Published : 06 Apr 2020 02:32 PM
Last Updated : 06 Apr 2020 02:32 PM

வீட்டிலும் வாசலிலும் விளக்கேற்றுங்கள்!  - குடும்பத்தில் ஒற்றுமை தரும் பங்குனி உத்திர  பூஜை! 

பங்குனி உத்திர நாளில், மாலையில் விளக்கேற்றி, முருகப்பெருமானையும் ஐயப்ப சுவாமியையும் மனதார வேண்டிக் கொள்ளுங்கள். வீட்டு வாசலிலும் பூஜையறையிலும் விளக்கேற்றுங்கள். குடும்பத்தில் ஒற்றுமை மேலோங்கும். பிரிந்த தம்பதி ஒன்று சேருவார்கள். குடும்பத்தில் நிம்மதியும் ஐஸ்வர்யமும் தழைக்கும்.

தமிழ் மாதத்தின் 12வது மாதம் பங்குனி. அதேபோல் நட்சத்திரங்களில் 12வது நட்சத்திரம் உத்திரம். பங்குனியில் வருகிற உத்திரம் மகத்துவம் வாய்ந்தது என்கின்றன புராணங்கள். இன்று 6.04.2020 பங்குனி உத்திரம். இந்தநாளில், மாலையில் வீட்டு வாசலில் விளக்கேற்றுங்கள். பூஜையறையில் கோலமிட்டு விளக்கேற்றுங்கள்.
ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி... அந்தத் தடைகள் அகலும். கல்யாண மாலை தோள் சேரும். அப்படியொரு அற்புதமான பலனைத் தரும் நாளாக, வரத்தைக் கொடுக்கும் தினமாக சிலாகிக்கப்படுகிறது பங்குனி உத்திரம்.

ஸ்ரீராமபிரானுக்கும் சீதாபிராட்டிக்கும் பங்குனி உத்திர நாளில்தான் திருமணம் நடைபெற்றது ராமாயணம். ஸ்ரீராமரின் சகோதரர்களான பரதனுக்கும் மாண்டவிக்கும், லட்சுமணனுக்கும் ஊர்மிளைக்கும், சத்ருக்னனுக்கும் ஸ்ருதகீர்த்திக்கும் திருமணம் நிகழ்ந்தது கூட, ஓர் பங்குனி உத்திர நன்னாளில்தான் என்கின்றன புராணங்கள்!

இதைவிட முக்கியமாக, அப்பன் சிவனுக்கும் அம்மை உமையவளுக்கும் திருமணம் நடந்ததும், அவர்களின் மைந்தன் வெற்றிவேல் முருகனுக்கும் தெய்வானைக்கும் கல்யாணம் நடந்தேறியதும் பங்குனி உத்திர நன்னாளில்தான் என்கிறது புராணம்.

ஸ்ரீவில்லிபுத்தூரில் அவதரித்த ஆண்டாளுக்கும் ரங்கமன்னாருக்கும் திருமணம் நிகழ்ந்ததும் பங்குனி உத்திர புண்ணிய தினத்தில்தான். ஆக சைவத்திலும் வைஷ்ணவத்திலும் முக்கியமானதொரு வைபவமாக பங்குனி உத்திரம் கொண்டாடப்படுகிறது.

தெய்வானை முருக்கடவுளை மணந்தது பங்குனி உத்திரம். அதேபோல், முருகப்பெருமானை மணப்பதற்காக வள்ளி அவதரித்ததும் இந்த பங்குனி உத்திர நாளில்தான்!

ஐயன் ஐயப்ப சுவாமி, மணிகண்டனாக, பந்தளராஜாவின் மைந்தனாக மண்ணில் உதித்ததும் பங்குனி உத்திரத்தில் என்கிறது ஐயப்ப புராணம்.

அவ்வளவு ஏன்... கோபத்தில் நெற்றிக்கண்ணால், மன்மதனைச் சுட்டெரித்த சிவனாரின் கோபமும் கதையும்தான் நமக்குத் தெரியுமே. பிறகு ரதிதேவியின் கடும் தவத்தால் மனமிரங்கிய சிவனார், இறந்த மன்மதனை உயிர்ப்பித்துக் கொடுத்த உன்னத நாள்... பங்கு உத்திர நன்னாள் என்று பங்குனி உத்திரப் பெருமைகளைப் பறைசாற்றும் நூல்கள் ஏராளம்.

ஆகவே, பங்குனி உத்திரம் என்பது முக்கியமான தினம். கடவுளர்களின் திருமணங்கள் நடைபெற்ற புண்ணிய நாளான, பங்குனி உத்திர நாளில், விரதமிருந்து, மனதார வேண்டிக்கொள்ளுங்கள். கல்யாணத் தடை அகலும். திருமண வரம் தந்து அருளுவார்கள் தெய்வங்கள். குடும்பத்தில் ஒற்றுமை மேலோங்கும். பிரிந்த தம்பதி ஒன்று சேருவார்கள். எப்போது சண்டையும் சச்சரவுமாக இருக்கும் குடும்பத்தில் அமைதியும் ஆனந்தமும் குடிகொள்ளும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x