

பல லட்சம் வருடங்களுக்கு முன்பே அரசனாக பிறந்தான். ஒரு சாதாரண மனிதனாக கஷ்டப்பட்டான். அப்படி ஒவ்வொரு கஷ்டத்திலும் உயர்ந்த நிலையில் நடந்து கொள்வது எப்படி என்று வாழ்ந்து காட்டினான். அதனால்தான் அவன் உதாரண புருஷன் என்று கொண்டாடப்படுகிறான். போற்றப்படுகிறான். வணங்கப்படுகிறான்.அவன்... ஸ்ரீராமன்.
அவன் தன் மனைவியை மட்டும் காதலிக்கவில்லை. தர்மத்தை காதலித்தான். அதனால்தான் தர்ம சங்கடங்கள் வரும்போதெல்லாம், தர்மத்துக்கு சங்கடங்களும் துயரங்களும் வரும்போதெல்லாம், ராமபிரான் அந்தத் தருணங்களில் என்ன செய்தான் என்று நமக்கு போதித்து அருளுகிறது ராமாயணம்.
பெற்ற தாய் தந்தையரிடத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டும்? தன்னை நம்பி வாழும் மக்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்? ஒரு அரசன் என்பவன் எப்படி இருக்க வேண்டும்? சகோதரர்கள் எப்படி இருக்க வேண்டும்? அந்த சகோதரர்களிடம் எப்படி நடந்துகொள்ளவேண்டும்? மனைவி எப்படி கணவனிடம் நடக்க வேண்டும்? கணவன் மனைவியிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்? நண்பர்களிடம், பெரியோர்களிடம் எப்படி நடந்து கொள்ளவேண்டும்? விரோதிகளிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்? இவை அனைத்துக்கும் வழிகாட்டுகிறார் ராமபிரான். வழிகாட்டுகிறது ராமாயணம்.
1884-ம் வருடம். ஆங்கிலேயர் தமிழகத்தை ஆண்டு வந்த நாட்கள். சென்னையை அடுத்த மதுராந்தகத்தில் இன்றும் இருக்கிற ஏரி நீர் நிரம்பியிருந்தது. ஏரியைப் பார்வையிட அப்போதைய கலெக்டர், ப்ரைஸ் என்பவர் வந்திருந்தார். அவர் கோயிலையும் பார்வையிட்டார். அந்த சமயத்தில் பெரு மழையொன்று பிடித்தது. தொடர்ந்து விடாமல் பெய்து வந்தது.
ஏரி உடைப்பு எடுத்துக் கொண்டு ஊர் அழிந்துவிடுமோ என்று மக்கள் பதறிக் கலங்கினார்கள். அன்று நள்ளிரவில் கலெக்டர் ஏரியைப் பார்வையிட்டார். பெய்யும் மழையில் ஏரி நிரம்பி மிக பயங்கரமாக காட்சி அளிக்க, நாடு விட்டு நாடு வந்து இங்கே இறந்து போய்விடுவோமோ என்று கலங்கித்தான் போனார் கலெக்டர்.
அருகில் கோயில் இருந்தது. அது ராமர் கோயில்.மனதால் வேண்டிக்கொண்டார். “எங்களை காப்பாற்று! ” என்று வருந்திப் பிரார்த்தித்தார்.
அன்று இரவு, கனவு. ஏரிக்கரையில் ராமரும் லட்சுமணரும் வில்லேந்தி காவலிருப்பதாக கனவு கண்டார். ஏரி உடையவில்லை. தண்ணீர் கட்டுக்குள் வந்தது. இதனால் ராமபிரானுக்கு ஏரி காத்த ராமர் என்றே திருநாமம் அமைந்தது.
சென்னை - விழுப்புரம் சாலையில் உள்ளது மதுராந்தகம். இங்கேதான் அந்த ஏரி இருக்கிறது. ஏரியைக் காத்த ராமபிரான் இன்றைக்கும் காத்துக்கொண்டிருக்கிறார்.
இன்று 2.04.2020 வியாழக்கிழமை, ராமநவமி. ஸ்ரீராமபிரான் அவதரித்த நன்னாள். இந்தநாளில், மனதால், ஆத்மார்த்தமாக, ஸ்ரீராமபிரானைத் தொழுவோம். வீட்டில் விளக்கேற்றி, சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் செய்து ராமரைப் பிரார்த்திப்போம்.
ஏரியைக் காத்த ராமர், இந்த அகிலத்தையே காத்தருள்வார்!