

வளமும் நலமும் தரக்கூடியதும், மாற்றமும் ஏற்றமும் தரக்கூடியதுமான நாளாக வாஸ்து நாள் போற்றப்படுகிறது. இந்தநாளில், நாம் செய்யும் வாஸ்து வழிபாடும் பூஜையும் நம்மை கஷ்டங்களில் இருந்து விலக்கி வைக்கும். நமக்கு நல்லனவெல்லாம் தந்தருளும். கடன் தொல்லையில் இருந்து விடுபடுவோம். இல்லத்தில் ஐஸ்வர்யமும் உள்ளத்தில் அமைதியும் தங்கும். நாளை 23.4.2020 வியாழக்கிழமை வாஸ்து நாள்.
‘எது எது எங்கெங்கே இருக்கணுமோ.. .அதது அங்கங்கே இருக்கணும்’ என்று சொல்வோம். ஆனால் இந்த வாசகம் எதற்குப் பொருந்துகிறதோ இல்லையோ... வாஸ்துவுக்கு சர்வநிச்சயமாகப் பொருந்தும்.
வாஸ்து பகவானுக்கு உரிய நாளில், அவருக்கு உரிய நேரத்தில் வீட்டை சுத்தமாக வைத்திருப்பதே வாஸ்து பகவானை வழிபடுவற்கு இணையானது என்கிறார்கள். சொல்லப் போனால், வீடுதான் வாஸ்து பகவான்; வாஸ்து பகவான் தான் வீடு!
வீட்டை சுத்தமாக பெருக்கிவிட்டு, நன்றாகத் துடைத்து, முடிந்தால் எல்லா சுவாமிப் படங்களையும் பூக்களைக் கொண்டு அலங்கரித்து, விளக்கேற்றி வழிபடுங்கள்.
சாம்பிராணி ஏற்றுங்கள். பீரோ துவங்கி குழந்தைகளின் புத்தக அலமாரி, பூஜையறை, சமையலறையில் உள்ள அரிசி மற்றும் தானியங்களுக்கு சாம்பிராணிப் புகையைப் பரவவிடுங்கள்.
வீட்டு வாசல் நிலைக் கதவின் மேற்பகுதியில், மஞ்சள், சந்தனம், குங்குமம் பூசி, அதற்கு ஊதுபத்தியும் சாம்பிராணியும் காட்டி வணங்குங்கள்.
நாளை 23.4.2020 வியாழக்கிழமை வாஸ்துநாள். காலை 8.54 முதல் 9.30 மணி வரை வாஸ்து நேரம்.
இந்த நேரத்தில், வீட்டை வணங்குங்கள். வீட்டில் பூஜை செய்து வணங்குங்கள்.
அதாவது, வீட்டையே கோயிலாக்குங்கள். வீட்டையே வாஸ்து பகவானாக்கி வழிபடுங்கள். சர்க்கரைப் பொங்கல், கேசரி முதலான இனிப்பு உணவை நைவேத்தியமாகப் படைத்து பூஜை செய்யுங்கள். அக்கம்பக்கத்தாருக்கு வழங்குங்கள். ஆனந்தமாய் வாழ்வீர்கள்.
நாம் செய்யும் வாஸ்து வழிபாடும் பூஜையும் நம்மை கஷ்டங்களில் இருந்து விலக்கி வைக்கும். நமக்கு நல்லனவெல்லாம் தந்தருளும். கடன் தொல்லையில் இருந்து விடுபடுவோம். இல்லத்தில் ஐஸ்வர்யமும் உள்ளத்தில் அமைதியும் குடிகொள்ளும்!