

வி.ராம்ஜி
மீனாட்சிக்கும் சொக்கநாதருக்கும் திருமணம் நடக்கும் வேளையில், தாலிச்சரடு மாற்றிக் கொண்டு வேண்டிக்கொள்வார்கள் பெண்கள். தடைப்பட்ட திருமணம் நடந்தேற வேண்டும் என்றும் வம்சம் செழிக்க வேண்டும் என்றும் பிரார்த்தனை செய்வார்கள். அவர்கள் அனைவருக்கும், அகிலத்து மக்களுக்கு அருள்மழை பொழிந்து ஆட்சி செய்துகொண்டிருக்கிறாள் மதுரையின் மகாராணி மீனாட்சி.
மதுரையை ஆட்சி செய்து மக்களுக்கு அருளும்பொருளும் அள்ளித்தரும் மீனாட்சியின் அவதார சரிதத்தை அறிவோமா?
மதுரையை ஆட்சி செய்த குலசேகர பாண்டிய மன்னன் சிவபக்தன். சிவனருளால், அவனுக்கு மகன் பிறந்தான். மலையத்துவஜன் எனப் பெயரிட்டான். தந்தையைப் போலவே மகன் மலையத்துவஜனும் மாறா சிவபக்தி கொண்டிருந்தான். சோழ மன்னன் சூரசேனனின் மகளான காஞ்சனமாலையை மணம் புரிந்தான். வழுவா ஆட்சியும் மாறா பக்தியும் கொண்டிருந்தாலும் இந்தத் தம்பதிக்கு ஒரே குறை... குழந்தை இல்லையே என்பதுதான். ஒருபக்கம் வைத்தியம்... இன்னொரு பக்கம் ஆலய தரிசனம் என என்னென்னவோ செய்தான். நிறைவாக, புத்திரகாமேஷ்டி யாகம் செய்ய ஆச்சார்யர்கள் சொல்ல, அதன்படியே செய்தான்.
அப்போது அந்த ஹோம குண்டத்தில் இருந்து முத்துமாலைகளால் சுற்றப்பட்ட கொண்டை, நவரத்னக் கற்கள் பதித்த ஆபரணங்கல் அணிந்தபடி, சிறுமி வடிவில் அழகாய் நடந்து வந்தாள் உமையவள். அதிர்ந்து மகிழ்ந்தார்கள் மன்னனும் மகாராணியும்!
மதுரை தேசத்தின் இளவரசியான மகளுக்கு, கல்வியும் கலைகளும் போருக்கான பயிற்சிகள் உள்ளிட்டவையும் கற்றுக்கொடுக்கப்பட்டன. உரிய வயது வந்தது. அவளுக்கு மணிமகுடம் சூட்டப்பட்டது. சிலநாளில் தந்தை இறந்துபோக, அந்தத் துக்கத்தில் இருந்தாள். தலைமை அமைச்சர் பொறுப்பில் இருந்த சுமதி என்பவள், மகாராணி மீது கனிவும் அவருக்கு அறிவுரையும் கொண்டு விளங்கினாள். மலையத்துவஜின் மகள் நல்லாட்சி புரிகிறாள் என்று ஊரே கொண்டாடியது.
சிலகாலம் கழித்து, ஒருநாள்... திக்விஜயம் புறப்பட்டாள் மகாராணி. இந்த விஜயத்தால், உரிய மணவாளனைக் காணும் தருணம் வரும். அவள் பிறப்பின் நோக்கம் நிறைவுறும் என அசரீரி வந்ததால் ஏற்பட்ட முடிவு இது. மகாராணி மீனாட்சியும் தேசம் முழுக்க திக்விஜயம் செய்தாள். மாலையிடும் மணவாளனைத்தான் கண்டறிய முடியவில்லை. அக்னிகுண்டத்தில் இருந்து வெளிவந்த மீனாட்சிக்கு, பூலோகத்திலா கிடைப்பான் மணாளன்? தேவலோகத்தில் அல்லவா இருப்பான்?
போன தேசமெங்கும் வெற்றிக்கொடி நாட்டினாள் ராணி மீனாட்சி. ’பூலோகம் மட்டுமின்றி விண்ணுலகிலும் உங்களின் ராஜ்ஜியம் நடக்கவேண்டும் மகாராணி’ என்றாள் அமைச்சர் சுமதி. அதன்படி, அடுத்தகட்டமாக விண்ணுக்குப் பறந்தாள் மீனாட்சி. அவளை வழியில் தடுக்கவும் ஜெயிக்கவும் எந்த சக்தியும் இல்லை. எந்தத் தடையும் எட்டிக் கூடப் பார்க்கவில்லை. அவள் யார் என்பதை உணர்ந்த சிவகணங்கள் அரண் போல் நின்று காத்தனர். தேவர்களும் முப்பத்து முக்கோடி தேவர்களும் வணங்கி வரவேற்றனர். திருக்கயிலாயத்தை அடைந்தபோது, சிலிர்த்துப் போனாள் மீனாட்சி.
அங்கே... திருக்கயிலாயநாதனை, சிவபெருமானைக் கண்டாள். போர் புரிவதற்காக வாள் உயர்த்தினாள். கையிலிருந்த வாள் நழுவியது. கீழே விழுந்தது. சிவனாரைக் கண்டு நாணினாள். அங்கே அவளின் மூன்றாவது ஸ்தனம் மறைந்தது. ‘இதோ... இவரே என் மணாளன்’ என உறுதிபூண்டாள். உடன் வந்த அமைச்சர், ‘சிவமே... எங்கள் ராணியை மணந்துகொள்ளவேண்டும்’என வேண்டினாள். அதற்கு சிவனார், ‘பூவுலகில் மதுராபுரியில் திருமண ஏற்பாடுகள் நடக்கட்டும். வருகிறேன்’ என அருளினார்.
அதன்படி, திருமண ஏற்பாடுகள் ஜாம்ஜாமென நடந்துகொண்டிருந்தன. தேவர்களும் முனிவர்களும் ஞானிகளும் சித்தர் பெருமக்களும் பூவுலகுக்கு வந்தார்கள்.
மதுரையம்பதி என்று போற்றப்படும் மாநகருக்கு வந்தார்கள். இவர்கள் மட்டுமா? உலகையும் நம்மையும் படைத்த பிரம்மதேவனும் நம்மைக் காக்கும் பரந்தாமன் மகாவிஷ்ணுவும் வந்தார்கள். பிரம்மா திருமணத்தை நடத்திவைத்தார். சகோதரியின் திருமணத்தை மகாவிஷ்ணு நடத்திவைத்தார். தங்கையின் திருக்கரங்களை ஈசனின் வலது திருக்கரத்தில் வைத்தார். கலச நீரால் தாராதத்தம் செய்தார். சிவனாரின் இடதில் உமையவள் நின்றாள். சிவ பார்வதியாய் உலகுக்கு தரிசனம் தந்தார்கள்.
’தென்னாடுடைய சிவனே போற்றி, எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி’ என சிரசின் மேல் கைகுவித்து நமஸ்கரித்து, நெடுஞ்சாண்கிடையாக நமஸ்கரித்தார்கள் என்கிறது மதுரையம்பதியில் அமைந்துள்ள மீனாட்சி அம்மன் ஆலய ஸ்தல புராணம்.
அதனால்தான், வருடந்தோறும் சித்திரை மாதப் பெருவிழா கோலாகலமாக நடைபெறுவது இங்கே வழக்கம். இதில் முக்கியமானதொரு வைபவம்... மீனாட்சியம்மைக்கு நிகழும் திருக்கல்யாணம்.
மே 4-ம் தேதி, சோம வாரம் என்று சொல்லப்படும் திங்கட்கிழமையன்று (இன்று) சொக்கநாதருக்கும் மீனாட்சிக்கும் காலை 8. 40 மணி முதல் 10.15 மணி வரை திருக்கல்யாண வைபவம் நடைபெறுகிறது.
அம்மையப்பனின் திருமண வைபவத்தை தரிசியுங்கள்; மங்கலச் சரடு மாற்றிக்கொள்ளுங்கள். மனதார வேண்டிக்கொள்ளுங்கள். உங்கள் தடைப்பட்ட திருமணம் வெகுசீக்கிரமே நடக்க, அம்மையும் அப்பனும்... மீனாட்சியும் சொக்கனும் அருள்புரிவார்கள்!
அன்னையே... மீனாட்சித் தாயே... அடுத்த சித்திரையில், உன் சந்நிதிக்கு வந்து உன்னைத் தரிசிக்க அருள் செய் தாயே! தீயசக்திகள் அனைத்தையும் அழித்து, எங்களைக் காத்தருள்வாய் அன்னையே! உலகை ரட்சிக்கும் அம்மையே... அப்பன் சொக்கனுடன் சேர்ந்து இவ்வுலகைக் காத்து ரட்சித்து வாழவைக்கவேண்டும்; உன்னைத் தேடி வந்து உன் சந்நிதியில் மனமுருகி, உன்னை கண்ணாரத் தரிசிக்க கருணை செய்வாய் மீனாட்சி அம்மையே..!