Published : 07 Apr 2020 10:02 AM
Last Updated : 07 Apr 2020 10:02 AM

பங்குனி செவ்வாய்; பெளர்ணமி; ராகுகாலம்;  வீட்டு பூஜையறையில் விளக்கேற்றுங்கள்! 

பங்குனிச் செவ்வாயில், பங்குனிப் பெளர்ணமியில், ராகுகாலவேளையில் வீட்டுப் பூஜையறையில் விளக்கேற்றுங்கள். அம்பாள் துதி பாராயணம் செய்து வேண்டிக் கொள்ளுங்கள். வீட்டின் தரித்திரங்கள் அனைத்தும் விலகும். சுபிட்சம் குடிகொள்ளும்.
பங்குனி மாதத்தின் பெளர்ணமி ரொம்பவே விசேஷம். இந்தநாளில் இறை வழிபாடு செய்வது, வீட்டில் மங்கல காரியங்களை நடத்தித் தரும். ஐஸ்வரிய கடாட்சங்களை அள்ளிக் கொடுக்கும்.
அதேபோல், பங்குனி மாதத்தின் ஒவ்வொரு செவ்வாய்க் கிழமையும் மகத்துவம் வாய்ந்தது. அம்பாளுக்கு உரிய செவ்வாய்க்கிழமையில், சக்தி வழிபாடு செய்யச் செய்ய, துஷ்ட சக்திகள் நம்மை விட்டு விலகும். தீயசக்திகள் துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று ஓடும்.
மேலும் செவ்வாய்க்கிழமை என்பது முருகப் பெருமானுக்கும் உகந்த நன்னாள். சூரத்தனம் செய்பவர்களையும் அசுர குணம் கொண்டவர்களையும் தன் வேல் கொண்டு அழிப்பதில் வல்லவன் கந்தக் கடவுள் என்கிறது புராணம்.
எல்லாவற்றையும் விட முக்கியமாக, செவ்வாய்க்கிழமை ராகுகால வேளையில், அம்மனை வழிபடுவது, ஆயிரம் மடங்கு பலனையும் பலத்தையும் தரவல்லது. அதனால்தான், செவ்வாய்க்கிழமைகளில், ராகுகால வேளையில், துர்கைக்கு தீபமேற்றி வணங்குகின்றனர் பக்தர்கள்.
இன்று செவ்வாய்க்கிழமை. பங்குனி மாதத்தின் செவ்வாய்க்கிழமை. மேலும் பெளர்ணமி நன்னாள். இந்தநாளில், ராகுகால வேளையான மாலை 3 முதல் 4.30 மணிக்குள்ளான நேரத்தில், வீட்டுப் பூஜையறையில் விளக்கேற்றுங்கள். லலிதா சகஸ்ர நாம பாராயணம் செய்யுங்கள். துர்கை துதி முதலான ஸ்லோகங்களைப் பாராயணம் செய்யுங்கள். வீட்டின் தரித்திரங்கள் அனைத்தும் விலகும். சுபிட்சம் குடிகொள்ளும். தடைகள் அனைத்தும் விலகும். அமைதியும் ஆனந்தமும் நிறைந்து, குடும்பத்தில் நிம்மதி தவழும்!

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x