Last Updated : 07 May, 2020 09:59 AM

 

Published : 07 May 2020 09:59 AM
Last Updated : 07 May 2020 09:59 AM

ஏழு விளக்கு ஏற்றுங்கள்; ஏழு ஜென்ம பாவமும் நீங்கும்! 

சித்ரா பெளர்ணமியில் ஏழு விளக்குகள் ஏற்றி, பூஜித்து வழிபட்டால், ஏழு ஜென்மப் பாவமும் நீங்கும் என்கிறார்கள் ஆச்சார்யர்கள். இன்று 7.5.2020 வியாழக்கிழமை சித்ரா பெளர்ணமி.


மாதந்தோறும் வரும் பெளர்ணமி விசேஷம். இதில் சித்திரை மாதத்து பெளர்ணமி என்பது மிகவும் மகத்துவம் வாய்ந்தது. சித்திரை மாதத்தில் வரும் பெளர்ணமியில், வீட்டில் வழிபாடுகள் செய்வது மகா புண்ணியம்.


சித்ரா பெளர்ணமியின் போது, சித்திர குப்தனை வழிபடுவது சிறப்பு. நம் பாவக் கணக்கையெல்லாம் புண்ணியக் கணக்கையெல்லாம் எழுதி, எமதருமனிடம் ஒப்படைக்கும் சித்திரகுப்தனை இந்தநாளில், தரிசிப்பதும் வணங்குவதும் நல்ல பலன்களைத் தந்தருளும்.


நவக்கிரகங்களில் ஒன்றான கேது பகவானுக்கு அதிதேவதை சித்திரகுப்தன். காஞ்சிபுரத்தில் சித்திரகுப்தனுக்கு கோயில் அமைந்துள்ளது. கேது தோஷம் உள்ளவர்கள், பூர்வ புண்ணிய ஸ்தானக் குறைபாடு உள்ளவர்கள், இங்கு வந்து சித்திர குப்தனை தரிசித்து பிரார்த்தனை செய்துகொண்டால், சகல தோஷங்களும் நீங்கும். முன் ஜென்மப் பாவங்கள் அனைத்தும் விலகும் என்பது ஐதீகம்.


அதேசமயம், வீட்டிலிருந்தே பூஜைகள் செய்வது மேலும் உன்னதமானது. சித்ரா பெளர்ணமி நாளில், பூஜையறையைச் சுத்தம் செய்து, சுவாமி படங்களுக்கு சந்தனம் குங்குமமிட்டு, மலர்களால் அலங்கரியுங்கள். இந்தநாளில், காலையிலும் மாலையிலும் விளக்கேற்றுங்கள்.


அப்போது, ஏழு அகல் விளக்குகள் ஏற்றிவைக்கவேண்டும். தெரிந்த ஸ்லோகங்களைச் சொல்லுங்கள். சித்ரா பெளர்ணமி நாளில் சித்ரான்னங்கள் படையலிடுவது வழக்கம். சர்க்கரைப் பொங்கல், எலுமிச்சை சாதம், தயிர்சாதம் முதலானவற்றைக் கொண்டு நைவேத்தியம் செய்து வழிபடுங்கள்.


மாலையில், வீட்டு வாசலில் இரண்டு அகல் விளக்குகளை ஏற்றிவைத்து வழிபடுங்கள். முடிந்தால், இயலாதவர்களுக்கு தயிர்சாதம் அல்லது எலுமிச்சை சாதப் பொட்டலங்களை வழங்குங்கள். பேனா, நோட்டுப்புத்தகம் மாணவ மாணவிகளுக்கு வழங்குங்கள்.


ஏழு விளக்குகள் ஏற்றி வழிபடுங்கள். ஏழு ஜென்மப் பாவமும் நீங்கும். இனி வரக்கூடிய ஏழேழு தலைமுறையும் செழிக்கும் என்பது உறுதி!

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x