ஸ்ரீராமஜெயம் எழுதுங்கள்; இனியெல்லாம் ஜெயமே! 

ஸ்ரீராமஜெயம் எழுதுங்கள்; இனியெல்லாம் ஜெயமே! 
Updated on
1 min read

ராமபிரான் குறித்து சதாசிவ பிரம்மேந்திராள் சமஸ்கிருத பாடல் ஒன்று எழுதியுள்ளார்.


அந்தப் பாடலின் விளக்கத்தை ராமநவமி அன்று படித்தால், ஸ்ரீராமபிரான் நம் இல்லத்திற்கே எழுந்தருளினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. இந்த பிரார்த்தனையை மனஉருக்கத்துடன் செய்யுங்கள்.


ஏ நாக்கே! ராம என்னும் அமுதத்தை பருகுவாய். ராமன் எனும் சுவையை பற்றுவாய். பாவங்களின் தொடர்பை அது போக்கும். பலவிதமான பழரசத்தால் அது நிரம்பியது.


பிறப்பு, இறப்பு, அச்சம், துன்பம் இவற்றை அது போக்கும். நியமம், ஆகமம் என்னும் எல்லா சாஸ்திரங்களின் சாரமாக இருப்பது ராமநாமம்தான்! ராமனின் நாமமே இந்த உலகை பாதுகாக்கிறது. வெளி வேஷக்காரர்களையும் நல்லவர்களாக மாற்றுகிறது.


சுகர், சவுனகர், கவுசிகர் ஆகியோர் தம் வாயால் ராம அமுதத்தைப் பருகினார்கள். தூயவர்களாகி பரமஹம்சர்களின் ஆஸ்ரமங்களிலேயே அவர்கள் பாடினார்கள். அத்தகைய ராம அமுதத்தை நாங்களும் பருகுகிறோம்.


அதேபோல், இன்னொன்றும் சொல்கிறார்கள் ஆச்சார்யர்கள்.


சிலர் ஸ்ரீராம ஜெயத்தை வேலை கிடைத்தல், திருமணம், வீடு கட்டுதல் போன்ற வேண்டுதல்களுக்காக எழுதுகின்றனர். இவை நிறைவேறுவது மட்டுமின்றி, நமக்குள்ளேயே இருக்கும் கெட்ட குணங்களையும், புறப்பகை எனப்படும் வெளியில் இருந்து நம்மைத் தாக்கும் குணங்களையும் வெல்லும் சக்தியை இந்த மந்திரம் தரும்.


ராம என்ற மந்திரத்துக்கு பல பொருள் உண்டு. இதை வால்மீகி மரா என்றே முதலில் உச்சரித்தார். மரா என்றாலும், ராம என்றாலும் பாவங்களைப் போக்கக் கூடியது என்று பொருள்.


ராமனுக்குள் சீதை அடக்கம். அதனால் அவரது பெயரையே தனதாக்கிக் கொண்டாள். ரமா என்று அவளுக்கு பெயருண்டு என்கிறது சாஸ்திரம். ரமா என்றால் லட்சுமி. லட்சுமி கடாட்சத்தை வழங்குவது ராம மந்திரம்.


ராம மந்திரம் எழுதுவோருக்கும், சொல்வோருக்கும் எங்கும் எதிலும் வெற்றி உண்டாகும்.


ராமநவமி நாளில், ஸ்ரீராம ஜெயம் எழுதுங்கள். எல்லாம் ஜெயமாகும்!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in