

அட்சய திருதியை நாளில்தான், விநாயகப் பெருமானுக்கு வேதவியாசர், மகாபாரதத்தை அருளினார் என்கிறது புராணம். எனவே இந்த அட்சய திருதியை நன்னாளில், விநாயகப் பெருமானை வணங்குவதும் மகாபாரதம் படிப்பதும் மிகுந்த புண்ணியத்தைத் தரும்.
ஒவ்வொரு சித்திரை மாதமும் அமாவாசைக்குப் பிறகு வரும் மூன்றாம் நாள்... அதாவது திருதியை தினம்... அட்சய திருதியை. இன்னொரு விஷயம்... வருடந்தோறும் ரோகிணி நட்சத்திரமும் அட்சய திருதியையும் சேர்ந்தே வரும். இது இன்னொரு சிறப்பு. எனவே, ரோகிணி நட்சத்திரமான கிருஷ்ணர், நண்பர் குசேலருக்கு அருளிய இந்தநாளில், ரோகிணி நட்சத்திரக்காரர்களும் ஏனைய நட்சத்திரக்காரர்களும் கிருஷ்ணரை விளக்கேற்றி வழிபடுவது பலன்களைத் தந்தருளும். கிருஷ்ணரின் நாமாவளியைப் பாடுவதும் பாயசம், கேசரி முதலான ஏதேனும் இனிப்பை நைவேத்தியம் செய்து, அக்கம்பக்கத்தாருக்கு வழங்குவதும் எல்லா செல்வங்களையும் தந்தருளும்.
திருப்பதி வேங்கடாஜலபதி, குபேரனிடம் கடன் வாங்கினார் என்கிறது புராணம். ஆனானப்பட்ட ஏழுமலையானே குபேரனிடம் கடன் வாங்கியிருக்கிறார். அப்பேர்ப்பட்ட செல்வத்துக்கு அதிபதியான குபேரனை வணங்குவதும் மகாலக்ஷ்மியைத் துதிப்பதும் ரொம்பவே விசேஷம். குறிப்பாக அட்சய திருதியை நன்னாளில், மாலையில், குபேர லக்ஷ்மி பூஜை செய்வதும் லக்ஷ்மி அஷ்டோத்திரம் பாராயணம் செய்வதும் இழந்த செல்வங்களையும் பதவிகளையும் கெளரவத்தையும் பெற்றுத்தரும்.
இன்று 26.4.2020 அட்சய திருதியை.