Published : 06 Aug 2015 11:37 AM
Last Updated : 06 Aug 2015 11:37 AM

சித்தர்கள் அறிவோம்: எட்டு நிலைகளைக் கடந்தவர்- ஆத்மானந்த சுவாமிகள்

“நாட்டம்

இரண்டும் நடுமூக்கில் வைத்திடில்

வாட்டமும் இல்லை மனைக்கும் அழிவில்லை

ஓட்டமும் இல்லை உணர்வில்லை தான்இல்லை

தேட்டமும் இல்லை சிவன் அவன்ஆமே”.

தியானமே கடவுளைக் காணும் வழி என்று காலங்காலமாக ஞானிகளும், மகான்களும் கூறிவந்திருக்கின்றனர். தியானம் என்பது ஞானயோகத்தின் அடிப்படை நிலைதான். தியானத்தின் மூலம் நாம் ஞானயோகத்தினுள் நுழைவதற்காக நம்முடைய மனதையும், உடலையும் தயார் செய்துகொள்ளலாம். யோகம் என்று அழைக்கப்படுகின்ற அஷ்டாங்க யோகத்தின் எட்டு நிலைகளையும் ஓவ்வொன்றாகப் பயிற்சி செய்து கடந்து சென்றால், நாமே சிவமாகிவிடுகிறோம். அஷ்டாங்க யோகத்தின் எட்டு நிலைகளில் நான்காவது நிலையான பிராணாயாமப் பயிற்சியின்போது நம்முடைய பஞ்சேந்திரங்களையும் நம்முடைய கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முடிகிறது. பிராணவாயு என்று கூறப்படும் உயிர் சக்தியை நாம் ஒழுங்குபடுத்த முடிகிறது.

நாம் சிவமாகி விடுகிறோம்

இந்தப் பிராணாயாமப் பயிற்சியின் போது நமது இரு கண்களின் பார்வையையும் மூக்கின் நுனியில் வைத்தால் நமது சோர்வுகள் அனைத்தும் பறந்தோடிப் போகும். மனை என்கிற நமது உடலுக்கு என்றும் அழிவில்லை. இந்த பயிற்சியின்போது வாயுவை நம் விருப்பம்போல் நிறுத்திக்கொள்ள முடிகிறது. இதனால் புறவுலகைப் பற்றிய உணர்வற்றுப் போகிறது; நான் என்ற ஆணவமும் அடங்குகிறது. தேட்டம் என்று சொல்லக்கூடிய ஆய்வு நிலை இல்லாமற் போகிறது. இவ்வாறு அனைத்தும் ஓடுங்கிவிட்டால் நாம் சிவமாக ஆகிறோம் என்று திருமூலர், இந்தப் பயிற்சியின் சிறப்புக்களைக் கூறுகிறார்.

இந்த எட்டு நிலைகளை உடைய அஷ்டாங்க யோகங்களைக் கடந்த யோகிகள் பிறப்பு, இறப்பு, விருப்பு மற்றும் வெறுப்பு ஆகியவை இல்லாத பெருவாழ்வு வாழ்வார்கள். அப்படிப்பட்ட யோகிகளில் ஒருவர்தான் ஆத்மானந்த சுவாமிகள்.

அந்தண குலத்தைச் சேர்ந்த ஆத்மானந்த சுவாமிகளின் பூர்வீகம் அறியப் பெறவில்லை. இவர் அருப்புக்கோட்டையில் உள்ள வெள்ளக்கோட்டையை அடுத்துள்ள தும்பைக்குளத்தில் ஒரு மரத்தினடியில் தவம் செய்து வந்தார். இதனைக் கண்ட இப்பகுதி மக்கள் அவரை அழைத்து வந்து, சூரிய புஷ்கரணி என்று அழைக்கப்படும் சொக்கநாதர் ஆலயத் தெப்பக்குளத்தின் கரையில் ஓரு குடிசை அமைத்துத் தங்க வைத்துள்ளனர்.

பதிணென் சித்தர்களில் ஒருவரான பாம்பாட்டிச்சித்தர், அருப்புக்கோட்டையை அடுத்துள்ள புலியூரானில் தங்கியிருந்த போது, சித்தநாத குருசாமி அவரிடம் தீட்சை பெற்றுச் சீடராக இருந்தார். சித்தநாத குருசாமியிடம் தீட்சை பெற்று, ஞானயோகப் பயிற்சிகளைக் கடந்தவர் தான் ஆத்மானந்த சுவாமிகள்.

ஜலசமாதி

இவர், தெப்பக்குளத்தின் கரையிலிருந்த ஒரு மரத்தினடியில் யோகப் பயிற்சிகள் செய்துகொண்டும், குளத்திலுள்ள நீரின் மீது மிதந்துகொண்டும், சில சமயங்களில் நீருக்குள் ஜல சமாதியிலும் இருப்பாராம்.

சொக்கநாதர் ஆலயத்தைச் சுற்றியுள்ள ஐந்து அக்ரஹாரங்களிலும் சென்று பிச்சை கேட்டு உண்பாராம்.

அஷ்டாங்க யோகங்களைக் கடந்து, சித்த புருஷராக மாறிய ஆத்மானந்த சுவாமிகள் சித்தர்களைப் போன்று சடைமுடி வளர்த்துக் கொள்ளவில்லை. இவர் மக்களுக்கு ஏராளமான உபதேசங்களைச் செய்துள்ளார். அவை பதிவு செய்து வைக்கப்படாதது பெரும் இழப்புத்தான்.

ஒரு முறை நிஷ்டையில் அமர்ந்திருந்த சுவாமிகள் தொடர்ந்து பல நாட்களாகக் கண் விழிக்கவில்லை. இதனை அறிந்த மக்கள், பலர் பலவிதமான கருத்துக்களைக் கூறினர். சுவாமிகள் சமாதி நிலையை அடைந்துவிட்டதாக முடிவு செய்து, குளக்கரையில் சமாதிக் குழியைத் தயார் செய்தனர். அவரது உடலுக்கு அபிஷேகம் செய்வதற்கு முன்னர், திடீரென்று ஒருவர், திடீரென்று சுவாமிகளின் தலையில் தேங்காயை உடைத்தார். உடனே ஆத்மானந்த சுவாமிகள் கண்விழித்து, “ஆண்டவனின் சித்தம், சமாதி செய்துவிடுங்கள்” என்று கூறிவிட்டுச் சமாதியானார்.

அவர் சமாதியானது ஐப்பசி மாதம், மூல நட்சத்திரத்தில். சமாதிப் பீடத்தின் மீது சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது .

ஆத்மானந்த சுவாமிகள் சமாதியைத் தரிசிக்கலாம்

அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரத்தில் சொக்கநாதர் ஆலயத்தின் தெப்பக்குளம், சூரிய புஷ்கரணியின் மேற்குக் கரையில் சுவாமிகளின் சித்தபீடம் உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x