

அவர் பெயர் என்ன, அவர் ஜாதி என்ன, அவர் நல்லவரா கெட்டவரா என்று எதுவுமே பார்க்காமல், பிறரின் துக்கங்களையும் கவலைகளையும் எவர் போக்குகிறாரோ அவரே மகான் என்று போற்றப்படுகிறார். கொண்டாடப்படுகிறார். வணங்கப்படுகிறார். காலங்கள் ஞானிகளுக்கும் யோகிகளுக்கும் இல்லை. அப்படி, காலங்கள் கடந்தும் மகான்கள் கொண்டாடப்படுகிறார்கள். இந்த உலகில், நம்மைக் காப்பாற்றவும் காபந்து செய்து வழிநடத்தவும் நம் சோகங்களையெல்லாம் போக்கி அருளவும் வாழ்ந்தவர்தான் ஷீர்டி சாயிபாபா. சூட்சுமமாக இருந்து இன்றைக்கும் அருள்மழை பொழிந்துகொண்டிருக்கிறார்.
சாயிபாபா, நமக்கு இப்போதும் அருள்பாலித்துக் கொண்டிருக்கிறார் என்பதுதான் நமக்கும் நம் சந்ததிக்குமான மிகப்பெரிய ஆசீர்வாதம். வரம். அவரின் அருளைப் பெறவும் அவரின் கருணைப்பார்வை நம் மீது படவும்... நாம் ஷீர்டிக்கு செல்ல வேண்டும் என்பதே இல்லை. அப்படிச் சென்றால்தான் அங்கே சென்று அவரைத் தரிசித்தால்தான் நமக்கு எல்லா செளபாக்கியங்களையும் வழங்குவார் என்பதெல்லாம் கிடையாது.
பிறகு...?
இருந்த இடத்திலிருந்தே, பாபாவை மனதார நினைத்துக் கொண்டாலே போதும்... ஒரு சின்னக் குழந்தையைப் போல் ஓடோடி வருவார் சாயிபாபா. அன்னையைப் போல் நம் மீது கருணை காட்டுவார். தந்தையைப் போல் நம்மை வழிநடத்துவார். குருவைப் போல் நமக்கு வழிகாட்டியாக எப்போதும் இருப்பார். இந்த இப்பிறவி முழுவதும் நம்மை காபந்து செய்து அருளுவார். இது பாபாவின் சத்தியவாக்கு!
பாபாவை, மனதார நினையுங்கள்; அவரை உளமார வேண்டிக்கொள்ளுங்கள். ‘பாபா, நீதான் எங்களைக் காக்கணும்’ என சரணடையுங்கள். ஒருபத்துநிமிடம், நம் வீட்டுப் பூஜையறையில் கண்மூடி அமர்ந்து, பாபாவைக் கூப்பிடுங்கள். ஓடோடி வந்து அருள்செய்வார்.
குருவாரம் என்று சொல்லப்படும் வியாழக்கிழமையில், குரு பாபாவை வணங்குவோம். தீய சக்திகள் அழித்து, நன்மைகள் பெருகச் செய்வார் ஷீர்டிநாதன்.