

நுரை பொங்கப் பொங்க கரைகளை முட்டிக்கொண்டு மகிழ்ச்சியோடு ஓடி வருவாள் காவிரி. அவள் வரவை எதிர்பார்த்துக் காத்திருக்கும் கிராமத்து விவசாயிகள், அவளை மகிழ்ச்சியோடு வரவேற்பார்கள். ஊர் செழிக்க வேண்டு மென்றால் பயிர்கள் செழிக்க வேண்டும். அப்படியானால் காவிரி செழிக்க வேண்டும்.
தஞ்சை மாவட்டம் தமிழ்நாட்டின் நெற்களஞ்சியம். அது காவிரித்தாயின் அனுக்கிரகம்தான். புதுப்புனலாய்ப் பொங்கி வரும் காவிரிக்கு ஆடி 18-ம் நாள் விழா எடுத்தார்கள். அதுதான் ஆடிப்பெருக்கு. மக்கள் அதை ‘பதினெட்டாம் பேறு’ என்று சொல்வார்கள்.
மேட்டூர் அணையிலிருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் சீறிப் பாய்ந்து வரும்போது நொங்கும் நுரையுமாகச் சுழற்றியடித்து, ‘வந்துட்டீங்களா?’என்று தலையாட்டிக் கேட்பது போல் செல்லும்.
மணல் பிள்ளையார் மஞ்சள் பிள்ளையார்
பெரியவர்கள் வாய்க்காலில் இருந்து ஆற்று மணல் எடுத்து ஒரு அங்குல உயரத்தில் திடலைச் சுற்றித் தடுப்பு செய்வார்கள். உள்ளே நீள்சதுர இடம் கிடைத்துவிடும். அங்கே ஆற்று மணலில் பிள்ளையார் பிடித்து வைத்து பக்கத்தில் மஞ்சள் பிள்ளையார் பிடித்து வைப்பார்கள். அவற்றுக்குப் பொட்டு வைத்து, பூ வைத்து அலங்கரிப்பதோடு, பெண்கள் தமது தங்க நகைகளைக் கழற்றிப் பிள்ளையாருக்கு அணிவித்தும், அலங்காரம் செய்வார்கள்.
அவரவர் வீட்டிலிருந்து கொண்டுவந்த பழங்கள், மிதமான ஈரப்பதத்தில் வெல்லம், தேங்காய் சேர்த்துக் கிளறிய பச்சரிசி, காதோலை கருகமணி (ரோஜா வண்ணம் பூசப்பட்ட ஓலைச்சுருள், அதனுள்ளே கருப்புக் கண்ணாடி வளையல் செருகப்பட்டிருக்கும்) மஞ்சள் பூசிய கயிறு அனைத்தையும் நுனியிலையில் வைத்துப் பூஜை செய்வார்கள்.
பெண்கள், சிறுமிகள் எல்லோரும் சேர்ந்து, ‘காவிரியம்மா கரைபுரண்டு வர்றா’ என்று கும்மியடித்து, மணல் வீட்டை மூன்று முறை சுற்றிவந்த பிறகு காவிரித்தாய்க்குக் கற்பூரம் காண்பித்துப் பூஜையை முடித்து வைப்பார்கள்.
பூஜை முடிந்ததும், அவரவர் கொண்டுவந்த மஞ்சள் கயிற்றை எடுத்து ஒருவர் கழுத்தில் மற்றவர் கட்டுவர். எல்லாரும் எல்லாருக்கும் கட்ட ஒவ்வொருவர் கழுத்திலும் பெரிதும், சிறிதுமாக நிறைய மஞ்சள் கயிறுகள் சேர்ந்துவிடும். எல்லாம் முடித்துக்கொண்டு வீடு திரும்பு வதற்குள் உச்சி வெயில் வந்துவிடும்.
கிராமத்து சமூகக் கட்டமைப்பின் வலிமை, ஒற்றுமையுணர்வின் பலம், இயற்கை வழிபாட்டு மரபு, சமாதான சகவாழ்வின் வெளிப்பாடு என அனைத்து அம்சங்களும் இந்தக் கொண்டாட்டங்களில் பளிச்சிடும்.