

சார்வரி வருடமாக, சித்திரைப் பிறப்பு பிறக்கிறது. சித்திரை மாத தர்ப்பணமானதை 13ம் தேதி திங்கட்கிழமையன்றே செய்யவேண்டும். நாளைய தினமே முன்னோர் ஆராதனை செய்யவேண்டும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
மாதந்தோறும் தமிழ் மாதப் பிறப்பில் தர்ப்பணம் செய்ய வலியுறுத்துகிறார்கள் ஆச்சார்யர்கள். அதேபோல், மாதந்தோறும் அமாவாசையிலும் கிரகண நாளிலும் தர்ப்பணம் செய்ய வேண்டும் என அறிவுறுத்துகிறது சாஸ்திரம்.
நம்முடைய இந்த ஜென்மத்துக்கான, இந்த நம்முடைய பிறவிக்கான மிக முக்கியமான கடன்… கடமை… முன்னோர் ஆராதனை என்று அறிவுறுத்துகிறார்கள் . பித்ருக்களை ஆராதிக்க ஆராதிக்க, அவர்களை வணங்கி வழிபட, பித்ருக்கள் சாபம் அனைத்தும் நீங்கிவிடும்; பித்ருக்களின் ஆசியும் பரிபூரணமாகக் கிடைக்கும் என்பது ஐதீகம்.
அதேபோல், நாமும் நம் சந்ததியும் சிறக்கவும் செழிக்கவும் வாழலாம். நம் குடும்பத்தில். அரணாக இருந்து நம்மையும் நம் வம்சத்தையும் பித்ருக்கள் வாழ அருளுவார்கள் என்பது உறுதி.
இதோ… நாளைய தினம் 13.4.2020 திங்கட்கிழமை. தமிழ் வருடத்தின் கடைசி மாதம் இது. தெய்வத் திருமணங்கள் பலவும் நிகழ்ந்தது இந்த பங்குனி மாதத்தில்தான் என்கின்றன புராணங்கள்.
சார்வரி வருடத்தின் முதல் தர்ப்பணம். சித்திரை மாதப் பிறப்பில், முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யுங்கள். அவர்களின் புகைப்படங்களுக்கு பூ சார்த்தி, தீபதூபம் காட்டுங்கள். முடிந்தால், அவர்களுக்குப் பிடித்த உணவை நைவேத்தியம் செய்யுங்கள். காகத்துக்கு உணவு வழங்குங்கள்.
முக்கியமாக, முன்னோரை நினைத்து நான்குபேருக்கேனும் உணவுப் பொட்டலம் வழங்குங்கள். நாம் செய்யும் இந்தச் செயல்களில், குளிர்ந்து போய், நம்மையும் நம் குடும்பத்தையும் நம் சந்ததியையும் சீரும்சிறப்புமாக வாழச் செய்வார்கள், பித்ருக்கள்!
வீட்டின் தரித்திர நிலை மாறும். சுபிட்சம் குடிகொள்ளும். ஐஸ்வரியம் நிறைந்திருக்கும். அமைதியும் ஆனந்தமுமாக நிம்மதியாக வாழலாம்!
இந்த மாதம் (13-4-2020) திங்கட்கிழமை அன்று நள்ளிரவிற்கு முன்பே மேஷ ஸ்ங்க்ரமணம் ஆகிவிடுவதால், அந்த மேஷ ஸ்ங்க்ரமண - விஷூவத் புண்யகால ஸ்ராத்தத்தை அதாவது, சித்திரை மாதப்பிறப்பு தர்ப்பணத்தை திங்கட்கிழமையே செய்ய வேண்டும். 13.4.2020 அன்றே செய்யவேண்டும், நாளைய தினமே செய்யவேண்டும். மறுநாள் செவ்வாய்கிழமை 14ம் தேதி வருடப்பிறப்பு பண்டிகை மட்டுமே என்கிறார்கள் ஆச்சார்யர்கள்