

சித்திரை மாதம் அமாவாசைக்குப் பின் வரும் மூன்றாம் நாள்... அதாவது மூன்றாம் பிறை நாளான திருதியை தினமே அட்சய திருதியை நாளாக கொண்டாடப்படுகிறது. இந்த நன்னாளில் இறை வழிபாடு பன்மடங்கு உயர்வையும் நற்பலன்கலையும் தந்தருளும் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.
அன்றைய நாளில், ஹோமம், ஜபம் முதலானவை செய்து இறை வழிபாடு செய்வது இறையருளை அள்ளித் தரும். மிக முக்கியமாக, தானம் செய்வதற்கு உகந்த நாள் என்கின்றன சாஸ்திரங்கள்! வரும் 26.4.2020 ஞாயிற்றுக்கிழமை அட்சய திருதியை.
பதினாறு வகையான தானங்கள் மிக மிக உயர்ந்தவை. கடந்த சில வருடங்களாக, அட்சய திருதியை நாளில், தங்கம் மற்றும் வெள்ளியை தானம் செய்வதற்குப் பதிலாக, வாங்குவதில் ஆர்வம் காட்டி வருகிறோம். தங்கம் வாங்குவதும் சேமிப்பதும் தவறொன்றுமில்லை. அதேசமயம், அட்சய திருதியை நாளில், தங்கம் வாங்கவேண்டும் என்பது கட்டாயமேதுமில்லை.
தங்கம், வெள்ளி, உத்திராட்சம், குடை, விசிறி, ஆடை, நீர், மோர், பானகம், காலணி, மல்லிகைப் பூ, புத்தகம், பேனா, பென்சில், நோட்டு, தயிர் சாதம், போர்வை அல்லது படுக்கை விரிப்பு முதலான பொருட்களை வாழ்வில் ஒருமுறையேனும் தானம் வழங்கச் சொல்கிறது தர்ம சாஸ்திரம். அட்சய திருதியை நன்னாளில் இந்தப் பொருட்களை முடிந்த அளவுக்கு தானமாக வழங்குங்கள். இதனால் பல மடங்கு புண்ணியத்தைப் பெறலாம் என்பது ஐதீகம்!
அட்சய திருதியை நாளில் எது செய்தாலும் அது பன்மடங்கு உயரும். அது நல்லதாக இருந்தாலும் கெட்டதாக இருந்தாலும் சரி... எனவே கெட்டது செய்யாமல் கவனமாக இருங்கள்.
அட்சயம் என்றால், அழிவின்றி வளர்தல் என்று அர்த்தம். நன்மையானாலும், தீமையானாலும் விதிவிலக்கின்றி வளரும் என்பதால் கவனமாக இருக்க வேண்டும்.
முடிந்தவரை, அன்றைய நாளில் தர்மும் நல்லவற்றையுமே செய்யுங்கள். மேலும் எல்லாநாளும் தர்மம் செய்யுங்கள். இன்னும் இன்னுமாக உங்களையும் உங்கள் வம்சத்தையும் வாழவைக்கும்.