Last Updated : 13 Apr, 2020 07:36 PM

 

Published : 13 Apr 2020 07:36 PM
Last Updated : 13 Apr 2020 07:36 PM

சித்திரைப் பிறப்பில் வேப்பம்பூ ரசம், பச்சடி;  வேப்பம்பூ பச்சடி ஸ்லோகமும் உண்டு! 

வழக்கமாக, வீட்டில் மதிய உணவில் ரசம் வைப்போம். ரசத்தில் பல வகையான ரசங்கள் உள்ளன. சித்திரை தமிழ்ப் புத்தாண்டின் போது, வைக்கவேண்டிய ரசம் என்று உள்ளது. அது... வேப்பம்பூ ரசம்.
வேப்பம்பூவில் எல்லாச் சுவைகளும் உள்ளன. இனிப்பது போலவும் இருக்கும். கசப்பது போலவும் இருக்கும். லேசாக காரமாகவும் இருக்கும். கொஞ்சம் துவர்ப்பது போலவும் இருக்கும். சற்றே புளிப்பது மாதிரியாகவும் இருக்கும். தமிழ் வருடப் பிறப்பான, சித்திரைப் பிறப்பின் போது, வேப்பம்பூ ரசம் செய்யச் சொல்லி சாப்பிடவேண்டும் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.
வாழ்க்கையில் இன்பம், துன்பம், நஷ்டம், லாபம், தோல்வி, வெற்றி என எல்லாமே உண்டு என்பதை வலியுறுத்தும்விதமாக, இந்த வேப்பம்பூ நமக்கு உணர்த்துகிறது. எனவேதான், வருடத்தின் முதல் நாளில், எல்லாச் சுவைகளையும் கொண்ட வேப்பம்பூ ரசம் அல்லது வேப்பம் பூ பச்சடி என செய்து சாப்பிடுகிறோம்.
வேப்பம்பூ பச்சடி அல்லது வேப்பம் பூ ரசம் செய்து சாப்பிடும் போது,

ஶதாயுர் வஜ்ர தேஹாய
ஸர்வ ஸம்பத்கராய ச
ஸர்வாரிஷ்ட விநாசாய
நிம்ப குஸும பக்ஷணம் ||

என்கிற இந்த ஸ்லோகத்தைச் சொல்லிச் சாப்பிடவேண்டும் என்றும் இதனால், எந்த நோயும் வராமல் காக்கப்படும் என்றும் தெரிவிக்கிறது தர்ம சாஸ்திரம். மேலும், வேப்ப மரம், வேப்ப மரத்தின் நிழல், வேப்பம் பழம், வேப்ப இலை, வேப்பம்பூ என வேப்ப மரத்தில் கிடைக்கும் எல்லாமே ஆகச்சிறந்த கிருமி நாசினி என்பதை எவரும் மறுக்கமுடியாது.
வேப்பம்பூ ரசம் செய்வது இப்படித்தான்!
உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் வகையில் ரசம் செய்ய நினைத்தால், வேப்பம்பூ ரசத்தை செய்து சாப்பிடுவது தேக ஆரோக்கியம் கொடுக்கக் கூடியது. உடற்சூட்டைத் தணிக்கக் கூடியது.
வேப்பம் பூ ரசம், வயிற்றில் உள்ள பூச்சி, புழுக்களை அழிக்கும் சக்தி கொண்டது.
தேவையான பொருட்கள்: புளி - சிறிதளவு
துவரம் பருப்பு - 1/2 கப்
மிளகு - 1 டீஸ்பூன்
ஜீரகம் - 1 டீஸ்பூன்
வர மிளகாய் - 2
மல்லி - 1 டீஸ்பூன்
தக்காளி - 1
கொத்தமல்லி - சிறிதளவு
பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை அளவு
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
எண்ணெய் - 1 டீஸ்பூன்
கடுகு - அரை டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
வேப்பம்பூ - 1 டீஸ்பூன் அளவு
நெய் - 1 டீஸ்பூன்
செய்முறை:
முதலில் வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி நன்றாகக் காயவேண்டும். பின்னர், வேப்பம்பூவை அதில் போட்டு நன்றாக வறுத்து தனியே வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு, புளியை தண்ணீரில் போட்டு உப்பு சேர்த்து ஊற வைத்து, அதன் பிறகு நீரை முற்றிலும் வடித்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
அடுத்து துவரம் பருப்பை குக்கரில் வைத்து, தண்ணீர் ஊற்றி, மூன்று விசில் விட்டு இறக்கி குளிர வைக்க வேண்டும்.
குக்கரில் உள்ள விசிலானது போனதும், குக்கரை திறந்து, பருப்பை நன்கு மசித்துக் கொள்ள வேண்டும். பின்னர், மிக்ஸியில் மிளகு, ஜீரகம், வர மிளகாய், மல்லி ஆகியவற்றைச் சேர்த்து அரைத்து பொடி செய்து கொள்ள வேண்டும்.
அடுத்து வாணலியை அடுப்பில் வைத்து, அதில் மசித்து வைத்துள்ள துவரம் பருப்பு, புளித் தண்ணீர், அரைத்து வைத்துள்ள பொடி, மஞ்சள் தூள் முதலானவற்றைச் சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்றாகக் கொதிக்க விட வேண்டும்.
இதன் பின்னர், தக்காளியையும் சேர்த்து கொதிக்க விடுங்கள். இப்போது கொதிக்க ஆரம்பித்ததும், வறுத்து வைத்துள்ள வேப்பம்பூ மற்றும் கொத்தமல்லியை தூவிவிடவேண்டும். பிறகு இறக்கி, அதில் அரை கப் தண்ணீர் ஊற்ற வேண்டும். இதனால் வேப்பம்பூவில் உள்ள கசப்பு அதிகமாக இறங்காமல் இருக்கும். இறுதியில் கடுகு மற்றும் பெருங்காயத் தூள் சேர்த்து தாளித்து இறக்கினால், அட்டகாசமான, ஆரோக்கியமான, அருமையான வேப்பம்பூ ரசம் ரெடி!

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x