

வைகாசி செவ்வாய்க்கிழமையில், வீட்டில் விளக்கேற்றி பிரார்த்தனை செய்தால், தீய சக்தி ஒழியும், நன்மைகள் பெருகும் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.
வைகாசி மாதம் என்பது அற்புதமான மாதம். இந்த மாதத்தின் செவ்வாய்க்கிழமைகள், மிகுந்த விசேஷமானவை. வீரியமான இந்தநாளில், நாம் செய்யும் பிரார்த்தனைகள் உடனே நிறைவேறும் என்பது உறுதி என்கின்றன ஞானநூல்கள்.
வைகாசி மாதத்தின் செவ்வாய்க்கிழமைகளில், வீட்டில் விளக்கேற்றுங்கள். சக்தி என்று போற்றப்படும் அம்மனையும் சக்திவேல் என்று வணங்கப்படும் முருகப்பெருமானையும் வழிபடுவதற்கு உகந்தநாள் இது.
பொதுவாகவே, செவ்வாய்க்கிழமை செவ்வாய் பகவானுக்கு உரிய நாள். இந்த நாளில் அங்காரக வழிபாடு செய்தாலோ, தரிசனம் செய்து வேண்டிக்கொண்டாலோ நல்ல பலன்கள் கிடைக்கும். செவ்வாய் தோஷம் முதலான சகல தோஷங்களும் விலகும்.
செவ்வாய் பகவானுக்கு அதிபதி முருகப்பெருமான். எனவே, செவ்வாய்க்கிழமைகளில் முருக வழிபாடு மிகவும் உன்னதமானது. அதேபோல், அம்மனை வணங்குவதும் கூடுதல் சக்தியையும் பலத்தையும் தந்தருளக் கூடியது.
அதனால்தான், செவ்வாய்க்கிழமைகளில், ராகுகால வேளையில், துர்கைக்கு விளக்கேற்றி வழிபாடுவார்கள்.
நாளைய தினம், செவ்வாய்க்கிழமை (19.5.2020) வைகாசி மாத செவ்வாய்க்கிழமை. எனவே காலையும் மாலையும் வீட்டில் விளக்கேற்றுங்கள். அம்பாள் துதி பாராயணம் செய்யுங்கள். லலிதா சகஸ்ரநாமம் சொல்லுங்கள்.
இதேபோல், முருகக் கடவுளுக்கு வழிபாடு செய்ய உகந்த அற்புதமான நாள். இந்தநாளில், காலையிலும் மாலையிலும் வீட்டில் விளக்கேற்றுங்கள். கந்த சஷ்டி கவசம் முதலான முருகக் கடவுளின் துதிகளை பாராயணம் செய்யுங்கள்.
தீய சக்திகளெல்லாம் அழியும். நல்லனவெல்லாம் பெருகும். எதிர்ப்புகள் விலகும். எதிரிகள் தவிடுபொடியாவார்கள். இல்லத்தில் சுபிட்சம் குடிகொள்ளும்.
மறக்காமல், வைகாசி செவ்வாயில், விளக்கேற்றி வழிபடுங்கள். ஒளிமயமான எதிர்காலம் நிச்சயம்.