பார்வையாலும் திருவார்த்தைகளாலும் மனோரதமான சிந்தனையாலும் வளப்படுத்தினார் சாயிபாபா. இவருக்கு முன் நின்று, தன் குடும்ப வறுமையைச் சொன்னவர்களுக்கு விரைவிலேயே செழுமையைத் தந்த அருளாடல்களை இன்றைக்கும் சொல்லிச் சொல்லி பூரிக்கிறார்கள் பக்தர்கள் பலர்.

வறுமையால் வாடியவர்கள், இவரின் அருளால் வளமைக்கு மாறினார்கள். வழக்கில் சிக்கிக் கொண்ட சொத்துகள், இவரின் வார்த்தைகளால் நல்ல தீர்ப்பு கிடைக்கப் பெற்றார்கள். சொத்தும் பங்களாவும் இருந்து, குழந்தை பாக்கியம் இல்லாமல் தவித்தவர்களுக்கு இவர் கை தூக்கி ஆசீர்வதித்துத் தந்த விபூதிப் பிரசாதம்... பிள்ளைச் செல்வத்தைத் தந்தருளியது.

இப்படி, பாபாவின் அருளைப் பெற்றவர்கள், தட்டு முழுக்க பணத்தைக் காணிக்கையாகக் கொண்டு வந்து, இவரின் காலடியில் வைத்து வணங்கினார்கள்.

எதையும் கேட்க மாட்டார் பாபா. கேட்டுக் கேட்டு வாங்கிக் கொள்ளும் நிலையில் அவர் இல்லை. இல்லைகளுக்கு அப்பாற்பட்டவர் பாபா. தேவைகள் என்பதையெல்லாம் கடந்த நிலையில் இருப்பவர் என்பதை நம்மைப் போன்ற சாமானியர்கள் அறிய மாட்டார்கள். நமக்கு சந்தோஷமும் திருப்தியும் மன நிறைவும் தருவது எது? பணம். அந்தப் பணத்தையே பாபாவுக்கு வழங்கினார்கள்.

அவரும் வேண்டாம் என்று சொல்லுவதில்லை. பணமா... யாருக்கு வேணும் என்று கேட்டுப் புறக்கணிப்பதில்லை. இப்படி அன்பர்கள் வழங்கிய பணத்தையெல்லாம் மக்களுக்கே வழங்கினார் சாயிபாபா. ஷீர்டியில் ஏராளமான கோயில்கள் இருக்கின்றன. அந்தக் கோயில்களின் திருப்பணிகளுக்குச் செலவிட்டார். கோயில்களைப் புனரமைத்து, பக்தர்களுக்கு எல்லா வசதிகளும் செய்து கொடுத்தார்.

அங்கே... கோயில்களின் புனரமைப்பு நடக்க நடக்க, பாபாவின் சாந்நித்தியம் இன்னும் இன்னுமாகப் பெருகிற்று. அந்த சாந்நித்தியத்தால், பக்தர்கள் பலரும் பலனடைந்தார்கள். பலம் பெற்றார்கள். பாவத்தில் இருந்து மீளச் செய்துவிட்டார் எங்கள் பாபா என்று கொண்டாடினார்கள். ‘சாய்ராம்... சாய்ராம்...’ என்று சொல்லிக் கொண்டே இருந்தார்கள்.

யாரிடம் பேசினாலும் என்ன பேசினாலும் எப்போது பேசினாலும் எதுகுறித்துப் பேசினாலும் ‘சாய்ராம்... சாய்ராம்...’ என்று வார்த்தையை ஆரம்பிக்கும் போதும் பேச்சை முடிக்கும் போதும் சொன்னார்கள். வார்த்தைக்கு வார்த்தை கூட சாய்ராம் சாய்ராம் என்று சொல்லிக் கொண்டே இருந்தார்கள் சிலர்! இன்றைக்கும் சாய்ராம் சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள், லட்சக்கணக்கான பக்தர்கள்!

பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாயிபாபாவை தங்கள் குடும்பத்தில் , உறுப்பினர் போலவே வரித்துக் கொண்டார்கள். சாயிபாபாவும் எவரிடமும் பாரபட்சம் பார்க்காமலேயே எல்லோரையும் ஒரேவிதமாகவே பாவித்தார். ஏழை பணக்கார வித்தியாசங்களெல்லாம் பாபாவிடம் கிடையாது. ஒரு பரம ஏழை கூட, பாபாவின் சந்நிதிக்கு முன்னே வந்து நின்று விட்டால், பாபாவின் அருள் கிடைத்துவிடும் என்பது உறுதி.
சாதாரண ஊழியரும் அரசாங்க ஊழியரும் பாபாவுக்கு ஒன்றுதான். அரசுப் பதவி, கோடிகோடியாய் பணம் என்பதையெல்லாம் பொருட்படுத்தாமலேயே இருந்ததுதான் பாபாவின் தனிப்பட்ட மகத்துவ குணம் என்பதை, பாபாவை அறிந்தவர்கள் உணர்ந்திருந்தார்கள்.

இன்று வரைக்கும் நாம் கண்ணீர் சிந்தும்போதெல்லாம் சூட்சும ரூபமாக வந்து, நம்மை, நம் கண்ணீரைத் துடைக்கின்றன பாபாவின் கருணைக் கரங்கள் என்பது லட்சக்கணக்கான பக்தர்களின் நம்பிக்கை.


பணக்கவலையோ... மனக்கவலையோ எதுவாக இருந்தாலும் சரி... நம்பிக்கை நசிந்த தருணமாக இருந்தாலோ... நம்பிக்கையே துரோகமாக மாறிய மோசமான நேரமாக இருந்தாலோ... பிடிகொம்பென வாழ்க்கையில் ஏதுமே இல்லையே கலங்கித் தவித்து மருகினாலோ... ‘சாயிராம்...’ என்று சொல்லுங்கள். சொல்லிக்கொண்டே இருங்கள்.
‘நானும் என் குடும்பமும் சாப்பிடக்கூட வழியில்லையே’ என்று ஒருபோதும் துவண்டுவிடாதீர்கள்.

ஒரேயொரு தடவை, யாருக்கேனும் ஒரேயொரு பொட்டலம் உணவு கொடுங்கள். நாலுவாய் தயிர்சாதம் கொடுத்துவிட்டு, ‘சாயிராம்’ என்று சொல்லுங்கள். அந்தத் தயிர்சாதப் பொட்டலமே அமுதசுரபியென மாறி, உங்கள் இல்லத்தில் தனம் தானியத்தைப் பெருக்கித் தரும். அதுதான் சாயிராம் லீலை என்று நெக்குருகிச் சொல்லுகிறார்கள் பாபாவின் பக்தர்கள்!

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x