

சித்ரா பெளர்ணமி நாளில், மாணவ மாணவிகளுக்கு பேனா, நோட்புக் முதலானவற்றை வழங்குங்கள். வயதானவர்களுக்கும் இயலாதவர்களுக்கும் தயிர்சாதம் தானம் செய்யுங்கள். கேது தோஷம் அனைத்தும் நீங்கும். 7.5.2020 வியாழக்கிழமை சித்ரா பெளர்ணமி.
சித்ரா பெளர்ணமி என்பது மிக மிக விசேஷமான, அற்புதமான நன்னாள். எமதருமனின் கணக்குப்பிள்ளையான, நம் பாவ புண்ணியங்களை அப்டேட் செய்து கொடுப்பவரான சித்ர குப்தனை வணங்குவதற்கும் வழிபடுவதற்கும் உரிய அருமையான நாள்.
கேதுவின் அதி தேவதை, சித்ரகுப்தன். எனவே சித்ரகுப்தனை வணங்கித் தொழுதால் கேதுவால் ஏற்படும் தீமைகள் யாவும் குறையும். சித்ரகுப்தனின் அருளுடன் கேது பகவானின் பேரருளும் கிடைக்கப் பெறலாம்.
வீட்டுப் பூஜையறையில் ஏழு அகல் விளக்குகள் ஏற்றி சித்ர குப்த வழிபாடு செய்வது சிறப்பு. மாலையில் பூஜையறையிலும் வீட்டு வாசலிலும் விளக்கேற்றுங்கள். குடும்பத்தினர் அனைவரும் ஒன்றிணைந்து பூஜையில் ஈடுபட்டு, சுவாமிக்கு நமஸ்காரம் செய்யுங்கள். பேனா, நோட்டுப்புத்தகம் தானம் செய்வது விசேஷம். அந்தப் பேனாக்களையும் நோட்டுப் புத்தகங்களையும் சுவாமிக்கு வைத்து வணங்கிவிட்டு, பின்னர் விநியோகம் செய்யவேண்டும்.
எப்போதும் எழுத்தாணியும் ஓலையும் கொண்டு காட்சி தருபவர் சித்ரகுப்தன். எனவே, சித்ரகுப்தனுக்கு உரிய, சித்ரா பெளர்ணமி நன்னாளில், மாணவ மாணவிகளுக்கு பேனா, நோட்டுப் புத்தகம் வழங்குங்கள். உங்கள் குழந்தைகள், கல்வி கேள்விகளில் சிறந்துவிளங்குவார்கள். கலைகளில் புதிய சாதனை படைப்பார்கள்.
மேலும், வயதானவர்களுக்கும் இயலாதவர்களுக்கும் உங்களால் முடிந்த அளவுக்கு தயிர்சாதப் பொட்டலம் வழங்குங்கள். சித்ரா பெளர்ணமி நாளில், நாம் செய்யும் தானங்கள், கேதுவின் அருளை நமக்குப் பரிபூரணமாகப் பெற்றுத் தரும்.
7.5.2020 வியாழக்கிழமை சித்ரா பெளர்ணமி. குருவாரம் என்று சொல்லப்படும் வியாழக்கிழமையில், சித்ரா பெளர்ணமி வருவது கூடுதல் சிறப்பு. எனவே மறக்காமல், பேனாவும் நோட்டுப்புத்தகமும் மாணவர்களுக்கு வழங்குங்கள். இயலாதவர்களுக்கு தயிர்சாதப் பொட்டலம் வழங்குங்கள். தனம், தானியம் பெருகும். இல்லத்தில் ஐஸ்வர்யம் குடிகொள்ளும். கடன் பிரச்சினைகளில் இருந்தும் எதிரிகளிடமிருந்து மீண்டு விடுவீர்கள்.