வீட்டிலிருந்தே பிரதோஷ தரிசனம் -  தெய்வம் அருகில் உண்டென்று உணர்வோம்! 

வீட்டிலிருந்தே பிரதோஷ தரிசனம் -  தெய்வம் அருகில் உண்டென்று உணர்வோம்! 
Updated on
2 min read

கரோனா வைரஸ் வீரியமிழக்க வேண்டும் என்பதற்காக, ஊரடங்கு வீடடங்கு என அறிவித்திருக்கிறது அரசாங்கம். கடைகள் இல்லை. அலுவலகங்கள் இல்லை. முக்கியமாக, வழிபாட்டுத் தலங்களில் தரிசனத்துக்கு அனுமதி இல்லை.
ஆமாம். ஆனால், ஆலயங்களில் ஸ்வாமிக்கும் அம்பாளுக்கும் ஏனைய பரிவார தெய்வங்களுக்கும் ஒருநாளில் எத்தனை முறை பூஜைகள் நடைபெற்று வந்ததோ அந்த பூஜைகள் குறைவற அனுதினமும் நடந்துகொண்டிருக்கின்றன. பக்தர்களின் வருகைதான் நிறுத்திவைக்கப்பட்டிருக்கிறதே தவிர, பூஜைகளும் வழிபாடுகளும் பிரார்த்தனைகளும் ஆச்சார்யர்களால் தொடர்ந்து நடந்துவருகின்றன.
‘தமிழ் வருடப் பிறப்புக்கு கோயிலுக்குப் போக முடியாமப் போயிருச்சே’ என்று வருந்திக்கொண்டிருக்கிற பக்தர்கள் ஏராளம். ‘ஒரு பிரதோஷம் கூட விடாம போயிருவேன்’, ’தேய்பிறை அஷ்டமிக்கு பைரவ தரிசனம் பண்ணிருவேன்’, ‘சஷ்டின்னா முருக தரிசனமும் ஏகாதசின்னா பெருமாள் தரிசனமும் நிச்சயம்’ என்று சொல்லும் பக்தர்கள் இருக்கிறார்கள்.
நம்மில் பலர், வீட்டுப் பூஜையறையில் ஒரு நல்லநாள் திருநாள் விடாமல், பூஜைகள் செய்யத் தொடங்கிவிட்டார்கள். சகஸ்ரநாமம், துதி பாராயணம், பைரவாஷ்டகம், கந்தசஷ்டி கவசம் என்றெல்லாம் மனமுருகி பாடி பூஜை செய்கிறார்கள்.
ஆனாலும் கோயில்களுக்கும் அங்கே நடைபெறும் பூஜைகளுக்கும் பக்தர்களுக்கும் அப்படியொரு பிணைப்பு ஏற்படத்தான் செய்கிறது. செல்லமுடியாதது மனதில் நெருடலாகத்தான் இருக்கும்.
இதோ... இன்று பிரதோஷம். சோம வாரப் பிரதோஷம். சார்வரி ஆண்டின் முதல் பிரதோஷம். இன்றைய பிரதோஷ பூஜைகளை சில ஆலயங்களில் நேரலை செய்கிறார்கள். அவற்றை வீட்டிலிருந்தபடியே கண்ணார தரிசிக்கலாம் என்பது தெரியுமா உங்களுக்கு?

சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலின் இன்றைய பிரதோஷ பூஜையை யுடியூபில் நேரலையாகத் தரிசிக்கலாம். தஞ்சை பெரியகோயிலின் பிரமாண்ட நந்திக்கு நடைபெறும் பிரதோஷ தரிசனத்தை, வீட்டிலிருந்தே தரிசிக்க, ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்று ஆச்சார்யர்கள் தெரிவிக்கின்றனர்.
மயிலாடுதுறை மயூரநாதர் ஆலயத்தின் பிரதோஷ பூஜைகளை முகநூல் பக்கத்தில் தரிசிக்கலாம். அதேபோல், இன்னும் பல ஆலயங்களில், அந்தக் கோயிலின் சிவாச்சார்யர்களின் முகநூல் பக்கங்களில், பிரதோஷ பூஜைகளை, நந்திதேவருக்கு நடைபெறும் அபிஷேகங்களை நேரலையாக தரிசித்து மகிழலாம்.
திருச்சி திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் கோயிலில், பிரதோஷ பூஜைகளை நேரலையாக தரிசிக்கலாம் என்கிறார் பாஸ்கர குருக்கள். கும்பகோணம் அருகில் உள்ள தண்டந்தோட்டம் ஸ்ரீநடனபுரீஸ்வரர் ஆலயத்தின் பிரதோஷ பூஜைகளை, முகநூல் பக்கத்தில் நேரலையாக ஒளிபரப்ப முடிவு செய்துள்ளோம். ஒருவேளை நெட் கனெக்‌ஷன் சரிவர கிடைக்கவில்லை என்றால், பூஜை முடிந்த கையுடன் அபிஷேகம் மற்றும் அலங்காரப் புகைப்படங்களை பதிவிடுவோம் என்கிறார் கோயிலின் குருக்களான நடராஜ குருக்கள்.
திருநெல்வேலி நெல்லையப்பர், தென்காசி விஸ்வநாதர், திருச்சி உறையூர் பஞ்சவர்ணசுவாமி, கும்பகோணம் கும்பேஸ்வரர் முதலான பல ஆலயங்களிலும் பிரதோஷ பூஜைகளை முடிந்தவரை நேரலைகளில் தரிசிக்கலாம். மேலும் பிராகாரத்தில் உள்ள நந்திதேவருக்குத்தான் பூஜைகளும் அபிஷேகங்களும் ஆராதனைகளும் நடைபெறும் என்பதால், பக்தர்களே கூட அவரவரின் முகநூல் பக்கங்களில் நேரலையாகவோ புகைப்பட ஆல்பமாகவோ வெளியிட்டுவிடுவார்கள் என்கிறார்கள் சிவாச்சார்யர்கள்.

இன்னும் பல கோயில்களில் கூட, பிரதோஷ பூஜைகளை நேரலையாக ஒளிபரப்பத் திட்டமிட்டுள்ளது ஆலய நிர்வாகம்.
‘தெய்வம் உண்டென்று உணர்’ என்றொரு அற்புத வாசகம் உண்டு. இந்த கரோனா ஊரடங்கு வீடடங்கு வேளையிலும், தெய்வம் அருகில் உண்டென்று உணர்வோம். பிரதோஷ பூஜையைக் கண்டு சிலிர்ப்போம். இந்தக் கரோனா அச்சத்தில் இருந்து விரைவில் மீண்டு, சகஜநிலைக்கு உலகமும் உலக மக்களும் திரும்பவேண்டும் என மனதாரப் பிரார்த்திப்போம்!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in